இவான்சு, சர் ஆர்தர் சான்
ivāṉcu, car ārtar cāṉ
இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்.
இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர். இவான்சு (Evans, Sir Arthur John) கி.பி. 1851–ஆம் ஆண்டு சூலை மாதம் 8–ஆம் நாள் எர்ட்போர்டுசையரிலுள்ள (Herdfordshire) நாசு மில்சு (Nasu Mills) என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் சர் சான் இவான்சு. ஆரோ (Harrow), ஆக்சுபோர்டு, கோட்டிங்கன் (Gottingan) பல்கலைக்கழகங்களில் இவர் கற்றார். பல ஆண்டுகள் பால்கனில் வாழ்ந்த இவர், 1882–ஆம் ஆண்டு ஆக்சுபோர்டுக்குத் திரும்பினார். அங்கு 1884–இல் ஆசுமோலியன் அருங்காட்சியகக் காப்பாளரானார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1909–இல் வரலாற்றுக்கு முந்தைய கால வரலாற்றைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவான்சு முதலில் நாணயவியலிலும் முத்திரைகளில் காணப்படும் எழுத்துகளைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டினார். கிரீட்டு (Crete) நகரைப் பற்றி 1894–ஆம் ஆண்டு ஆய்வு செய்தார். மத்தியதரைக் கடற் பகுதியில் இருந்த மைசீனிய நாகரிகம் (Mycenean Civilization) கிரீட்டில்தான் முதன்முதலில் தோன்றியது என்னும் கருத்தினை இவர் வெளியிட்டார். கிரீட்டிலுள்ள நாசசில் (Knossas) 1899–இல் தமது சொந்தச் செலவில் அகழாய்வினை மேற்கொண்ட இவர், அங்கு மினோசு அரசரின் அரண்மனையைக் கண்டுபிடித்தார். அவ்வரண்மனை 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்தது. திசியசு என்பவர் தமது நூலில் கூறும் மினோசு என்ற அரசர் கட்டிய வியத்தகு அரண்மனை இதுவே என்று இவர் கருதினார். இங்கு நடத்தப்பட்ட அகழாய்வு தொடர்ந்து 25 ஆண்டுகள் நடைபெற்றது. அகழாய்வில் செப்புக்காலப் பண்பாட்டின் கூறுகள் பெருமளவில் கிடைத்தன. நாசசில் 3,000–க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ள களிமண் பட்டிகைகளை (Teblets ) இவச் கண்டெடுத்தார். இவ்வெழுத்துகளைப் படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியுற்ற போதிலும், இவ்வெழுத்துகள் கிரேக்க மொழியைச் சார்ந்த வரிவடிவ எழுத்து (Lenear B) என்ற கூற்றினை இவர் வலியுறுத்தினார். இந்தக் காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் சித்திர எழுத்துகளையும் பயன்படுத்தியுள்ளனர் என் இவர் கூறினார். மினோவன் நாகரீகம் கி.மு. 2,000–இல் திடீரென்று அழிவுறும் வரை, இப்பகுதியில் மக்கள் நாகரிக வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தனர் என இவர் கூறினார்.
இவான்சு 1914 முதல் 1919 வரை பழம் பொருள் ஆய்வுக் கழகத்தின் தலைவராகவும் 1916 முதல் 1919 வரை பிரிட்டிசுக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். ‘மினோவா எழுத்துகள்’ (Scripta Minoa. Vol. 1, 19–9, Vol. 2, 1952 ed by J.C. Myres), மினோசின் அரண்மனை (The Palace of Minos–1930–1931) போன்ற நூல்கள் இவரால் எழுதப்பட்டவை. ஐரோப்பிய, கீழ் மத்தியதரைக்கடல் நாடுகளின் வரலாற்றுக்கு முந்தைய கால வரலாற்றை அறிய இவரது ஆய்வுகள் பெரிதும் உதவிபுரிகின்றன. இலான்சின் தொல்லியல் பணியைப் பாராட்டி 1911–ஆம் ஆண்டு பண்பார் பெருந்தகை (Knight) என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவான்சு 1941–ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 11–ஆம் நாள் ஆக்சுபோர்டுக்கு அருகில் உள்ள இயோல்பரியில் (Youlbury) காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 458)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yugbzf8x/
தமிழ்“இவான்சு, சர் ஆர்தர் சான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yugbzf8x/APA
Oliyon Research. (2026). இவான்சு, சர் ஆர்தர் சான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yugbzf8x/MLA
"இவான்சு, சர் ஆர்தர் சான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yugbzf8x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment