கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாடு என்னும் ஊரினர்; மீனவர் வகுப்பைச் சேர்ந்தவர். தந்தை பெயர் தாமசு என்றி லேயோன். இவர் இயற்பெயர் சவியார் என்றி லேயோன். இவர் தம் இளம் பருவத்திலேயே தமிழ் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து விரைந்து செய்யுள் இயற்றும் திறம் பெற்றார். இவர்தம் செய்யுட்கள் கேட்பவர்களையும் படிப்பவர்களையும் இன்பமுறச் செய்தன. அதனால் இயற்பெயர் மறைய, இன்பகவி என்னும் காரணப்பெயரால் அழைக்கப் பெற்றார். இவருக்குச் சிங்கராய பரத பண்டிதக் கவிராயர் என்னும் வேறு பெயரும் உண்டு. இவர் எண்வகை நினைவாற்றல் கலையில் சிறந்தவராகத் திகழ்ந்தார். அதனால், இவரை அட்டாவதானி என்றும் அழைப்பர், சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த இவர், செல்வர்களைப் பாடிப் பரிசுபெறும் வாழ்க்கையை மேற்கொண்டார். இவரைத் தூத்துக்குடி மீனவர் தலைவன் தொன் கபிரியேல் வாசுகோமேசு அன்பு காட்டி ஆதரித்தான். இவர் இலங்கை முதலிய பலவிடங்களுக்கும் சென்று செல்வர்களைப் பாடிச் செல்வமும் புகழும் பெற்றார். ஒரு சமயம் எட்டையபுரத்திலுள்ள பெருநிலக்கிழார் ஒருவரைக் காணச் சென்றபொழுது அவரும் அவர்தம் தலைமைக் கணக்காயரும் மற்றவரும் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால், இவர் மட்டும் இருக்கையில்லாமல் நிற்க வேண்டியதாயிற்று. அவ்வேளை பெருநிலக்கிழாரைப் பார்த்து, ‘கங்கை குலத்தில் உடுத்த’ என்று தொடங்கி ‘இன்ப கவிக் கெங்கே இடம்’ என்று முடியும் ஒரு வெண்பாவினைப் பாடினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த பெரு நிலக்கிழார் இவருக்கு இருக்கை கொடுத்துப் பரிசும் அளித்தார். பிறகு, தஞ்சாவூர் சென்று சரபோசி மன்னரைக் கண்டார். அவர் அவையிற் கேட்கப்பட்ட வினாக்களுக்குச் செய்யுளாகவே விடையளித்தார். இதனைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் இவருக்குப் பரிசு கொடுத்துச் சிறப்பித்தார். இவர் காலப்போக்கில் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். ஆனால், இவர் குடித்திருக்கும்பொழுதும் நன்றாகப் பாடும் திறன் பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் ஓர் அன்பர் வீட்டிற்குச் சென்று தங்கியபோது நன்கு குடித்து மகிழ்ச்சியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அறிஞர் ஒருவர் குடிபோதையிலும் இவர் பாடும் திறமையை அறிய விரும்பி ‘மை’ என்று தொடங்கி ‘மயிர்’ என்று முடியுமாறு ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டார். உடனே இவர் ‘மையினமோ’ என்று தொடங்கி ‘இவள் கொண்டை மயிர்’ என்று முடித்து ஒரு வெண்பாப் பாடினார். இதனைக் கண்டு அங்கிருந்த பலரும் வியப்புற்றனர். யாழ்ப்பாணத்து நல்லூர்க் கந்தசாமி கோயிலில் நடக்கும் விழாவிற்குச் சென்ற இவர், அங்கு முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்டு மயிலூர்தியின் மேல் விளங்கிய காட்சி கண்டு மகிழ்ந்து, ‘மயில் வாகனங் கொண்டாண்டி, நல்லூர்க் கந்தசாமி மயில் வாகனங் கொண்டாண்டி’ என்னும் இசைப் பாடலைப் பாடினார். பாடலைப் பாடி முடித்தபிறகு, கிறித்தவராகிய நாம் இந்துக் கடவுளைப் பாடினோமோ என்று உளம் வருந்தினார் என்பது கூறப்படுகிறது. இவர் பிலிப்பு ரேட்ரிகோ முத்துக் கிருட்டிணர் மீது குறவஞ்சியும், தூத்துக்குடி பணியமாதா பேரில் பதிகமும் பாடியுள்ளார். இவற்றுள், பதிகம் அன்னை மரியின் புகழினைப் பாடுவதாக அமைந்துள்ளது. இவர் ஏசுநாதர் மீது இசைப்பா ஒன்றும் கிறித்தவச் சமயத்தைப் பற்றிச் சிவ நூல்களும் எழுதியுள்ளார்.