உரிச்சீர்
uriccīr
செய்யுள் உறுப்பாக விளங்கும் சீரின் வகைகளுள் ஒன்று.
செய்யுள் உறுப்பாக விளங்கும் சீரின் வகைகளுள் ஒன்று. சீர் என்னும் செய்யுள் உறுப்பு அசைகளால் ஆகித் தளைக்குக் காரணமாக அமையும். இந்த உறுப்பினைத் தொல்காப்பியரும் பின்னர் வந்த யாப்பருங்கலம் முதலான இலக்கண நூலாரும் வெவ்வேறு வகையாக விளக்கியுள்ளனர். இறுதியில் குற்றியலுகரம் அல்லது குற்றியலிகரம் அமைந்த சொற்களை அலகிடுவது காரணமாக இச்சீர் வேறுபாடு தோன்றலாயிற்று.
நேர், நிரை என்பன இயலசை என்றும் நேர்பு, நிரைபு என்பன உரியசை என்றும் தொல்காப்பியர் கொண்டார். மேலுமவர் இவ்வசைகளால் உண்டாக்கப்படும் சீர்களுள் இயலசை மயங்கி வருவன இயற்சீர் என்றும், உரியசை மயங்கி வருவன உரிச்சீர் என்றும் குறிப்பிட்டுள்ளார். நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கினையும் நேர் நேர் நேர், நிரை நேர் நேர், நேர்பு நேர் நேர், நிரைபு நேர் நேர் என்றும் இன்ன பிறவாறும் உறழ்ந்தால் 64 மூவசைச்சீர் உண்டாகும். அவற்றுள் நேர் நேர் நேர், நிரை நேர் நேர், நேர் நிரை நேர், நிரை நிரை நேர் ஆகிய நான்கும் வெண்பா உரிச்சீர் எனப்படும். எஞ்சிய 60 சீர்களும் வஞ்சி உரிச்சீர் எனப்படும். வஞ்சி உரிச்சீர் வஞ்சிப்பாவிற்கு மட்டுமே வரும். வஞ்சிப்பாவில் பிற சீர்களும் இடம்பெறும். இவை தொல்காப்பியர் கருத்தாகும்.
யாப்பருங்கல ஆசிரியர் இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர் என மூவகைச் சீர்களைச் சுட்டியுள்ளார். அவற்றுள் உரிச்சீர் என்பது மூன்று அசைகளால் ஆகியது. அது எட்டு வகைப்படும். நேரசையால் முடியும் நான்கு சீர்களும் வெண்பா உரிச்சீர் எனப்படும். நிரையசையால் முடியும் நான்கு சீர்களும் வஞ்சிப்பாவிற்குரியனவாய் வஞ்சி உரிச்சீர் எனப்படும் (யாப்பருங். 12). நேர் நேர் நேர், நிரை நேர் நேர், நிரை நிரை நேர், நேர் நிரை நேர் ஆகிய நான்கும் வெண்பா உரிச்சீர். நேர் நேர் நிரை, நிரை நேர் நிரை, நிரை நிரை நிரை, நேர் நிரை நிரை ஆகிய நான்கும் வஞ்சி உரிச்சீர். யாப்பருங்கல ஆசிரியராலேயே இயற்றப்பட்ட யாப்பருங்கலக் காரிகை இதனை, ‘ஈரசை நாற்சீர் அகவற்குரிய வெண்பாவினவாம். நேரசையாலிற்ற மூவகைச்சீர் ... நிரையால் இறுப, ... வஞ்சிக்குரிச்சீர்’ என்று காரிகை யாப்பால் விளக்கியுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 1002)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ykzx47ju/
தமிழ்“உரிச்சீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ykzx47ju/APA
Oliyon Research. (2026). உரிச்சீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ykzx47ju/MLA
"உரிச்சீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ykzx47ju/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment