இருப்புப் பாதைச் சொத்துகளைச் சட்ட விரோத அனுபோகத்தில் வைத்திருப்பது தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைப்பதற்கும் திருத்துவதற்கும் உரியதே இருப்புப்பாதைச் சொத்துச் (சட்ட விரோத அனுபோகம்) சட்டம் (The Railway Property Unlawful Possession Act, 1966) ஆகும். திருடப்பட்டிருப்பதாகவோ சட்ட விரோதமாகப் பெறப்பட்டிருப்பதாகவோ நியாயமாக ஐயப்படுகிற இருப்புப்பாதைச் சொத்து எதையும் அனுபோகத்தில் வைத்திருப்பவர் எவரும், தாம் அக்குற்றச்சாட்டினின்று விலக்குறுவதற்கு அச்சொத்துத் தம்முடைய அனுபோகத்திற்குச் சட்ட முறைப்படியாக வந்தது என மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு அவர் மெய்ப்பிக்கத் தவறினால், சட்ட விரோதமாக இருப்புப் பாதைச் சொத்தை வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுக்கால அளவிற்குச் சிறைப்படுத்தியோ அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதித்தோ தண்டிக்கப்படப்பெறுவார். இந்தச் சட்டத்திற்கு விரோதமான குற்றம் ஒன்றுக்கு வேண்டுமென்றே மறைமுக ஆதரவு தருகிற நிலம் அல்லது கட்டிடத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபோகதாரர் எவரும், அல்லது அந்த நிலத்தின் அல்லது கட்டிடத்தின் மேலாண்மையைத் தம் பொறுப்பில் கொண்டிருக்கின்ற எவரும், அல்லது அவர்தம் முகவர் எவரும், ஐந்தாண்டுகள் வரை நீடிக்கலாகும் ஒரு கால அளவிற்குச் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அவை இரண்டையும் சேர்த்துப் பெறுவார். இந்தச் சட்டத்தின்படியான குற்றம் கைது செய்தற்குரியது அல்லாதது (Non–Cognisable) ஆகும். ஆயினும், இருப்புப்பாதைப் பாதுகாப்புப் படையின் மேல் நிலை அலுவலர் அல்லது உறுப்பினர் எவரும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றம் ஒன்றில் தொடர்புடையவரை அல்லது தொடர்பு இருப்பதாக நியாயமான ஐயப்பாட்டிற்கு உரியவரை நடுவர் ஒருவரின் கட்டளையோ பிடியாணையோ இல்லாமல் கைது செய்யலாம். இச்சட்டத்தின்படி செய்யப்படுகிற சோதனைகள் மற்றும் கைதுகள் அனைத்தும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வகை முறைகளுக்கிணங்கச் செயற்பட வேண்டும்.