இலத்தீன் அமெரிக்கா என்பது புதிய உலகமென்று கருதப்படும் வட, தென் அமெரிக்காக் கண்டங்களைச் சார்ந்த இருபது சுதந்திரக் குடியரசு நாடுகளைக் குறிக்கும். இலத்தீன் அமெரிக்க நாடுகள் 1. பிரேசில், 2. ஆர்சென்டீனா, 3. கொலம்பியா, 4. பெரு, 5. வெனிசுவேலா, 6. சிலி, 7. கியூபா, 8. ஈக்வடார், 9. குவாட்டிமாலா, 10. பொலீவியா, 11. அய்டி, 12. தொமினிகன் குடியரசு, 13. எல் சால்வடார், 14. உருகுவே, 15. அண்டுராசு, 16. பராகுவே, 17. நிக்கரகுவா, 18. கோசுட்டாரிகா. 19. பனாமா 20. மெக்சிகோ என்பனவாகும். இந்நாடுகளின் மொழி, சமயம், கலை, பழக்கவழக்கங்கள் ஆகியவை இசுபெயின், போர்ச்சுகல், பிரான்சு போன்ற நாடுகளின் அடிப்படையில் பிறந்தவை. இசுபெயின், போர்ச்சுகல், பிரான்சு ஆகிய நாடுகளின் நாகரிகங்கள் பண்டைய உரோமானிய நாகரிகத்தின் அடிப்படையில் எழுந்தவை. உரோமாபுரியை இலாட்டியம் (Latium) என்பர். இதனை இலத்தீன் என்றும் கூறுவர். எனவே, இத்தகைய இலத்தீன் பண்பாட்டைப் பின்பற்றும் மக்களை இலத்தீனியர் என்றும் அவர்கள் வாழும் பகுதியை இலத்தீன் அமெரிக்கா (Latin America) என்றும் குறிப்பர். பிரேசில், அய்டி என்னும் இரு நாடுகளில் போர்ச்சுகீசிய மொழியையும் பிரெஞ்சு மொழியையும் முறையே பேசுவர். ஏனைய பதினெட்டு நாடுகளிலும் இசுபானிய மொழி பேசப்படுகிறது. மேற்கூறப்பட்டுள்ள இருபது நாடுகளும் உலக உருண்டையின் மேற்குப் பாதியின் 95 விழுக்காட்டுப் பகுதியை உள்ளடக்கியுள்ளன. மெக்சிகோவின் வட எல்லையிலிருந்து தென் அமெரிக்காக் கண்டத்தின் கோடி வரையில் பரவியுள்ளது இலத்தீன் அமெரிக்கா. இலத்தீன் அமெரிக்காவின் மக்கள்தொகை 1970–ஆம் ஆண்டில் 25 கோடியாக இருந்தது. இதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பிரேசில் நாட்டிலும், ஐந்திலொரு பங்கு மக்கள் மெக்சிகோவிலும் வாழ்ந்து வருகின்றனர். எஞ்சியவர்கள் ஏனைய பதினெட்டு நாடுகளிலும் வாழ்கின்றனர். மேற்கூறிய இருபது நாடுகளுக்குமிடையே சில பொதுத்தன்மைகளைச் சுட்டிக் காட்டலாம். இந்நாடுகள் நீண்டகாலம் சுதந்திரமாக இயங்கியவை. இங்கு உரோமானியக் கத்தோலிக்கச் சமய மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. மத்தியதரைக் கடலையொட்டியுள்ள உரோமானிய மரபுகளின் அடிப்படையில் எழுந்த பண்பாட்டை இவை கொண்டுள்ளன. இங்கிருந்துதான் இந்நாடுகளை ஆய்வு செய்தவர்களும் வென்றவர்களும் குடியேற்றவாதிகளும் வந்தடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இப்பொதுத்தன்மைகளை விட இந்நாடுகளில் தென்படும் வேறுபாடுகள் மிகுதியானவை என்று கூறுபவர்களும் உளர். மக்கள் பல்வேறு இனத்தவர்களாய் வேறுபடுகின்றனர், பொருளாதார நிலையிலும் பெருத்த வேறுபாடு உண்டு. பஞ்சமும் பட்டினியும் வாட்டி வதைக்கும் மக்களையும், வாழ்க்கைத் தரத்தில் மிக உயர்ந்த வசதிகளோடு வாழும் மக்களையும் இங்குக் காணலாம். அதேபோல் அரசியல் அமைப்பு முறைகளும் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. கொடுங்கோலாட்சி முதல் அரசியல் முறைமைக்குட்பட்ட மக்களாட்சி வரையிலான பல்வேறு அரசியல் அமைப்புகளையும் இங்குக் காணலாம். இலத்தீன் அமெரிக்காவில் வாழும் மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. மேட்டுநிலப் பகுதிகளில் வாழ்வோர், 2. சமவெளிப் பகுதிகளில் வாழ்வோர், 3. தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர்.