கண்ணுக்குப் புலப்படாத கதிர் வீச்சுக்களைச் சோதனை செய்யப் பயன் படும் நுண்ணோக்கி, எதிரொளிப்பு நுண்ணோக்கி (reflecting microscope) எனப் படும். சில நிலைகளில், இந்நுண்ணோக்கி சாதாரண ஒளி மூலம் ஒளியூட்டப் பட்ட பின்னர், புற ஊதாக் கதிர்களை ஆராயவும் பயனாகும். ஓர் எதிரொளிப்பு நுண்ணோக்கியின் அமைப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதன் பொருளருகு கருவியில் இரண்டு ஆடிகள் உள்ளன. ஒன்று குவி ஆடியாகவும், மற்றது குழி ஆடியாகவும் அமைந்துள்ளன. ஆய்வுப் பொருளிலிருந்து பெறப் படும் ஒளி, குழி ஆடியின் மூலம் சேகரிக்கப் படுகிறது. இக்கதிர்கள் குவிக்கப் படும் புள்ளிக்குச் சற்று மேற்பகுதியில், குவி ஆடியால் தடுக்கப் பட்டு, நுண்ணோக்கியினுள் முதன்மைப் பிம்பம் அமைந்துள்ள தளத்திற்கு மீண்டும் அனுப்பப் படுகின்றன. ஆடிகளின் வளைவுகளும், தொலைவுகளும் ஒளியியல் தொகுதியில் ஏற்படும் பிறழ்ச்சிகளை ஒன்றையொன்று ஈடு செய்யும் விதத்தில் தெரிந்தெடுக்கப் படுகின்றன. மேலும், இதில் பிம்பப் பண்புகள் அலை நீளத்தினைப் பொறுத்து அமைவதில்லை. பொருளருகு கருவியின் இந்நிறப் பிறழ்ச்சியற்ற பண்பின் மூலமே, இக்கருவி அகச் சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களுக்குப் பயன் படுகிறது எனலாம். ஆடிகளின் ஒளியியல் இடைவெளி, புற ஊதாக் கதிர்களுக்குச் சிறியதாகவும், அகச் சிவப்புக் கதிர்களுக்குச் சற்று அதிக நீளங் கொண்டதாகவும் அமைக்கப் படும். சில நிலைகளில் தேவைக்கேற்றவாறு ஓரிரு வில்லைகளும், சீரற்ற வளைவுடைய ஆடித் தொகுதியுமாகச் சேர்ந்த வண்ணமும், பொருளருகு கருவிகள் அமைக்கப் படுகின்றன. இக்கருவியமைப்பு பார்வைக்கு எளிதாக இருப்பினும், இதன் செயல் முறை மிகவும் நுணுக்கமானது. எனவே, ஒளி விலகல் நுண்ணோக்கிகளைப் பயன் படுத்த முடியாத போது, மட்டுமே இக்கருவிகள் கையாளப் படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சாதாரண ஒளியினைப் பயன் படுத்தும் போது மட்டும், மரபிலுள்ள விலகலுறும் குவிப்பான் மூலம் ஆய்வுப் பொருள் ஒளியூட்டப் படுகிறது. கண்ணருகு கருவியின் நிறப் பிறழ்ச்சி இம்முறையில் சிறப்புப் பெறாமையால், இவ்வமைப்புகளில் மரபுக் கண்ணருகு கருவிகளே மிகுதியாகப் பயன் படுகின்றன. ஆனால், அகச் சிவப்பு, புற ஊதாக் கதிர் வீச்சுகளைக் கடத்தும் தன்மை பெற்ற ஃப்ளுரைட், சிலிகா போன்ற பருப் பொருள்களால் கண்ணருகு வில்லைகள் செய்யப் படுகின்றன. பொருளருகு கருவியின் மூலம் குவிக்கப்பட்ட முதன்மைப் பிம்பம் நேரடியாக ஆராயப் படும் போது, இக்கண்ணருகு கருவிகள் தவிர்க்கப் படுகின்றன. இந்நுண்ணோக்கியில், ஆய்வுப் பொருளுக்கும், பொருளருகு கருவிக்குமிடையேயுள்ள தொலைவு மிக அதிகமாக அமைந்துள்ளது. எனவே, உலோக உலைகள் போன்ற சிறப்புக் கருவிகளை ஆராயவும், இது பயன் படுகிறது. மேலும், இந்நுண்ணோக்கிகள் புற ஊதா மற்றும் அகச் சிவப்பு நுண் நிற மாலை அளவியல் துறைகளிலும், நுண் ஒளி மின்னியலிலும் (micro photometry) மிகுதியும் பயனாகின்றன. இவற்றின் மூலம், வெவ்வேறு வகைப் புரோட்டீன்கள், நியூக்ளிக் அமிலங்கள் ஆகியனவும் ஆராயப் படுகின்றன. அகச் சிவப்பு நுண்ணோக்கி மூலம், சாதாரண ஒளி கடத்தாப் பொருள்களின் பண்புகள் ஆராயப் படுகின்றன. மாலிப்டினம், பவளம், மரப் பொருள்கள், சிவப்புச் சாயப் பொருள்கள் ஆகியவற்றை ஆராயவும், குற்றவியலில் பொய்ச் சாட்சியக் கருவிகளை ஆய்வு செய்யவும், இவ்வகை நுண்ணோக்கிகள் பயன் படுகின்றன. மேலும், காய்ந்த ஆய்வுப் பொருள்களின் வேதி அமைப்புகள் அகச் சிவப்பு நுண்ணோக்கியின் மூலம் ஆராயப் படுகின்றன. இவ்வகை ஆய்வுப் பொருள்களில், நீர்த் தன்மையின் மூலம் ஏற்படும் நிற மாலை அமைப்புகள் தவிர்க்கப் படுகின்றன. ஆகவேதான், இது சிறந்த முறையாக அமைந்துள்ளது. —சிவ. சேதுராமன்