‘உபய’ என்றால் இரண்டு என்றும் ‘விபூதி’ என்றால் செல்வம் (உடைமை) என்றும் பொருள்படும். ஆதலின், உபய விபூதி என்பது இரண்டு உடைமைகளைக் குறிக்கும். விண்ணுலகு, மண்ணுலகு ஆகியவையே இவ்விரு உடைமைகள். இவற்றிற்குத் தலைவன் நாராயணன் ஆவான். அவனுடைய நித்திய விபூதியாக விண்ணுலகும் இலீலா விபூதியாக மண்ணுலகும் குறிக்கப்படுகின்றன. நித்திய விபூதி என்றும் இருப்பது, இலீலா விபூதி அவனுடைய திருவிளையாடல்களுக்கு உரியது. விண்ணுலகு பரமபதம் என்றும் திருநாடு என்றும் சுட்டப்படும். ஆதலின், அது எல்லா நாடுகளிலும் சிறந்த நாடு என்று சொல்லப்படுகிறது. அது முடிவற்ற நலன்களை உடையதாய் இலங்குவதாதலின், ‘நலமந்தமில்லதோர் நாடு’ என்றும் புகழ்ந்து பேசப்படுகிறது. அதற்குத் ‘திரிபாத் விபூதி’ என்றும் பெயரும் உண்டு. மண்ணுலகு காற்பகுதியாகவும், விண்ணுலகு முக்காற்பகுதியாகவும் அமைந்திருத்தலின் அது முறையே ‘பாத விபூதி’ என்றும் ‘திரிபாத் விபூதி’ என்றும் கூறப்படுகிறது. விண்ணுலகு ஐந்து பெரும் சக்திமயமானது; பிறரால் உண்டாக்கப்படாதது; சுத்த சத்துவ குணமாய் இருப்பது; எல்லையற்ற இன்பமயமானது; ஒளிமயமாய்த் திகழ்வது; ஞானத்தையும் இன்பத்தையும் விளைவிப்பது; அங்குக் காலத்தால் உண்டாகும் மாற்றங்கள் இல்லை. அது மண்ணுலகில் பிறந்து உலகியற் சேறு கழிந்து வீடு அடையும் உயிர்கள் (முத்தர்கள்), ஒரு நாளும் பிறவாத உயிர்கள் (நித்தியர்) ஆகியோருக்கு உறைவிடம் ஆகும். அங்குப் பெருமானும் பிராட்டியும் நித்திய சூரிகளும் (அயர்வறும் அமரர்களும்) உறைகின்றனர். அங்கு உறைவோர்க்கு மூப்பு இல்லை; அவர்கள் என்றும் இருபத்தைந்து அகவையினராகவே இருப்பர். மண்ணுலகு ‘இருள்தரு மாஞாலம்’ என்று குறிக்கப்படும். இது துன்பத்திற்கும் அறியாமைக்கும் இடமாகுமாதலின் இப்பெயர் பெற்றது. வினையினால் கட்டுண்ட உயிர்கள் (பக்தர்கள்) பிறந்து உழலும் இடம் மண்ணுலகு ஆகும். மண்ணுலகு சத்துவக் குணக்கலப்புடையதாய் (மிச்சிர சத்துவக் குணமயமாய்) இருப்பது; பிறந்து உழல்பவர் அறிவுக்கும் இன்பத்துக்கும் மறைப்பை உண்டாக்குவது; திரிபுணர்ச்சியைத் தோற்றுவிப்பது. இவ்வுலகு ஐம்புலன், ஐம்பொறி, ஐந்து கருமேந்திரியம், ஐம்பூதம், பிரகிருதி, மான், அகங்காரம், மனம் என்னும் இருபத்துநான்கு தத்துவங்களாய் இருப்பது என்பது வைணவ சமயக் கோட்பாடு ஆகும். தெ.ஞா.