அடிநிலை உறுப்பு
aṭinilai uṟuppu
மொழியில் வழங்கும் ஒலியன்கள் சொல்லின் எல்லா இடங்களிலும் (முதல், இடை, கடை) ஒரே மாதிரியாக வேறுபட்டு வருவதில்லை.
மொழியில் வழங்கும் ஒலியன்கள் சொல்லின் எல்லா இடங்களிலும் (முதல், இடை, கடை) ஒரே மாதிரியாக வேறுபட்டு வருவதில்லை. சொல்லுக்கு முதலில் ஒலிப்பு ஒற்றுமை உடைய இரண்டு ஒலியன்கள் வந்து, சொற்களை வேறுபடுத்திக் காட்டினால், நடுவிலோ கடைசியிலோ அவற்றுள் ஓர் ஒலியன் மட்டுமே வருமானால், அங்குச் சிறப்புக் கூறுகள் ஒன்றில் சமன் (neutralisation) ஏற்பட்டுவிட்டது என்பது பொருள், எடுத்துக்காட்டாக, ஒலிப்புடைய வல்லொலியும் (b,d போன்றவை), ஒலிப்பில்லா வல்லொலியும் (p,t போன்றவை) சொல்லுக்கு முதலில் வந்து, ஒலியனாகச் செயல்பட்டுச் சொல்லுக்கு நடுவில் அந்த இரண்டு ஒலியில் ஏதாவது ஓர் ஒலி மட்டுமே வருகிறது என்று வைத்துக்கொண்டால், அங்கு ஒலிப்பு உடைமையோ, ஒலிப்பு இன்மையோ முக்கியம் இல்லாமல் போய்விடுகிறது. அதாவது, ஒலிப்புக் கூறும் (voicing), ஒலிப்பில்லாக் கூறும் (voiceless) சமனாகிவிடுகின்றன. எனவே, இங்கு ஒலிப்பிலா ஒலி மட்டும் வந்தாலும், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஒலிப்புடைமையும் ஒலிப்பு இன்மையும் முக்கியம் இல்லை என்று சுட்டுவதற்கு உரோமன் எழுத்தில் பெரிய எழுத்தைப் (Capital letter – P) பயன்படுத்துவார்கள். அதற்கு அடிநிலை ஒலியன் (archiphoneme) என்பது பெயர்.
ஆங்கில மொழியில் சொல்லுக்கு முதலில் ஒலிப்பிலா வல்லொலிகளும் ஒலிப்புடைய வல்வொலிகளும் ஒலியனாகச் செயல்பட்டாலும், (pit-குழி; bit-‘சிறு’ தாள்) சொல்லுக்கு நடுவில் குறிப்பாக ‘ஸ்’ (S) என்ற ஒலிக்குப் பிறகு ஒலிப்பிலா வல்லொலி (spit -‘துப்பு’) மட்டுமே வரும்; அங்கு ஒலிப்புடைய வல்லொலி வருவதில்லை. எனவே, ‘ஸ்’ என்னும் ஒலிக்குப் பிறகு ‘P’ என்னும் பெரிய எழுத்தில் எழுதி, அடிநிலை ஒலியன்தான் அங்கு வருகிறது என்று குறிப்பிடுவார்கள்.
தமிழில் ஆய்தம் என்பது அடிநிலை ஒலியனாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஆய்தமும் அதனை அடுத்து வல்லொலியும் இரட்டை உரசொலியாக உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஊகித்துக் கூறியது, இன்றைய மொழியியல் அறிஞர்கள் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. உரசொலியின் இடம் பின் வரும் வல்லொலியின் இடத்தை ஒட்டியது. எனவே, ஆய்தம் உரசொலித் தன்மையை மட்டும் குறிப்பதால், கடைநா ஒலி, இடைநா ஒலி போன்ற கூறுகள் சமனாகிவிடுகின்றன. எனவே, ஆய்தம் அடிநிலை ஒலியனின் குறியீடாக இன்று தமிழ் மொழியியல் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.
அடிநிலை உறுப்பு (Archisegment) இப்பொழுது ஒலியன் நிலையில் மட்டுமே பேசப்படுகிறது. இந்தக் கருத்தை முதன் முதலில் துரூபட்சுகாய் (Trubetzcoy) என்ற செக்கோசுலோவிய நாட்டு அறிஞர் வெளிப்படுத்தினார்.செ.வை.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 245)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yses4t3j/
தமிழ்“அடிநிலை உறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yses4t3j/APA
Oliyon Research. (2026). அடிநிலை உறுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yses4t3j/MLA
"அடிநிலை உறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yses4t3j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment