அடிப்படை மனவெழுச்சிகள்
aṭippaṭai maṉaveḻuccikaḷ
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவரிடம் காணப்படும் மனவெழுச்சிகள் அடிப்படை மனவெழுச்சிகள் எனப்படும்.
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவரிடம் காணப்படும் மனவெழுச்சிகள் அடிப்படை மனவெழுச்சிகள் எனப்படும். மனவெழுச்சிகளைப் பற்றிய பல சோதனைகளை நடத்திய வாட்சன் (Watson) என்பார் சினம், அச்சம், அன்பு என்று மூன்று மெய்ப்பாடுகளை அடிப்படை மனவெழுச்சிகள் என்று குறிப்பிடுகிறார். மற்ற உளவியலறிஞர்கள் நான்கினுக்கு மேற்பட்ட அடிப்படை மனவெழுச்சிகளைக் குறிப்பிடுகின்றனர். இளங்குழலியின் மனவெழுச்சி பண்படாத அடிப்படைக் கிளர்ச்சியாக இருக்கும் என்று பிரிட்சசு (Bridges) என்னும் உளவியலறிஞர் கருதுகிறார். குழந்தை வளர வளர இக்கிளர்ச்சி மகிழ்ச்சி, துவரம் என்னும் இரு பெருங்கிளைகளாகப் பிரிகிறது. துயரமானது பின்னர் அச்- சம், சினம் என்னும் இரு பெருங்கிளைகளாகப் பிரிகிறது. இந்த அடிப்படை மனவெழுச்சிகளே ஒன்றுடன் ஒன்று பலவாறாக இணைந்து பொறாமை போன்ற மனவெழுச்சிகளின் ஆதாரமாக அமைகிறது.
குழந்தையின் உடல், உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சியுடன், அதன் மனவெழுச்சிகளும் இணைந்து வளர்ச்சி பெறுகின்றன. குழந்தை சமூகத் தொடர்புகளை அடையத் தொடங்கிய பின் தீவிரமான மனவெழுச்சிகளை வெளிப்படுத்தல் குறைந்து வருகிறது. சமூக ஏற்புடைமைக்குத் தக்கவாறு மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தக் குழந்தை கற்றுக் கொள்கிறது. கற்றல், பார்த்துச் செய்தல் ஆகிய இரு வழிகளிலும் குழந்தையின் மனவெழுச்சிகள் முதிர்ச்சியடைகின்றன. மனவெழுச்சி முதிர்ச்சியும் மனவெழுச்சி வெளிப்பாடும் தனி மனிதன் சார்ந்துள்ள பண்பாட்டிற்குரிய சமூகத்திற்குத் தக்கவாறு வேறுபாடுகள் அடைகின்றன.
அச்சம்
இது ஓர் எதிர்மறை மனவெழுச்சியாகும். விலங்கினங்களிலும் இது காணப்படுகின்றது. தனி மனிதன் தன்னால் வெற்றி கொள்ள முடியாத ஆபத்தான ஒரு நிலை ஏற்படும்போது அச்சம் ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலை உண்மையிலேயே அச்சத்தை உண்டாக்குவதாக இல்லா விட்டாலும் கூட அது ஆபத்தானது என்று தனிமனிதன் எண்ணினாலும் அவனிடம் அச்சம் தோன்றும். தீவிரமான அச்சம் ஏற்படின், அது திகில், கவலை, இனம்புரியாத பதட்டம் போன்ற பல்வேறு மெய்ப்பாடுகளாக வெளியிடப்படுகிறது. நிகழக்கூடிய ஆபத்துகளும் கூட குழந்தையிடம் அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன. பெற்றோர்களின் நடத்தையைப் பார்த்தும் குழந்தை அச்சங்களைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளைக் கட்டுப்படுத்தவும் கீழ்ப்படிய வைக்கவும் பெற்றோர்கள் அச்சமூட்டுவதை ஒருமுறையாகக் கையாளுகின்றனர். குழந்தைகள் தாம் பெற்றோரால் கைவிடப்படுவதாகவும் வேற்று மனிதர்களிடம் விட்டுவிடப்படுவதாகவும் எண்ணி அச்சம் கொள்கின்றனர். இந்த அச்சங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுடைய ஆளுமையைப் பள்ளி வாழ்க்கையிலும் பிற்கால வாழ்க்கையிலும் பாதிக்கின்றன. குழந்தைகளின் பாதுகாப்புணர்வின்மையே அவர்களின் அச்சத்தைப் பெரிதும் குறைக்க முடியும்.
