வான கோளத்தின் வட பகுதியில் சிறு கரடி விண்மீன் குழு (Ursa minor constellation) உள்ளது. இது துருவ விண்மீன் குழு எனப்படும். இது சிறிய கரண்டி போன்ற அமைப்பில் வளைந்திருக்கும். இதன் கைப்பிடிப் பகுதியின் முனையில், துருவ விண்மீன் (pole star) உள்ளது. இக்குழுவில் உள்ள ஏழு ஒளி மிகு விண்மீன்களில் துருவ விண்மீன், கோச்சாப் ஆகிய இரண்டும் மிகு ஒளியுடைய விண்மீன்கள் ஆகும். இந்த ஏழு விண்மீன்களும் ஒன்றிணைந்து, கலப்பைப் போன்ற அமைப்பில் உள்ளன. இவ்விண்மீன் குழு வடதுருவத்திலிருந்து 1° தொலைவில் உள்ளது. இது 15 மணி வல ஏற்றத்திலும் (right ascension), 80° வடக்கு நடுவரை விலக்கத்திலும் (north declaration) அமைந்துள்ளது. மாறும் விண்மீனான துருவ விண்மீன் ஓர் இரட்டை விண்மீனாகும். இவற்றின் ஒளித் தரம் (magnitude) இரண்டு, ஒன்பது ஆகும். கரண்டி வளைபகுதியின் முன் பக்கத்தில் உள்ள β, γ என்ற இரண்டு விண்மீன்களும் துருவக் காப்பாளன் எனப்படும். ஏனென்றால், துருவ விண்மீனை மையமாக வைத்து, இக்குழு சுற்றி வரும் போது, இந்த இரண்டு விண்மீன்களைத் தவிர, வேறு மிகு ஒளியுடைய விண்மீன்கள் துருவ விண்மீனுக்கு அருகில் இல்லை. இவ்விண்மீன் குழு, நான்கு நாள்கள்' கால வட்டமுடைய (period) மஞ்சள் நிறமான பெரிய மாறும் விண்மீனையும் நிற மாலையிய இரும விண்மீன்களையும் (spectroscopic binary stars) உள்ளடக்கியுள்ளது. இந்த அமைப்பின் தொலைவு 680 ஒளியாண்டுகள் ஆகும். 2102 ஆம் ஆண்டு துருவ விண்மீன் வடதுருவத்திற்கு மிக அருகில் வரும். அப்போது துருவ விண்மீனுக்கும், துருவத்திற்கும் இடையே உள்ள தொலைவு 27 நிமிடம் 37 நொடி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 1500 கி.மு.—கி.பி. 300 வரை கோச்சாப் எனப்படும் B விண்மீனைத் துருவ விண்மீன் என அரேபியர் குறித்தனர். இவ்விண்மீன் குழுவில், தொலைநோக்கியின் உதவியின்றி 40 விண்மீன்களைக் காணலாம். இவ்விண்மீன் குழு வானக் கோளத்தில் 255.9 சதுரப் பாகை பரவியிருக்கும். —பெ. வடிவேல்