கி.பி. 1852–ஆம் ஆண்டு, தென்பாண்டி நாட்டில் சேற்றூருக்கு அண்மையில் உள்ள முகவூரில் பிறந்தார். இவர் தந்தையார் இராமசாமிக் கவிராயர், மு.ரா. சுப்பிரமணியக் கவிராயரும், மு.ரா. கந்தசாமிக் கவிராயரும் இவருடன் பிறந்தவர்கள். இவர்களும் சிறந்த புலவர்களாக விளங்கினர். மு.ரா. அருணாசலக்கவிராயரின் பெரிய தந்தையார் கந்தசாமிக் கவிராயரும் அவர் மக்கள் மீனாட்சி சுந்தரக் கவிராயர். பழநிக் குமாரத் தம்பிரான் ஆகியோரும் புலவர்களாக விளங்கினர். எனவே, இவரது குடும்பமே கவிக்குடும்பமாகத் திகழ்ந்தது என்னுமாறு புலமைச் சிறப்புற்று விளங்கியது. மு.ரா. அருணாசலக் கவிராயர் திருவாவடுதுறை ஆதீனத்தில் நமச்சிவாய தேசிக மூர்த்திகளிடம் கல்வி கற்று, இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சி பெற்றார். வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் ‘கம்பராமாயண சாரம்’ எழுதியபோது, பல அரிய பாடல்களைத் தொகுத்துக் கொடுத்து உதவி புரிந்தார். சுப்பிரமணிய முதலியார் இயற்றிய நெல்லைச் சிலேடை வெண்பா என்னும் நூலை ஆராய்ந்து திருத்தம் செய்து உதவினார். அருணாசலக் கவிராயர் மு.ரா. சிறிது காலம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வேலை பார்த்த இவர், வேறெங்கும் ஊதியம் பெறுதற் பொருட்டு வேலை தேடியதில்லை. தம்மை மதிக்காதவரிடம் சென்று கொடை பெற்றதில்லை. உடன் பிறந்தவர் போல எண்ணிப் போற்றுகின்றவர்களிடம் மட்டுமே செல்லும் தன்மையினராய் விளங்கினார். பிறர் அதிகாரம் செய்யும் பணிகளில் ஈடுபடுவதில் சிறிதும் நாட்டமில்லாதவர். திருவாவடுதுறை ஆதீனம், இவரைத் தம் ஆதீனத்திற்கு ஆசிரியராக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட காலத்தில் அதனை ஏற்க மறுத்து விட்டார். இவர் அழுத்தமான தன்மதிப்புள்ள சிறந்த புலவராகத் திகழ்ந்தார். இவர் தமிழுக்குத் தொண்டாற்றுவதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார். இவர் சிவகாசித் தலபுராணம், சிவகாசிப் பதிற்றுப் பத்தந்தாதி, சிவகாசிக் கலிவிருத்த அந்தாதி மூலமும் உரையும், ஆறுமுக நாவலர் சரித்திரம், பர்வத வர்த்தனியம்மை பிள்ளைத் தமிழ் சேறைத் தவம் பெற்ற நாயகிப் பிள்ளைத் தமிழ், திருப்பரங்கிரிப் பிள்ளைத் தமிழ், திருப்பரங்கிரிப் பாமாலை, திருப்பரங்கிரிக் கலித்துறை அந்தாதி, திருப்பரங்கிரி அலங்காரம், திருப்பரங்கிரி மும்மணிக் கோவை, திருப்பரங்கிரி அநுபூதி, திருப்பரங்கிரிக் கோவை, ஒற்றைக் கடை விநாயகர் அந்தாதி, ஒற்றைக் கடை இரட்டை மணிமாலை, ஒற்றைக்கடை மும்மணிக் கோவை, திருக்குறள் புராண வசனம், திருக்குறள் திரட்டும் தெளிபொருள் வசனமும், திருக்குறள் மூலமும் தெளிபொருள் வசனமும், வேணுவனத்தல புராணம் குறிப்புரையுடன், காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் குறிப்புரையுடன், நெல்லை வருக்கக் கோவை, திருச்செந்தூர்ப் பிரபந்தத் திரட்டு, திருக்குற்றாலத் தல புராணம் குறிப்புரையுடன், திருக்குற்றாலக் குறவஞ்சி குறிப்புரையுடன், குறுக்குத் துறைச் சிலேடை வெண்பா போன்ற பல நூல்களை எழுதியும் பதிப்பித்தும் சிறந்த தமிழ்த் தொண்டாற்றினார். இவர் உரைநடையில் எழுதியுள்ள திருப்பரங்கிரிப் புராண வசனம் என்னும் நூல் பதினொரு சருக்கங்களைக் கொண்டது.மு.