சினம்
ஒருவனுடைய செயல்கள் தடுக்கப்பட்டால் அவள் சினங்கொள்வது இயற்கை. குழந்தை தன் இயக்கங்களைப் பிறர் கட்டுப்படுத்தும் பொழுதோ தான் விரும்பும் பொருளை அடையமுடியாமற் போகும் பொழுதோ சினம் கொள்கிறது. சமூகத் தொடர்பில் ஏற்படும் தடங்கல்கள், குறுக்கீடுகள் இவைகளால் குழந்தைகள் சினமுறுகின்றன. சினம் கொள்வது புறக்காரணிகளை (External factors) மட்டுமன்றித் தனி மனிதனின் மனப்பாங்கினையும் (Temperament) பொறுத்தது. ஒருவனைச் சினம் கொள்ளச் செய்யும் ஒரு தூண்டல் சில சமயங்களில் மற்றொருவனைச் சிறிதும் பாதிப்பதில்லை. குழந்தைகளிடம் காணப்படும் சினம் திசைமாறி வெளிப்படையான எதிர்ப்பாக உருவெடுத்து நேர்மாறானவற்றைச் செய்தல், எதிர்மறை நிலை (Negativism), புறங்கூறல், வம்பு பேசுதல் போன்ற நடத்தைகளின் மூலம் வெளிப்படுவதுண்டு.
அன்பு
அச்சம், சினம், ஆகிய மனவெழுச்சிகளைப் போலன்றி, அன்பு என்னும் மனவெழுச்சி ஆக்கம் தருகிற மனவெழுச்சியாகும். குழந்தைக்கு ஒரு பொருளின் மீது மிகுதியான அன்பு ஏற்படும்போது பிடிவாதமாக நடந்து கொள்கிறது. தான் அன்பு செலுத்துகின்ற பெற்றோர்களோ மற்றவர்களோ தன்னைவிட்டுப் பிரிந்து செல்வதைக் குழந்தை சகிப்பதில்லை. தான் விரும்புகின்ற நாய், பூனை போன்ற விலங்குகளையும் விளையாட்டுப் பொருள்களையும் தூங்கும் போது கூடத் தம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. இளமைப் பருவம் நெருங்கும் பொழுது இந்நிலை மாறத் தொடங்குகிறது. இளையோர், தாம் விரும்பும் பொருளினின்றும் மனிதர்களிடமிருந்தும் பிரிந்திருக்கக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால், இப்பருவத்தில் அன்பு நிலையானதாக மாறத் தொடங்குகிறது. தம் நெருங்கிய நண்பர்களையோ தாம் காதலித்தவர்களையோ விட்டுப்பிரிய நேரிடும் பொழுது நெடுநாள் வரை பிரிவுத் துயரத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். இளமைப் பருவத்தினர் எதிர் பாலினரிடம் உயர்மதிப்புடன் நடந்து கொள்ளவும் அவர்கள் அன்பைப் பெறவும் விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் எத்தகைய செயல்களின் மூலம் தங்கள் மதிப்பை நிலைநிறுத்தி, எதிர்ப் பாலினரின் அன்பைப் பெறமுடியும் என்பது தெரியாமல் சில சமயங்களில் சிக்கலான நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். காண்க: மனவெழுச்சி; மனவெழுச்சிக் கோட்பாடுகள்.
துணை நூல்கள்
Arnold, M.B., “Emotion and Personality”, 2 Vols. Columbia University Press, Newyork, 1960.
Plutchik, R., “The Emotions: Facts, Theories and a New Model”, Random House, Newyork, 1962.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 254)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yjpyz7qu/
தமிழ்“அடிப்படை மனவெழுச்சிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yjpyz7qu/APA
Oliyon Research. (2026). அடிப்படை மனவெழுச்சிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yjpyz7qu/MLA
"அடிப்படை மனவெழுச்சிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yjpyz7qu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment