கட்டடங்களில் உள்ள சுவருக்கு வலுவூட்டவும் வளைவுகள், கவிமாடங்கள் (Arches) அல்லது கும்மட்டம் போன்ற பகுதிகளின் மேலுள்ள பளுவைத் தாங்கவும் கட்டப்படும் சுவரே உதைசுவர் (Buttress) எனப்படும். இரட்டைப் பறப்பு உதைசுவர் உரோமானியர்களின் கட்டடங்களிலேயே முதன் முதலில் வளைவுகள், கவிமாடங்கள், கும்மட்டங்கள் போன்றவை கட்டப்பட்டு, இவற்றின் பளு அழுத்தத்தைத் தாங்குதற்கு உதைசுவர்கள் அமைக்கப்பட்டன. உரோமானியர்களை அடுத்து உரோமானியக் கட்டடக் கலைப் பாணியைச் (Romenesque) சார்ந்த கட்டடங்களிலும் கோதிக்குக் (Gothic) கட்டடங்களிலும் உதைசுவர்கள் காணப்படுகின்றன. உதைசுவர் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, கோபுர அல்லது குத்தூண் (Pier) உதைசுவர்கள், பறப்பு (Flying) உதைசுவர்கள், இரட்டைப் பறப்பு (Double Flying) உதைசுவர்கள் எனப்படும். பறப்பு உதைசுவர்கள் கோதிக்குக் கட்டடங்களிலேயே முதன் முதலில் புகுத்தப்பட்டன. இங்கிலாந்து நாட்டிலுள்ள கோதிக்குத் திருச்சபைகளில் கோபுர அல்லது குத்தூண் வகை உதைசுவர்களே காணப்படுகின்றன. உதைசுவர்களை அமைத்துக் கட்டப்பட்டுள்ள கோயில்களுள் குறிப்பிடத்தக்க உரோமானியக் கோயில் பிரான்சிலுள்ள தயானாக் (Diana) கோயிலும் உரோமிலுள்ள பாந்தியன் (Pantheon) கோயிலுமாகும்.