தொழிலியல் நோக்கங்களுக்காகப் பொதுவாகப் பயன் படும் மின் கலங்களின் மின்னாற் பகுபொருளாக அமிலம் அல்லது காரம் போன்ற நீர்மப் பொருள்கள் இடம் பெறும். ஆகவே, அவை ஈர மின் கலம் எனப் படும். ஆனால், எளிதாகக் கையாளக் கூடிய வகையிலும், எடுத்துச் செல்லும் வகையிலும் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும், விளக்குகளுக்கும், கருவிகளுக்கும் தக்க மின் கலங்கள் தேவை. அத்தேவையை ஈடு செய்யவே பசை மின் கலன்கள் (dry cell) பயன் படுகின்றன. பசை மின் கலத்தில் இரு துருவங்களாகத் துத்தநாகத் தகடும், உருண்ட கரித் துண்டும் பயன் படுகின்றன. துத்தநாகத் தகட்டில், வேதி மாறுபாட்டை உருவாக்கக் கூடிய அம்மோனியாப் பசை பூசப் பட்டிருக்கிறது. ஆகவே, அது பசை மின் கலம் எனப் படுகிறது. அம்மோனியாப் பசையே இதன் மின்னாற்பகு பொருளாகும். அடிப்படையில், இது லெக்லாஞ்சி மின் கலத்தின் கோட்பாட்டைக் கொண்டே உருவாக்கப் பட்டது எனலாம். ஒரு கை ஒளி விளக்கில், பசை மின் கலத்தை வைத்துப் பித்தானை அமுக்கினால், ஒளிக் குமிழில் உள்ள கம்பியின் மூலம் துத்தநாகத் துருவமும், கரித் துருவமும் இணைகின்றன.அப்போது, வேதிச் செயல்பாடு நிகழ்கிறது. துத்தநாகம், அம்மோனியாப் பசையில் கரையத் தொடங்கும். இதனால் உருவாகும் ஹைட்ரஜன், மாங்கனீஸ் டைஆக்சைடில் உள்ள ஆக்சிஜனுடன் கலந்து ஓரளவு நீராக மாறும். வேதி ஆற்றல் மின்னாற்றலாக மாற்றம் பெறுவதால், விளக்கு எரிகிறது. லெக்லாஞ்சி மின் கலம் முதல் வகை மின்கலமாக இருப்பதால், இது மீண்டும் மின்னேற்பு பெற்று பயன் தராது. மின் கலத்தில் உள்ள வேதிப் பொருள்கள் மின்னாற்றலாக மாறுவதற்குச் செலவிடப்பட்ட பின்னர், மின் கலம் வலிமையிழந்து விடும். எனவே, அதை அகற்றி விட்டு, வேறு புதிய பசை மின் கலத்தைப் பயன் படுத்துதல் வேண்டும். கை விளக்கு, அளவீட்டுக் கருவி, கடிகாரம், வானொலிப் பெட்டி, கையில் எடுத்துச் செல்லும் தொலைக் காட்சிப் பெட்டி ஆகிவற்றில் பசை மின் கலங்கள் பயன் படுகின்றன. தேவையான மின்னழுத்தத்திற்கு தக்க எண்ணிக்கையில், இம்மின் கலங்களைத் தொடர் இணைப்பில் பயன் படுத்த வேண்டும். —எஸ். சுந்தர சீனிவாசன்