இது சியோலைட் கனிமக் குழுவைச் சார்ந்த ஒரு கனிமமாகும். சாபசைட்(chabazite)நீர் சேர்ந்த கால்சிய அலுமினிய சிலிக்கேட் (Ca(AlSiO)6HO) ஆகும். அறுகோணப் படிகத் தொகுதியில் உருவாகும் இது, பொதுவாக எளிய சாய்சதுரப் படிகமாகவும், ஊடுருவிய இரட்டைப் படிகமாகவும் மிகுதியாகத் தென்படும். தெளிவற்ற கனிமப் பிளவை உடையது. கடினத் தன்மை 4—5 வரை வேறுபடும். அடர்த்தி 2.05—2.15 வரை உயரும். பளிங்கு மிளிர்வு கொண்டது; பொதுவாக வெண்மையான நிறத்தைக் கொண்டிருந்தாலும், மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு நிறங்களிலும் காணப்படும். படிக உருவில் சாபசைட், கால்சைட் கனிமத்தை ஒத்திருக்கும். இது நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் நுரையை உண்டாக்காது. எனவே, இதைக் கால்சைட்டிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். இதன் படிக அச்சு விகிதம் 1:1.086 ஆகும். ஒளி விலகல் எண் 1.470 —1.494 வரை வேறுபடும்; குறைந்த இரட்டைக் கதிர் ஒளி விலக்கமுடையது. இக்கனிமம் நேர் (+) அல்லது எதிர்மறை (-) ஒளிக் குறியை உடையது. இதிலுள்ள கால்சியம், சோடியம் ஆகியவற்றின் அளவு பெரிதும் வேறுபடும். இக்கனிமங்களில் பொட்டாசியமும் சிறிதளவு காணப்படும். பாகோலைட் என்னும் சாபசைட், திறமற்றதாகவும், நீண்ட உருவத்துடன் கூடிய அறுகோண இரட்டைப் படிகங்களை உடைய கனிமங்களாகவும் கிடைக்கிறது. சாபசைட் குழு மூன்று கனிமங்களைக் கொண்டது. அவை சாபசைட், சிமிலினைட், இலெவினைட் ஆகும். இக்கனிமங்கள் படிக இரட்டுறல் காரணமாக அறுகோணப் படிகத்தைப் போல் தோற்றமளிக்கும். சாபசைட், பசால்ட் மற்றும் அதனுடன் தொடர்பு கொண்ட பாறைகளில் உள்ள வெற்றிடங்களில் பூச்சாகப் படிந்து வளர்ந்திருக்கும். எரிமலைப்பாறைகளின் பொந்துகளில் முழுப்படிக உருவத்துடன் கால்சைட் கனிமத்துடன் காணப்படும். இது அயர்லாந்திலும், பாரோத் தீவுகளிலும், இத்தாலியிலுள்ள திரின்தினோவிலும், ஜெர்மனியிலுள்ள ஓபர்தீனிலும், தக்காணப் படிக்கட்டுப் பாறையிலும் காணப்படுகிறது. சாபசைட் அயனி மாற்றத்திற்கும், வளிமங்களை உறிஞ்சி ஒற்றிக் கொள்வதற்கும் மிகுதியாகப் பயன்படுகிறது. ஆனால் தற்போது செயற்கையான சியோலைட்டுகள் இத்துறையில் பெருமளவில் பயன்படுகின்றன. —இரா. இராமசாமி நூலோதி. L. G. Berry and B. Mason, <>Mineralogy. W.H Freeman & Co, San Francisco, 1961.