<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தாவர உலகில் காணப்படும் செடிகள் பல வகைப் பட்டவை. நுண்ணோக்கி மூலம் பார்க்கக் கூடிய பாக்டீரியா முதல் 100 மீ. உயரம் வளரக் கூடிய ஊசியிலை மரங்கள் வரை யாவும் தாவரயினங்களே. இத்தாவ- ரங்களைப் பலவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளனர். படிமலர்ச்சி அடிப்படையில் அமைந்துள்ள எங்ளர் வகைப்பாடு பின் வருமாறு காணப்படும். தாலோஃபைட்டா. தாவர உடல் வேர், இலை, தண்டு எனும் பாகுபாடு அற்றது. இனப் பெருக்க உறுப்புகள் ஒரு செல்லால் ஆனவை. இத்தொகுதி ஆல்காக்கள், பூஞ்சைகள் என இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஆல்காக்கள். பாசிகள் என்னும் நீர் வாழ் செடிகளான இவை, பச்சையத்தைப் பெற்றுள்ளமையால், தங்களுடைய உணவை ஒளிச் சேர்க்கை மூலம் தயாரித்துக் கொள்ளும். உயர் வாழ் தனி இனமான இவற்றைக் கடல் நீர், நன்னீர் நிலைகளில் மிகுதியான அளவில் காணலாம். இவற்றில் பச்சை, பழுப்பு, சிவப்புத் தங்கம், நீலப் பசுமை போன்ற நிறப் பாசி வகைகள் உண்டு. பூசணங்கள். பசுமையற்ற சிறு செடியினங்களாகிய இவை, தங்களுக்குத் தேவையான உணவைப் பிற உயிரினங்களிடமிருந்தோ, கரிமப் பொருள்களிலிருந்தோ பெற்றுக் கொள்ளும். இவற்றை ஒட்டுண்ணிகள் என்றும், சாறுண்ணிகள் என்றும் கூறுவர். பூசணங்கள் ஒளி குறைந்த ஈரப் பாங்கான இடங்களில் காணப்படும். எ-டு. பூசணக் காளான். நாய்க் குடை முதலியன. பிரையோஃபைட்டா. இச்செடிகளின் உடல், தண்டு, வேர், இலை போன்று பாகுபாடு அற்றதாக இருந்தாலும், தாலோஃபைட்டாவை விடச் சற்று மேம்பாடுடையதென்று கூறலாம். இனப் பெருக்க உறுப்புகள் பல செல்களால் ஆனவை. வாழ்வதற்கு நிலமும், நீரும் தேவைப்படும். இவை ஈருடகத் தாவரங்கள் (amphibious) எனப்படும். இப்பிரிவில் இரண்டு துணை ப்பிரிவுகளுண்டு. அவை ஈரல் தாவரங்கள் (liver worts), மாஸ் (moss) என்பவை, இவை யாவும் பொதுவாக, ஈரப் பாங்கான பகுதிகளிலேயே காணப்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> டெரிடோஃபைட்டா. இப்பிரிவைச் சேர்ந்த செடிகளுக்குத் தண்டு, வேர், இலை போன்ற உறுப்புகளுண்டு. பொதுவாக, இத் தாவரங்கள் மித வெப்பமும், குளிரும் உடைய பகுதிகளில் காணப்படும். காற்றறைத் திசுக்கள் (vascular tissue) கொண்ட இவை, விதைகள் (spores) மூலம் இனப் பெருக்கம் செய்கின்றன. பெரணிகள் எனப்படும் செடிகள் இப்பிரிவைச் சேர்ந்தவை. ஜிம்னோஸ்பர்ம்கள். இவற்றை விதை மூடாத் தாவரங்கள் என்பர். பெரும்பாலான, மிக உயரமான, வயதான மரங்கள் இப்பிரிவைச் சேர்ந்தவை. கலிஃபோர்னியாவில் உள்ள பைனஸ் அரிஸ்டேடா (Pinus aristeta), என்ற மரத்திற்கு வயது 4600 ஆண்டுகள் என அறியப் பட்டுள்ளது. மேலும், வட அமெரிக்காவின் தேசியப் பூங்காவிலுள்ள சீகோயா எனப்படும் செம்மரங்களும் மிக உயரமானவை; வயதானவை. இவற்றில் ஒன்றான கிரான்ட் ஷர்மன் என்னும் மரம் 90 மீ. உயரம், 30 மீ. அடிச் சுற்று, 3500 ஆண்டு வாழ்காலம் கொண்டதாகும். பெரும்பாலான விதை மூடாத் தாவரங்கள், பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் ஊசியிலை மரங்களும் அடங்கும். ஆன்ஜியோஸ்பர்ம்கள். இப்பிரிவைச் சார்ந்த செடிகள் படிமலர்ச்சியால் மேம்பாடடைந்தவை. இவற்றின் இனப் பெருக்க உறுப்புகளான, மகரந்தம், சூல் முதலியன மலரில் காணப்படும். மகரந்தச் சேர்க்கை காரணமாகத் தோன்றிய விதைகள், கனியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். வாழ்நாள் அடிப்படையில் பூக்கும் செடிகள், நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பருவச் செடிகள் (annuals), ஓராண்டு அல்லது ஒரு பருவத்தில் தங்கள் வாழ்க்கைச் சுழலை (முளைத்தல், வளர்தல், மலர் தோற்றுவித்தல், மகரந்தச் சேர்க்கை, விதை, கனி உருவாக்குதல், விதை பரவுதல்) முடித்துக் கொள்ளும். எ-டு. சூரிய காந்தி, சின்னியா, அவரை, உளுந்து. இவற்றுடன் நெல், கோதுமை, சோளம் போன்ற புல் வகைகளும் அடங்கும். இரு பருவச் செடிகள் (biennials) இரு பருவங்கள் உயிர் வாழும். முன் பருவத்தில் தழைப் பகுதி வளர்ச்சி நடை பெறும். இலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு சேமித்து வைக்கப்படும். இரண்டாம் பருவத்தில், சேமித்து வைக்கப்பட்ட உணவைக் கொண்டு மஞ்சரி, கனி, விதைகள் முதலியன தோற்றுவிக்கப் படுகின்றன. பெருவாரியான கிழங்கு வகைகள், இப்பிரிவைச் சேர்ந்தவையாகும். எ-டு. முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெங்காயம், பூண்டு முதலியன. பல் பருவச் செடிகள் (perennials) பல ஆண்டு வாழ்வன. ஒவ்வோர் ஆண்டும், மலர், விதை, கனிகளைத் தோற்றுவிக்கும். இவ்வகையைப் பாலிகார்பிக் (polycarpic) என்றும் கூறுவர். எ.டு. ஆல், அரசு, மா, புளி முதலியன. 156 மீ. உயரமான யூகலிப்டஸ் அமிக்டாலினா (Eucalyptus amygdalina) என்னும் ஆஸ்திரேலிய மரம் உலகிலேயே மிக உயரமானது. ஆஃப்பிரிக்காவைச் சேர்ந்த அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia digitata) என்னும் மரத்தின் வயது 5000 ஆண்டுகள் எனவும், இதுவே மிக முதிய உயிரினம் எனவும் கருதப்படுகிறது. பல்லாண்டுச் செடிகள் (multiennials), இச்செடிகள் பல்லாண்டு வாழ்ந்தாலும், தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையே பூக்கவும், காய்ச்கவும் செய்கின்றன. இச்செடிகளில் பூத்தல் என்பது, அச்செடியின் இறுதியைக் குறிக்கும். எ-டு. மூங்கில், தாளிப் பனை, இரயில் கற்றாழை முதலியன. 30 ஆண்டுகள் வாழும் மூங்கில் பூத்தவுடன் மடிந்து விடும். தாளிப் பனைகளும் 70–80 ஆண்டு உயிருடனிருந்து, பிறகு மிகப் பெரிய மஞ்சரியைத் தோற்றுவித்து, அது காய்ந்தபிறகு, மடிந்து விடும். இரயில் கற்றாழையும் 50–100 ஆண்டு வாழ்ந்து, பூத்த பிறகு, மடிந்து விடும். பெரும்பாலான செடிகள் உறுதியான தண்டுடன் காணப்பட்டாலும், சில மென்மையான தண்டுகளைக் கொண்டிருக்கும். அவற்றில் பல வகையுண்டு. நெருஞ்சி, தரைப் பசலை போன்றவை நிலத்தில் படர்ந்து வளரக் கூடியவை. சில செடிகள், ஒரு தண்டு கொண்டவை. தண்டின் கணுக்களிலிருந்து, வேர்கள் தோன்றும். எ-டு. பொடுதலை, ஆரை, சர்க்கரை வள்ளி, வல்லாரை முதலியன. பற்றுக் கோடான தாவரங்களின் மீது படர்ந்து வளரும் இவற்றில், இரு வகையுண்டு, 1) பற்றுக் கொடிகளில் (climbers), பற்றுக் கம்பிகளும் (tendril) பற்று வேர்களும் காணப் படும். எ-டு. மிளகு, வெற்றிலை, புடல், பிரண்டை, முடக்கத்தான். 2) சுழல் கொடிகள், பற்றுக் கோடான செடியைப் பற்றிக் கொள்ளத் தண்டையே பயன் படுத்துகின்றன. எ-டு. அவரை, சங்குப் பூச்செடி, வள்ளிக் கொடி, செடிகள் இடம் விட்டு இடம் பெயர்வதில்லை. அதனால், அவற்றின் உடலமைப்பு, திசுக்களின் அமைப்பு, செயலியல் முதலியன ஏற்றவாறு அமைந்துள்ளன. செடிகளின் வேர், நிலத்திலிருந்து சவ்வூடு பரவுதல் மூலம் உட்கொண்ட நீரை, காற்றறைத் திசுக்கள், குறிப்பாக கட்டைத் திசு (xylem) மூலம் இலைக்குக் கடத்திச் செல்லும். அங்கு ஒளிச் சேர்க்கை நடை பெறுவதால், கரிமப் பொருள்கள் தோன்றுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உணவு, ஃப்ளோயம் (phloem) மூலம், சேமிப்புப் பகுதிக்குக் கடத்திச் செல்லப்படுகிறது. இவையே, மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன. மிகவும் எளிதாகக் காணப்படும் தாவரம், ஒரே இடத்தில் வளர்ந்து, தனக்குத் தேவையான செயல்களை நடத்திக் கொள்வதற்கு ஏற்ப அதன் உறுப்புகளும் அமைந்துள்ளன. வெப்ப மண்டலக் காடுகளில் ஏற்ற சூழ்நிலை காணப்படுவதால், சில தன் உணவாக்கித் தாவரங்கள் நிலத்தோடு தொடர்பின்றி, மற்றொரு செடியின் கிளையிலோ, அடி மரத்திலோ வளரும் தன்மை கொண்டுள்ளன. இவற்றைத் தொற்றும் தாவரங்கள் (epiphytes) என்பர். வளரத் தேவையான இடம், மரம், செடிகளில் இருந்தால் போதும். இவற்றில், வெலாமன் (velamen) வேர்கள் காணப்படும். அவை காற்றில் ஊசலாடிய நிலையில் அமைந்து, வளி மண்டலத்திலுள்ள ஈரப் பசையை ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளன. பசுங் கனிகங்கள் அற்ற செடிகள், தங்களுக்குத் தேவையான ஆற்றலைப் பிற உயிரினங்களிடமிருந்தோ, கரிமப் பொருள்களிலிருந்தோ பெறுகின்றன. இவற்றை வேற்றுண்ணிகள் (heterotrophs) என்பர். உயிரினங்களிலிருந்து, தம் தேவைகளைப் பெற்றுக் கொண்டால், அவற்றை ஒட்டுண்ணிகள் (parasites) என்பர். அவை, பெரும்பாலும் நோய்த் தோற்றுவிப்பான்களாகவும், ஓம்புயிருக்கு (host) ஊறு விளைவிப்பனவாகவுமே இருக்கும். எ-டு. பாக்டீரியா, பூசணம், புல்லுருவி, சந்தனம் முதலியன. ரஃப்லீஷியா எனப்படும் மலேசிய வேர் ஒட்டுண்ணி உலகிலேயே பெரிய மலரைத் தோற்றுவிக்கிறது. இம்மலரின் மொட்டு புவியைப் பிளந்து வெளி வந்து, மலரும் போது, 1 மீ. குறுக்களவு இருக்கும். சில வேற்றுண்ணிகள் கரிமப் பொருள்களைச் சிதைத்துத் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைப் பெறுகின்றன. இவை சாறுண்ணிகள் (saprophytes) எனப்படும். எ. டு. நாய்க் குடை, ரொட்டிக் காளான், சில பாக்டீரியாக்கள். இவற்றை இயற்கையின் தோட்டி (nature's scavenger) என்பர். இவை, சூழ்நிலையை மாசுபடுத்தக் கூடிய கரிமப் பொருள், நச்சுப் பொருள்களைச் சிதைத்து எளிமையான கனிமப் பொருள்களாக மாற்றுகின்றன. தாவர உலகில் ஊன் உண்ணும் தாவரங்களின் வாழ்க்கை முறை வியப்பானது. இத்தாவரங்கள் வாழும் இடங்கள் சதுப்பு நிலமாகக் காணப்படுவதாலும், அங்கு, பாக்டீரியா இல்லாமையாலும், நைட்ரேட் உப்பு இருப்பதில்லை. தாலர வளர்ச்சிக்கு இன்றியமையாத புரதத் தயாரிப்புக்கு, நைட்ரேட் அயனிகள் மிகவும் தேவை. அதனால், ஊண் உண்ணும் தாவரங்கள், தங்களுக்குத் தேவையான புரதத்தைப் பூச்சிகளைப் பிடித்துக் கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்கின்றன. இவற்றின் இலைகளும் ஏற்றவாறு அமைந்துள்ளன. இலைகளில் பச்சையம் உள்ளமையால், அவை ஸ்டார்ச்சைத் தயாரித்துக் கொள்ள முடியும். இங்ஙனம் ஊண் உண்ணும் தாவரங்கள் பகுதி தன்னுணவாக்கிகளாகவும், பகுதி வேற்றுண்ணிகளாகவும் செயல்படுகின்றன. —தி. ஸ்ரீகணேசன் நூலோதி. P. Maheswari and R. N. Konar, Pinus, CSIR, New Delhi, 1971; K. N. Rao and K.V Krishnamurthy, Angiosperms, S. Viswanathan Pvt. Ltd., Madras, 1976. செடிகளின் துப்புரவு. வேட்டையாடித் திரிந்த அக்கால மனிதன், ஓரிடத்தில் தங்கி, தனக்கும், கால் நடைகளுக்கும் தேவையான உணவுக்காக, வேளாண்மையைக் கையாள முற்பட்ட நாளிலிருந்து, செடிப் பாதுகாப்பு தொடங்கியது. பயிர் மேம்பாடு என்பது விளைச்சலைப் பெருக்கும் புது வகைகளைப் புகுத்துவது மட்டுமல்லாமல், பூச்சி, நோய்களிலிருந்து பயிரைக் காப்பதும் அடங்கும். நீர், உரம் இட்டு விளைச்சலைப் பெருக்கி, இறுதியில் திடீரென்று பூச்சியோ, நோயோ தோன்றினால், பயிர் பாதிக்கப் படும். எனவே, செடிப் பாதுகாப்பு, வேளாண்மையின் இன்றியமையாத பகுதியாகும். இதில் தவிர்த்தல், நீக்கல், பாதுகாத்தல், எதிர்ப்புத் திறன் ஊட்டல் என்னும் நான்கு வழி முறைகள் உள்ளன. தவிர்த்தல். இதை வருமுன் காக்கும் முறை என்று கூறலாம். தொடக்கத்திலேயே, தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதால், நோய்க் காரணிகள் பயிர்களோடு தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே, இம்முறையின் நோக்கம். செடி நோய்ச் சட்டங்கள் மூலம் செடிகளோ, செடியின் பகுதிகளோ ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லாதவாறு தடுக்கலாம். அவ்வாறு, அவற்றை எடுத்துச் செல்ல நேரிட்டால், தகுந்த ஆய்வுக்கு உட்படுத்தலாம். செடிகள் வயலில் நடப்படுவதற்கு முன், நோய்க் காரணிகளை நீக்கி விடலாம். இவ்வாறு, செடிகளோடு தொடர்பு கொண்ட நோய்க் காரணிகள் புது இடத்தை அடைவதைச் சட்டங்கள் மூலம் தடை செய்வது வழக்கம். ஒவ்வொரு நாட்டிற்கும் பயிர்ப் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மைச் சங்கம், பின் வரும் சட்டங்களை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து செடிகள் கொண்டு வரும் போது, அவற்றோடு செடி நலச் சான்றிதழும் கொண்டு வர வேண்டும். செடிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை அங்கேயே அழித்து விட வேண்டும். கட்டுப்பாடுகளை மீறிச் செடிகள் எடுத்துச் செல்லப்பட்டால், தண்டனை அளிக்கப்படும். இங்கிலாந்தில் 1947இல் ஒரு குறிப்பிட்ட நோய் தோன்றியவுடன், பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி, அங்கேயே தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால், நோய்த் தாக்கம் குறைந்தது. மேலும், நோயின் அறிகுறிகள் காணப்படும் வயல், தோட்டங்களிலிருந்து விதைகள் விற்பனை செய்வதையும், இச்சட்டம் தடை செய்கிறது. பயிர்ச் சாகுபடியின் போது, நோய்கள் தோன்றவில்லை என்னும் சான்றிதழோடு கூடிய விதைகளையே வாங்குவது நல்லது. இச்சான்றிதழ் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விதை, செடிகள் எடுத்துச் செல்ல இன்றியமையாதது. சுங்கத் துறையின் ஒரு பிரிவு, செடிகளை ஆய்வு செய்த பிறகே அனுமதிக்கும். தாவர உறுப்பில் நோயின் அறிகுறிகள் காணப்பட்டால், அவற்றை நீக்கி விட்டு வளமான பகுதியை ஏற்கலாம். பெரும்பாலான நோய்கள் விதைகள் மூலமே பரவுகின்றன. ஆகவே, சுங்க உயர் அலுவலர்கள் விதைகளை ஈரம் உறிஞ்சும் தாள் மீது முளைக்க வைக்கும் போது, விதைகளிலுள்ள பூசணங்களும் வளர்வதைக் கண்டு பிடிப்பர். மேலும், புற ஊதாக் கதிர்கள் மூலமும் பாதிக்கப்பட்ட விதைகளை இனம் காணலாம். பாதிக்கப்பட்ட விதை, தாவர உறுப்புகளை அந்நாளில் உப்பு நீர் அல்லது புகை மூட்டத்திலிட்டுத் தூய்மைப்படுத்துவது வழக்கம். தற்காலத்தில் பல வகை வேதிப் பொருள், கதிர் வீச்சு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். மருந்துப் பொருள்களை விதைகளுடன் கலந்து விடலாம். சில நோய்க்காரணிகளை வெப்பக் காற்று, வெந்நீர் மருத்துவம் மூலமும் கட்டுப் படுத்தலாம். திசுவளர்ப்பு முறையைக் கையாண்டு, நச்சுயிரி அற்ற வகைகளைத் தோற்றுவிக்க முடியும். திசு-வளர் தளத்தில், மாலகைட் பச்சை என்னும் வேதிப் பொருளைச் சேர்ப்பதால், நச்சுயிரிகள் திசுக்களைத் தாக்குவதில்லை. இவ்வாறு, நச்சுயிரி அற்ற கரும்பு, பழ மரம், அழகு செடி முதலியவை உண்டாக்கப் பட்டுள்ளன. நீக்கல். பொதுவாக, தகுந்த முன்னேற்பாடுகள் எடுத்துக் கொண்ட போதும், வயலில் நோய் தோன்றுவதுண்டு. அந்நோய்க் காரணியை நீக்குவது. அழிப்பது, பரவாமல் தடுப்பது என்பவை, அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஆகும். சாகுபடிமுறையில் பயன்படுத்தும் வேதிப் பொருள் கொண்டு, நோய்க் காரணிகளை நீக்க முடியும். நோயுற்ற செடியை அகற்றுவதே எளிய வழியாகும். நோயின் அறிகுறிகள் தோன்றியவுடனே, கால தாமதமில்லாமல் அழிப்பதே நல்லது. அவ்வாறு செய்யாவிடில், அந்த ஒரு செடியே பிற செடிகளின் அழிவுக்கு வழி வகுத்து விடும். சில நேரங்களில் நோயுற்ற தாவரத்தை விட்டு விட்டு, அதைச் சுற்றியுள்ள பிற செடிகளை நீக்கியும், நோய் பரவுவதைத் தடுக்கலாம். காட்டாக, வாழையில் தோன்றும் தேமல் (mosaic) நோய்க்கு இம்முறையே பின்பற்றப் படுகிறது. அமெரிக்காலில் எலுமிச்சையை பாக்டீரிய சொறி (canker) நோயிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தும் முறையும் இதுவே. சில சூழ்நிலைகளில் நீக்கல் முறை தோல்வியடைவதுண்டு. பக்சீனியா (puccinia) என்னும் பூசணம் துரு நோய்க்குக் காரணமாகும். இதன் வாழ்க்கைச் சுழல் முழுமையடைய இரு ஓம்புயிரிகள் (hosts) தேவைப்படுகின்றன. அவற்றில் ஒன்று, கோதுமையின் பார்பெரி எனப்படும் களைச் செடியாகும். அமெரிக்காவில், துரு நோய் பெருமளவில் தோன்றிய போது, கோதுமையை அந்நோயிலிருந்து பாதுகாக்கப் பார்பெரி செடியை அடியோடு நீக்க வேண்டும் என்னும் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. எவ்வித நடவடிக்கை எடுத்த போதும், துரு நோய்த் தாக்கத்தைக் குறைக்க முடியவில்லை. இதற்குக் காரணம், பக்சீனியா மற்றொரு வகையில், தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதேயாகும். நோயுற்ற செடிகளை அடுத்துள்ள பிற செடிகளை நீக்குவதன் மூலமும் தடுக்க முடியும் என்று அமெரிக்காவில் மெய்ப்பித்துள்ளனர். மிளகாயில் தோன்றும் தேமல் நச்சுயிரி நோயை நீக்க, வயலைச் சுற்றி 50மீ. வரையுள்ள பிற தாவரங்களைக் குறிப்பாகச் சொலானம் சிற்றினங்களை நீக்குவதால், பெருவாரியான இழப்புக் குறைகிறது. நோயுள்ள செடியை வேரோடு நீக்கத் தேவையில்லை. பெரிய பழ மரங்கள் பாதிக்கப்படும் போது, முழு மரத்தையும் வெட்டுவது இழப்பை ஏற்படுத்தலாம். அதற்கு மாறாகப் பாதிக்கப்பட்ட கிளைகளை மட்டும் வெட்டி நீக்கி விடுவது வழக்கம். வெட்டிய பகுதியில் தடவும் மருந்து, மேற்கொண்டு நோய் பரவாமல் தடுக்கும். பூச்செடிகளில் சில நோய்கள் தோன்றும் போது, இலைகள் மட்டுமே அகற்றப் படும். சில நோய்க் காரணிகள் காய்ந்த இலை, குச்சி போன்ற பகுதிகளிலிருந்து, அடுத்த பருவத் தாவரத்தைத் தாக்குவதுண்டு. அதனால், அறுவடை முடிந்தவுடன், வயலிலுள்ள குப்பை, கூளங்களைத் திரட்டி, நெருப்பிலிட்டுக் கொளுத்தி விடுவர். வேளாண் கருவிகள் மூலமும், நோய் பரவ வாய்ப்புள்ளது, அதனால், பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்தும் கருவிகளைத் தூய்மையாக வைத்திருத்தல் தேவை. அவற்றைப் பயன்படுத்திய பின், மருந்துகள் மூலமாகவோ, சூடேற்றுவது மூலமாகவோ தூய்மைப் படுத்த வேண்டும். பல நோய்க் காரணிகள் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. இவ்வித பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதோ, அழிப்பதோ நோய் பரவுதலைக் குறைக்கும். பயிர்ச் சுழற்சி மூலமும் நோய்க் காரணிகளை நீக்கி விடுவது வழக்கம். பொதுவாக, நோய் தாக்கப் படாத பயிர்களைப் பயிர்ச் சுழற்சியில் சேர்ப்பதால், நோய்க் காரணிகளின் வாழ்க்கைச் சுழல் அறுபட்டு, அவை நீக்கப் படும். ஒரே பயிரின் பல வகைகளை வயலில் சாகுபடி செய்யக் கூடாது. இதனால், கலப்பினம் ஏற்பட்டுச் சிற்றினத்தின் தனித் தன்மை கெட்டு விடும். பயிர்ச் சுழற்சியின் போது, நோய்க்கு உள்ளாகும் பயிர்களைச் சாகுபடி செய்வதைத் தவிர்த்தல் நோய் பெருகுதலைத் தடுக்கும். பூச்சி, பூசணக் கொல்லிகள் மூலமும், நோய்க் காரணிகளை நீக்கலாம். ஆனால், அவை மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கலாம். மண்ணைத் தூய்மைப்படுத்துவது, மற்றொரு வகையாகும். சில நோய்க் காரணிகள் மண்ணில் தங்கி, மறு பருவத் தாவரத்தைப் பாதிக்கலாம். இதைத் தடுக்க, நீர் கட்டுதல், வெப்பமேற்றுதல், வெந்நீர் பாய்ச்சுதல் போன்ற முறைகளைப் பின்பற்றலாம். பாதுகாப்பு. இது நோய்க் காரணி ஓம்புயிரியுள் பரவாதவாறு, நோய்க் காரணியைக் கொன்று விடும் முறையாகும். அதாவது, நோயின் அறிகுறிகள் தோன்றியவுடன், எடுக்கும் நடவடிக்கையாகும். பூச்சி, பூசணக் கொல்லிகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, கனிம வேதிப் பொருள்கள், கரிம வேதிப் பொருள்கள் என்பன. கனிமப் பூசணக் கொல்லிகளில் மிகவும் முக்கியமானது போர்டோக் கலவை மருந்தாகும். இதில் மயில் துத்தம், சுண்ணாம்பு, நீர் முதலியவை 1:1:100 என்னும் விகிதத்தில் இருக்கும். இக்கலவையைப் பயன்படுத்தி, பெரும்பாலான பூசண நோய்க் காரணிகளைக் கட்டுப் படுத்தியுள்ளனர். கந்தகக் கலவைகளும் சிறந்த நோய்க் கொல்லிகளாகும். கரிம கந்தகப் பூசணக் கொல்லிகளுள் டைதயோ ஃபார்பமேட் முக்கியமானது. இம்மருந்துகள் கடைகளில் பல வணிகப் பெயர்களில் விற்கப்படுகின்றன. ஸீரேம், ஃபெர்பேம், தீரேம், நாபாம். சீனெப், மேனப் என்பவை முக்கியமானவை. நோய்க் கட்டுப்பாட்டில், நுண்ணுயிர் எதிர்ப் பொருள்கள் (antibiotics) பெருமளவில் பயன்படுகின்றன. ஆரியோ பஞ்சின்சால் நுண்ணுயிர் எதிர்ப் பொருள் பூசணங்களைக் கட்டுப் படுத்தும் தன்மை கொண்டது. இதைக் கொண்டு, மண் வாழ் நோய்க் காரணிகளைக் கட்டுப் படுத்தலாம். இது விதைகளில் புறத்திலும், அகத்திலும் உள்ள நோய்க் காரணிகளைக் கொன்று விடும். உயிரினம் மூலம் கட்டுப்பாடு (biological control). வேதிப் பூச்சி கொல்லிகளால் பல கேடுகள் விளையும். அதனால், நோய்க் காரணிகளை உயிரினங்கள் மூலம் கட்டுப் படுத்த முடியும். கரும்பில், நடுக்கணு, மேற்கணு, நுனிக் குருத்துப் புழுக்கள் அழிவை விளைவிப்பதுண்டு. இம்மூவகைப் புழுக்களையும், மற்றொரு பூச்சியைக் கொண்டு கட்டுப் படுத்தலாம். இந்த ஒட்டுண்ணிகள், நோய்க் காரணிகளின் முட்டைகளில் தங்களுடைய முட்டைகளை இட்டு விடும். ஒட்டுண்ணி முட்டையிலிருந்து வெளி வரும் புழுக்கள் நோய்க் காரணியின் புழுக்களைக் கொன்று விடும். தற்சமயம், வேளாண்மை அலுவலகங்களில் ஒட்டுண்ணி அட்டைகளை விற்பனை செய்கின்றனர். ஒவ்வோர் அட்டையிலும் ஆயிரக்கணக்கான ஒட்டுண்ணியின் முட்டைகள் காணப்படும். அட்டையில் குறிப்பிட்டுள்ள நாளிலிருந்து ஒரு வாரத்தில், ஒட்டுண்ணிகள் வெளிப்பட்டுக் குருத்துப்புழுக்களின் முட்டைகளைத் தாக்கும். இம்முறை மிகவும் சிக்கனமானது. கேடு விளைவிக்காதது. வேதிப் பூசணக் கொல்லி மருந்துகள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. எனவே, அவை பயிரையும், பாலூட்டிகளையும் பாதிக்கக் கூடும், ஆனால், இப்பண்பு, பெரும்பாலும் சூழ்நிலையைப் பொறுக்து அமைந்துள்ளது என்று ஆய்வாளர் கருதுவர், பூச்சி, பூசணம் ஆகியவற்றைக் கொல்லப் பயன்படுத்தும் மருந்துகள் செடியில் சில காலம் தங்கிச் செயற்படும். சில மருந்துகள் அவ்வாறு தங்கி அறுவடை செய்யும் உணவுப் பொருள்களோடு கலந்து, மனிதருக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கலாம். இவ்விதமான பக்க விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே, உயிரின–பூச்சி கொல்லிகளைப் (bio-insecticides) பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது. பைரீத்திரம், புகையிலை நீர் போன்றவை சிறந்த பூச்சி கொல்லிகளாகும். இம்மருந்துகளைத் தெளிக்கும் விதம், அதற்கேற்ற சூழ்நிலை, பருவம்,நேரம் இவற்றைச் செடிகளுக்கு எவ்வாறு அளிப்பது என்பது, பயிருக்குப் பயிர், நோய்க்கு நோய் வேறுபடும். அதை கருத்திற் கொண்டு மருந்துகளைக் கையாள வேண்டும். வேதிப் பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்துவதில், பல இடையூறுகள் உள்ளன. பொதுவாக, இவற்றைப் பெருமளவில் பயன்படுத்த வேண்டியிருக்கும், போர்டோக் கலவை போன்ற மருந்துகளைத் தயார் செய்வது சற்றுக் கடினம். மேலும், இவற்றைத் தூவ முகமூடி, கையுறை, தெளிப்பான் போன்ற கருவிகள் வாங்குவது செலவினத்தை அதிகப்படுத்தும். எதிர்ப்புத் திறன். செடிகளை நோய்க் காரணிகளிலிருந்து பாதுகாக்கக் கையாளப்படும் சிக்கலான முறைகளைத் தவிர்ப்பதே, எதிர்ப்புத் திறன் வகைகளை அறிமுகப் படுத்துவதன் நோக்கமாகும். இம்முறை பக்க விளைவுகளைத் தோற்றுவிப்பதும் இல்லை. துங்கோ வைரஸ் (Tungo virus) நெல்லைப் பெருமளவில் பாதிக்கிறது. பா திக்கப்பட்ட வயலில் ஒன்று அல்லது இரண்டு நெல் செடிகள், நோயின் அறிகுறிகளே இல்லாமல், செழுமையாக இருப்பதைக் காணலாம். அவையே இயற்கையான எதிர்ப்புத் திறன் கொண்டவை. அவற்றை இனப் பெருக்கம் செய்து, அழிவைத் தவிர்க்கலாம். செங்குத்து எதிர்ப்பு (vertical resistance), கிடை எதிர்ப்பு (horizontal resistance) என எதிர்ப்புத் திறன் இரு வகைப்படும். செங்குத்து எதிர்ப்பு வகையில், குறிப்பிட்ட பயிர், நோய்க் காரணியின் ஒரு வகைக்கு மட்டுமே எதிர்ப்பை வெளிப்படுத்தும் நிலையிலிருக்கும். ஆனால், கிடை எதிர்ப்பு வகையில், குறிப்பிட்ட பயிர், நோய்க் காரணியின் பல வகைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் பண்பு கொண்டது. உழவர்கள் கிடை எதிர்ப்பு வகைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். எதிர்ப்புத் திறன் வகைகளைத் தேர்வு செய்வதிலும் சிக்கல் உள்ளது. ஏதாவது ஒரு பயிர், ஒரு நோய்க் காரணிக்கு எதிர்ப்புக் காட்டினாலும், புது நோய்க் காரணிகள் தாக்கினால், அப்பயிரில் வேறு ஒரு நோய் தோன்றக் கூடும். ஆகவே, செடிப் பாதுகாப்பில் ஒரு முறையை மட்டும் பின்பற்றாமல், பல முறைகளைக் கையாள்வது சிறந்தது. நோய் எதிர்ப்புத் தன்மை மரபு வழியாகவும் அமையலாம். அதனால் கலப்பின முறை இத்தன்மையை, ஓரினத்திலிருந்து மற்றொன்றிற்குக் கொண்டு செல்லலாம். காட்டாக, சோலானம் டியூபரோசம் (solanum tuberosum) பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த உருளைக் கிழங்குச் செடியாகும். இது கிழங்குகளைத் தர வல்லது. ஆனால், இது எளிதாகப் பூசண நோயால் தாக்கப் படுகிறது. உருளைக் கிழங்கு வகையைச் சேர்ந்த மற்றொரு சிற்றினமான சோலானம் டெமிசம் (solanum demissum) என்பது காட்டுச் செடியாகும். இதில் கிழங்குகள் தோன்றுவதில்லை; பூசண நோயால் பாதிக்கப்படுவதும் இல்லை. இதற்குக் காரணம், இவ்வினத்தில் காணப் படும் ஜீன்களேயாகும். இதில் 16 வகை உண்டு என்று கண்டறிந்துள்ளனர் தாவர ஆராய்ச்சியாளர்கள். இவ்விரு சிற்றினங்களையும் கலப்பினம் செய்து, கிடைத்த கலப்புயிரி, உருளைக் கிழங்குகளைத் தருவதுடன், டெமிசத்தைப் போல், நோய் எதிர்ப்புத் தன்மையும் பெற்றுள்ளது. நோய் எதிர்ப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு சாகுபடி செய்யும் போது, வயல் எதிர்ப்புத் தன்மையைக் (field resistance) கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு செடி ஆய்வகத்தில் நன்றாகச் செயல் படலாம். ஆனால், வயலில் இயற்கைச் சூழ்நிலையில் பிற காரணிகளோடு தொடர்பு கொள்ளும் போது, அதன் எதிர்ப்புத் தன்மை பாதிக்கப்படலாம். —தி ஸ்ரீகணேசன் நூலோதி. B.E.J. Wheeler, An Introduction to Plant Diseases, ELBS, London, 1972; Ustimenko and Bakumovsky, Plant Growing in Tropics and Subtropics, Mir Publishers, Moscow, 1983. செடி மீது தெளிப்பு. தாவரப் பகுதிகளில் மேல் மருந்திட்டுப் பெரும்பாலான பயிர் நோய்களையும், பூச்சிகளையும் கட்டுப் படுத்துவதற்காகச் செடி மீது தெளிப்பு முறை (foliar spray) மேற்கொள்ளப் படுகிறது. தண்டு, இலை, காய் முதலியவற்றில் காணப் படும் பூச்சி, நோய் போன்றவற்றை முறையே பூச்சி கொல்லிகள், பூசணக் கொல்லிகள் மூலம் கட்டுப் படுத்தப் பயன்படும் முறையே தெளித்தல் ஆகும். இம்முறையில் நனையும் தூள் மருந்துகளும், நீர்ம மாற்றுத் திரட்டுகளும் தெளி நீர்மம் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றன. இம்மருந்துகளுடன், குறிப்பிட்ட அளவு நீரைச் சேர்த்துக் கிடைக்கும் கரைசல் பயிரின் மீது தெளிக்கப் படுகிறது. மருந்துக் கரைசலைத் தெளிப்பானில் இட்டு, அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இக்கரைசல் மிக நுண்ணிய துளிகளாகப் பகுக்கப்பட்டுப் பயிரில் பரவலாக விழும். மருந்து தெளிக்கும் போது, ஓரிடத்தில் நீண்ட நேரம் தெளிக்கக் கூடாது; அவ்வாறு தெளித்தால், பல நுண்துளிகள் ஒன்று சேர்ந்து, பெரிதாகிக் கீழே வடிந்து, விடும். மேலும் தெளிப்பினால், எந்தப் பயனும் இல்லாமல் போய் விடும். ஒரு ஹெக்டேர் நிலப் பரப்பிலுள்ள பயிரில் தெளிப்பதற்குச் சாதாரண