கண்ணன் தம் அவதாரப் பணிகளை நிறைவேற்றி வைகுந்தத்திற்குத் திரும்ப ஆயத்தமாக இருந்தபோது, அவன் உத்தவருக்குக் கூறிய மெய்ஞ்ஞானச் செய்திகளைக் கொண்டதே உத்தவ கீதை. இக்கீதை வியாசபாகவதம் 11–ஆம் கந்தத்தில் 19 அத்தியாயங்களில் (10 முதல் 29 வரை) இடம் பெற்றுள்ளது. இது கண்ணனுக்கும் உத்தவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலாக அமைந்துள்ளது. இக்கீதை பெரும்பாலும் பகவத்கீதையின் போக்கில் உள்ளது. உத்தவர் என்பவர் சிறந்த யோகி; கண்ணனின் பெரும் பக்தர்; நண்பர்; அறிவுரையாளர்; சிறிய தந்தையின் மகன்; வயதில் கண்ணனை விட முதியவர். அவதாரப்பணிகள் முடிந்ததும் பிரமன் தேவர்களுடன் வந்து கண்ணனை வைகுந்தம் எழுந்தருள வேண்டினான். கண்ணன் பிரமனை நோக்கி, ‘யாதவகுலத்தில் சில சீர்திருத்தங்கள் செய்த பின்னர் வருவேன்’ எனக் கூறிவிட்டு, அங்கிருந்த ஆயர்குல முதியோர்களைப் பார்த்து, ‘இது துவாபரயுகம் முடியும் நேரம். இனிக் கலிபுருடன் ஆட்சி வரும்; பலவகையான தீமைகள் நேரலாம். அப்போது துவாரகையைக் கடல் கொள்ளும். ஆகவே நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுப் பிரபாசன் என்ற புண்ணியத் தலத்தை அடையுங்கள்’ என அறிவுறுத்தினார். அப்போது அங்கிருந்த உத்தவர் கண்ணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, ‘கண்ணா! உன்னுடன் அடியேனும் வைகுந்தம் வருதற்கு அருள் செய்வாயாக’ என வேண்டினார். கண்ணன் உத்தவரிடம் குடும்பப்பற்றை விட்டுப் பதரிகாசிரமம் சென்று, வானப்பிரத்தராகித் தவம் புரிந்து உரிய வேளை வந்ததும் வைகுந்தம் வரலாம் என்று அறிவுறுத்தினார். இவ்வறிவுரை ஆன்மாவின் இயல்பு, அதன் நோக்கம், அந்நோக்கத்தை அடையும் நெறிமுறை என்னும் வகையில் அமைந்து, உத்தவ கீதையாக உருப்பெற்றுள்ளது. வீடு பயக்கும் நெறிகளான ஞான நெறி, கன்ம நெறி, பக்தி நெறி போன்ற அனைத்தும் தம்மையே வந்து அடைகின்றன என்றும், ஐம்புலன்களை அடக்கித் தன்னலமாகிய வினைப்பலன்மீதுள்ள பற்றினை அறவே நீக்கி, இறைவனாகிய தம்மிடம் முழுமையாக ஒப்படைத்துச் சரணடைகிற ஆன்மா, இவ்வுலகில் மெய்மறந்த இன்ப வாழ்வு பெற்று, பின்னர் பருஉடலை நீத்து வைகுந்தத்தில் தம்மோடு ஒன்றிப் பேரின்பத்தில் திளைக்கும் என்றும் கண்ணன் உத்தவரிடம் கூறுவதே இக்கீதையின் உட்பொருள் ஆகும். என்.எஸ்.தா.