த. அருணாசல நாவலர், நா. தமிழிலுள்ள விரிவு நிகண்டு என்னும் நூலினை இயற்றியவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவ நல்லூரைச் சேர்ந்தவர். இவர் எழுதிய நிகண்டு நூல் எதுகை முறையில், விருத்தப்பாவினால் அமைந்துள்ளது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட செய்யுள்களைக் கொண்டது. இது சூடாமணி நிகண்டினை அடிப்படையாகக் கொண்டது. உலக வழக்குச் சொற்கள் பலவற்றைக் குறிப்பாக நெல்லைப் பகுதியில் வழங்கும் வழக்குச் சொற்களை இவர் தம் நூலில் சேர்த்துள்ளார். அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் நேராட்சிக்குட்பட்ட பகுதிகளுள் ஒன்று, முன்னர் வடகிழக்கு எல்லைப்பகுதி (North East Frontier Agency) என்று பெயர் கொண்ட இது, அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1972 சனவரி 21 ஆம் நாள் இது அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு. இந்திய ஒன்றியத்தின் நேராட்சிப் பகுதியாக்கப்பட்டது. அருணாசலப் பிரதேசம் இது, கொமங் (Komeng), திராப் (Tirap), சுபன்சிரி (Subansiri), சியாங் (Siang), உலோகித் (Lohit) ஆகிய மாவட்டங்களைக் கொண்டது. இதன் பரப்பளவு 81,426 ச.கி.மீ. அருணாசலப் பிரதேசத்தின் மக்கள்தொகை 6,28,050 (1981). இங்கு மக்கள்தொகை மிகக் குறைவு. ஒரு சதுரக் கிலோ மீட்டரில் 7 பேர் வாழ்கிறார்கள். அருணாசலப் பிரதேசத்தின் (Arunachal Pradesh) நிலப்பரப்பில் 60 விழுக்காடு காடுகள் நிறைந்துள்ளன. மக்கள் தொகையில் 18.5 விழுக்காட்டினர் பயிர்த் தொழில் செய்கின்றனர். 1970–இல் 2 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்யப்பட்டது. அதில் 32,600 ஏக்கர் நீர்ப்பாசன வசதியைப் பெற்றிருந்தது. நெல், இரப்பர், (Rubber), காபி, தென்னை, கமுகு, பழவகைகள், நறுமணப் பொருள்கள் போன்றவை பயிரிடப்படுகின்றன. இங்குக் கூட்டுறவு நிறுவனங்கள் ஏறத்தாழ 100க்கு மேல் இயங்குகின்றன. அருணாசலப் பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகர் (Itanagar) என்பதாகும். அருணாசல புராணம், சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய புராணமாகும். அருணாசலம் என்பது திருவண்ணாமலையின் மறு பெயராகும். இது அருணை என்றும், ஆதி அருணாசலம் என்றும், சோதி மலை என்றும் குறிக்கப் பெறும். அருணாசலபுராணம் என்னும் இந்நூல் திருவண்ணாமலைத் தலத்தின் சிறப்புரைக்கும் நூலாகும். இந்நூலாசிரியர் சோணாட்டில் திருவெண்காட்டிற்கு அண்மையில் உள்ள ‘பூந்தாழை’ என்னும் ஊரினர். கார்காத்த வேளாண் மரபினராகிய இவர் கி.பி. 17, 18–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் எனக் கருத இடமுண்டு. இளமையில் தமிழ், வடமொழி இலக்கண இலக்கியங்களைக் கற்றுச் சிறந்து விளங்கினார். தருமபுர ஆதினத்தில் சைவ சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இவர் சைவ சமயத்தில் பழுத்த ஈடுபாடு கொண்டு விளங்கியமையால் ‘சைவ கவி’ என்றும், சைவ எல்லப்ப நாவலர் என்றும் அழைக்கப்பெற்றார். நாவன்மை மிக்கு விளங்கியமையால் நாவலர் என்னும் அடைமொழி சேர்த்து வழங்கப் பெற்றார். இவர் இயற்றிய பிற நூல்கள் திருவருணைக் கலம்பகம், திருவெண்காட்டுப் புராணம், செவ்வந்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், தீர்த்த கிரிப்புராணம், திருச்செங்காட்டங்குடிப் புராணம் முதலியன. இவர் உருவாக்கிய தல உரைப்பதோடு புராணங்கள் தலப்பெருமையினை படிப்போர்க்குப் பல படிப்பினைகளையும் அறிவிக்க வல்லவை; ஒன்பான் சுவையும் மிக்கவை. இவருடைய ‘திருவருணைக் கலம்பகம்’ கலம்பகப் பிரபந்தங்களுள் சிறந்ததாகப் புலவர்களால் கருதப்படுகிறது. “சைவத்தின் மேற் சமயம் வேறில்லை. அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்” என்று அழுத்தமாக உரைப்பதால் இவரது ஆழ்ந்த சைவ சமயப்