தெளிப்பானைப் பயன் படுத்தினால், 400–1000 லி. மருந்துக் கரைசலும், விசைத் தெளிப்பானைப் பயன்படுத்தினால் 80–200லி. மருந்துக் கரைசலும் தேவைப்படும். இதில் தேவைப் படும் நீரின் அளவு மாறுபடுமே தவிர, மருந்தின் அளவு இரு வகைத் தெளிப்பானுக்கும் ஒன்றேயாகும். பயிரில் மருந்து தெளிப்பதைப் பெரும்பாலும், காலையிலோ, மாலையிலோ மேற்கொள்ள வேண்டும். பனிக் காலங்களில் பனித் துளிகள் மறைந்த பிறகே, மருந்தைத் தெளிக்க வேண்டும். உயர் வேகத்தில் காற்றடிக்கும் போது, மருந்து தெளிக்கக் கூடாது. மருந்தடிப்பதற்கு முன்பு, நீர் பாய்ச்ச வேண்டும். .தெளிப்பு முறையால் ஏற்படும் நன்மைகள். குறிப்பிட்ட பரப்பளவில் மருந்து தெளிப்பதால், அதற்குத் தேவைப்படும் மருந்தின் விலை மிகக் குறைவு. மருந்துத் துளிகள், ஒரே சீராகப் படியும் தன்மையும், நன்றாக ஒட்டிக் கொள்ளும் தன்மையும் பெறுகின்றன. தெளிக்கும் மருந்து, நனையும் தூள் மருந்து, நீர்ம மாற்றுத் திரட்டுப் போன்ற பல வடிவங்களில் கிடைக்கிறது. தெளிப்பதற்குப் பல வகைத் தெளிப்பான்கள் உள்ளன. தெளிக்கும் மருந்து, தூவும் மருந்தை விட, மிகவும் பயன் தருகிறது. காற்று முதலிய இயற்கை ஓட்டத்தால் வீணாகும் மருந்தின் அளவு, குறைவேயாகும். காற்றின் வேகம் மணிக்கு 16 கி.மீ. வரை இருந்த போதும், தொடர்ந்து தெளிக்கலாம். குறிப்பிட்ட பரப்பளவில் தெளிக்க வேண்டிய மருந்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ, கருவியில் சிறிது மாற்றம் செய்யலாம். தெளிப்பு முறையில், மருந்திட்ட பகுதியில், பூசணக் கொல்லியின் நச்சுத் தன்மை நீடிப்பது கூடுதலாகும். இம்முறையில் பயன்படுத்துவோருக்கு மருந்தினால் ஏற்படும் கேடுகள் தூவும் முறையில் இருப்பதை விடக் குறைவேயாகும். மருந்தின் அளவு. குறிப்பிட்ட நிலப் பரப்பில் தெளிப்பதற்குப் பயன்படும் மருந்தின் அளவு, சாகுபடி செய்துள்ள பயிரின் வளர்ச்சி, பயிர் வகை, மொத்த இலைப் பரப்பு, பயிரின் வயது, பயிரின் ஊட்டம் முதலியவற்றைப் பொறுத்து மாறுபடும். சான்றாக, படர் வகை (spreading variety) நிலக் கடலைப் பயிருக்கு மிகுந்த அளவு மருந்தும், கொத்துக் கடலை வகைக்குக் (bunch variety) குறைந்த அளவு மருந்தும் தேவைப்படும். கரும்பை விட, நெற்பயிக்கு ஏறக் குறைய இரண்டரை மடங்கு குறைந்த அளவே மருந்து தேவைப்படும். ஒரு பயிரின் இளம் பருவத்திற்குக் குறைந்த அளவும், வளர்ந்த பயிருக்குக் கூடுதலான அளவும் மருந்து தேவைப்படும். உரமிட்டவயலிலுள்ள பயிர்கள் ஊட்டத்துடன் மிகுந்த பரப்பைப் பெற்றுள்ளமையால், அவற்றிற்கு உரமிடுதல், வளரும் பயிர்களுக்குத் தேவைப்படும் மருந்தின் அளவை விடக் கூடுதலாகத் தேவைப்படும். மேலும், மானாவாரிப் பயிரை விட, இறைவைப் பயிர்களுக்குக் கூடுதலான மருந்து தேவைப்படுகிறது. தெளிப்பான்கள். கைத் தெளிப்பான், விசைத் தெளிப்பான் ஆகியவை தெளிப்பதற்குப் பயன்படுகின்றன. கைத் தெளிப்பான்களில், சிறிய கைத் தெளிப்பான், வாளித் தெளிப்பான், நேப்சேக் தெளிப்பான், ராக்கர் தெளிப்பான் ஆகிய நான்கு வகை உண்டு. விசைத் தெளிப்பானில் நீர்மவியல் தெளிப்பான் (hydraulic sprayer) நுண் துளித் தெளிப்பான் (mist blower) என இரு வகை உண்டு. தெளிப்பான்களைக் கொண்டு குறைந்த பரப்பளவில் தோன்றும் பூச்சி நோய்களைக் கட்டுப் படுத்தலாம். ஒரே சமயத்தில், பெரும் நிலப் பரப்பில் பூச்சி அல்லது நோய்கள் காணப் பட்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, விமானம் மூலம் மருந்துகளைத் தெளிக்கலாம். விமானத்தைப் பயன்படுத்தி, ஒரு நாளில் ஏறக் குறைய 1000 ஹெக்டேர் நிலப் பரப்பிற்கு மருந்து தெளிக்கலாம். —கா. சிவப்பிரகாசம் நூலோதி. Y.L. Nere, Fungicides in Plant Disease Control, Oxford and IBH Publishing Co., New Delhi, 1971. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->