பெருங்குடலின் இறுதிப் பகுதியான நேர் குடலில் தனித்து ஏற்படும் அழற்சியை, நேர் குடல் அழற்சி என்றும், நேர் குடலுடன் பெருங் குடலின் பிற பகுதிகளிலும் சேர்ந்து தோன்றும் அழற்சியை, நேர் குடல் பெருங் குடல் அழற்சி என்றும் குறிப்பிடலாம். நேர் குடல் அழற்சியைப் பின் வரும் நால்வகையாகப் பிரிக்கலாம். அவை, குறிப்பற்ற அழற்சி (nonspecific inflammation), குறிப்பான நோய் நுண்ணுயிரிகளால் ஏற்படும் அழற்சி, காயத்தால் ஏற்படுவது (traumatic), எக்ஸ் கதிர் வீச்சால் எற்படுவது என்பன. குறிப்பற்ற நேர்குடல் அழற்சி (granurlar proctitis). சிறு மணி நேர் குடல் அழற்சி மற்றும் குரோன் நோய் இவையிரண்டும் குறிப்பற்ற அழற்சி வகையைச் சார்ந்தவை. மேலைநாடுகளில் சிறு மணி நேர் குடல் அழற்சி பெருமளவில் காணப் படுகிறது. பெருங்குடல் புண்ணுடை அழற்சி (ulcerative colitis) சிறு மணி நேர் குடல் அழற்சி வடிவிலேயே பெரும்பாலும் வெளிப் படுகிறது. இந்நோயின் அடிப்படைக் காரணம் புலனாகவில்லை. குருதி தோய்ந்த சீதம் கலந்த மலக் கழிப்பு, பேதி போன்றவை அறிகுறிகளாகும். நேர் குடல் குழலுக்குள் குருதி, சீதம் இருத்தல், சிறு மணி படர்ந்த அமைப்புடைய சீதப் படலம் (granular mucosa) போன்றவை நேர் குடல் நோக்கியால் (protoscope) பார்வையிடும் போது தெரிவதை வைத்து, நோய் உறுதி செய்தல் வேண்டும். நேர் குடலில் மட்டுமே அழற்சி உள்ள நிலையில் அது தாங்கிக் கொள்ளும் அளவுக்கு இருப்பதால், பெரும்பாலும் மருத்துவம் தேவைப் படுவதில்லை. இந்நோய் பல்வேறு இடைவெளிகளில் வரும் சுழற்சித் தன்மையுடையது. நோய் கடுமையாக இருப்பின், வாய் மூலமாகச் சல்ஃபாசாலகின் என்னும் மருந்தையும், ஆசன வாய் மூலமாகப் பிரேட்னிசோலோன் என்னும் ஸ்டீராய்டு வகை மருந்தையும் மலக் குடல் கழுவல் (8ாஊால) முறையில் கொடுத்து, மருத்துவமளிக்க வேண்டும். உணவில் பாலை ஒதுக்க வேண்டும். பெருங்குடல் குரோன் நோய். இதனைச் சிறு மணியொத்த நேர் குடலழற்சி (granulomatous proctitis) என்றும் குறிக்கலாம். இந்நோயின் தன்மை, சிறு குடல் குரோன் நோய் போன்றே உள்ளது. இந்நோய் பெருங் குடல் சுவரின் அனைத்து அடுக்குகளையும் பாதிக்கிறது. ஆனால், சீதப் படலம் (Mucosa) குறைந்தளவில் பாதிக்கப் படுகிறது. சுழற்சி திட்டு திட்டாக் காணப் படுவதே இதன் முதன்மை இயல்பாகும். பெரும்பாலும், நேர் குடல் பாதிப்பிற்கு உள்ளாவதில் காய்ச்சல், உதர வலி, பேதி, ஆசன வாய்ப்புரை (fistula inano), ஆசன வாய்ச் சீழ்க் கட்டி, மூட்டு அழற்சி, யுவிய அழற்சி (uveitis) வாய், புணர் உறுப்பு, சீதப் படலங்களில் புண்கள் போன்றவை இருக்கலாம். இந்நோயும் விட்டு, விட்டு வரும் சுழற்சித் தன்மையுடையது. குடல் திசுக்களில் நார்த் திசு மாற்றங்கள் (fibrotic changes) ஏற்பட்டு, நே ர்குடல் குறுகல் (stenosis) குடல் துளையுறுதல், குடல் புரை (fistulas), புற்று நோய் போன்றவையும் ஏற்படலாம். இந்நோயின் தொடக்கத்தில், பராமரிப்பு மருத்துவத்தை (conservative treatment) மேற்கொள்வதே சிறந்தது. மிகவும் தீவிரமாக இருப்பின், வாய் வழியே பிரெட்னிசோலோன் கொடுக்கலாம். தடுப்புத் திறன் ஒடுக்கிகளையும் (immuno suppressives) பயன் படுத்தலாம். சில சமயம் நேர் குடல் நீக்க அறுவை தேவைப் படுகிறது. குறிப்புடைய நேர் குடலழற்சி (specific proctitis). இதனை நோய்த் தொற்று நேர் குடலழற்சி என்றும் கூறலாம். ஷிகெல்லா, சால்மென்ல்லா போன்ற பாக்டீரியாக்களால் விளையும் நேர் குடலழற்சியிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டும். மேக நோய். நேர் குடலழற்சியில், ஆசன வாயில் பெரும்பாலும் புண் இருக்கும். லிம்ஃபோக்ரானுலோமா வெனிரம் (Lymphogranuloma venereum) என்னும் பால் வினை நோய் பெரும்பாலும் ஆசன வாய்ப் புணர்ச்சி (anal intercourse) பழக்கமுடையவர்களின் நேர் குடலைப் பாதிக்கும். நேர் குடல் நோக்கி மூலம் பார்ப்பதற்கு வெட்டை நோயில் உள்ளது போன்றே மாற்றங்கள் இருக்கும். இந்நோயின் சிக்கல்களாகச் சீழ்க் கட்டி,புரை, நேர் குடல் சுருக்கம் போன்றவை ஏற்படும். கிளாஸ்ப்ரிடியம் டிஃபிசில் (Clostridium difficile) என்னும் பாக்டீரியக் குடலழற்சி, பரந்த இலக்கு நுண்ணுயிர் எதிர் மருத்துகளைப் (broad spectrum antibiotics) (எ-டு: லின்கோமைசின்) பயன் படுத்தலால் ஏற்படுகிறது. நாள் பட்ட அமீபியச் சீத பேதியிலும் (chronic amoebic dysentery) நேர் குடலழற்சி ஏற்படுகிறது. காச நெடுங் குடலழற்சி (tuberculous proctitis) பெரும்பாலும் சுவாசக் காச நோய் உள்ளோருக்கு வரும். இதில் புண், புரை, சீழ்க்கட்டி போன்ற சிக்கல்கள் இருக்கும். நெடுங்குடல் பில்ஹெரிய நோய் (rectal bilhariasis), ஷிஸ்டோசோமா மேன்சோனி (Schistosoma manzoni) என்னும் வகை, ஒட்டுண்ணிப் புழுவின் தாக்கத்தால் பெருமளவில் நைல் சமவெளியில் வசிப்போருக்கு ஏற்படும். ஹெர்பீஸ் ஹோமினிஸ் (Herpes hominis) என்னும் மீ நுண்ணுயிரால் (virus) ஏற்படும் ஆசன வாய் நெடுங்குடல் அழற்சி, பெறப்பட்ட தடுப்பாற்றல் குறை நோயியத்தில் (acquired immunodeficiency syndrome) பலவிதமான நோய்த் தொற்று நுண்ணுயிர்களால் ஏற்படும் அழற்சி போன்றவையும் நேர் குடல் அழற்சி வகையைச் சார்ந்தவையாகும். காய நேர் குடலழற்சி. பல வகைக் காயங்களால், குறிப்பாக, மீண்டும், மீண்டும் நிகழும் நேர் குடல் நழுவலில் (prolapse) ஏற்படும் உராய்வினால், அழற்சி ஏற்படும். இதில் குருதி ஒழுகல், சீதப் போக்கு, புண் போன்ற அறிகுறிகள் இருக்கும். வேதி நேர்குடலழற்சி (chemical protitis). சில மேநாட்டு மருத்துவர்கள், சில உறுத்தும் மூலிகை நீர்மங்களை நேர் குடலில், மலக்குடல் கழுவல் வடிவில் கொடுப்பதால், இவ்வகை அழற்சி ஏற்படும். எக்ஸ் கதிர் நேர் குடலழற்சி. இவ்வகை அழற்சி குறிப்பாகப் பெண்களில், கருப்பைக் கழுத்துப் புற்று நோய் மருத்துவத்தின் சிக்கலாக ஏற்படும். ரேடிய ஊசிப் பதிவு (radium needle implantation) அல்லது வேறு வித எக்ஸ் கதிர் மருத்துவத்தின் போது, கருப்பைக்கு மிக அண்மையிலுள்ள நேர் குடல், கதிர் வீச்சுக்கு உள்ளாகி, குறு மற்றும் நெடு அழற்சி ஏற்பட மிகு வாய்ப்புகள் உள்ளன. இதில், குருதி ஒழுக்கு, சீதப் போக்கு, நேர் குடல் குறுகல் போன்றவை ஏற்படும். —கு. சிவஞானம் துணை நூல். D.C. Sabiston, Tex tbook of Surgery, Thirteenth Edition, W.B. Saunders co., Philadelphia, 1986; L.W. Way, Current Surgical Diagnosis & Treatment, Eighth Edition, Appleton and Lange, Connecticut, 1988; S.I.Schwaartz et. al., Principles of Surgery, Fifth Edition, McGraw-Hill Book Company, Newyork, 1988.