இனக்குழு வரலாறு
iṉakkuḻu varalāṟu
வாய்மொழி மரபுகள், வெளிநாட்டவரின் குறிப்புகள், மொழியியல், தொல்லியல் தரவுகள், ஏனைய தொடர்புடைய செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் இனக்குழுக்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தலே இனக்குழு வரலாறு (Ethnohistory).
வாய்மொழி மரபுகள், வெளிநாட்டவரின் குறிப்புகள், மொழியியல், தொல்லியல் தரவுகள், ஏனைய தொடர்புடைய செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் இனக்குழுக்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தலே இனக்குழு வரலாறு (Ethnohistory).
வரலாற்று ஆய்வுகள் முறையான வரலாறு (History Proper) எனவும், வரலாற்றுக்கு முன்னிலை வரலாறு (Prehistory) எனவும் முன்னர் வகைப்படுத்தப்பட்டன. முந்தையது எழுத்து மொழிகளைக் கொண்ட நாகரிகமுற்ற மக்கள் தொடர்பான வரலாற்றுச் செய்திகளையும், பிந்தையது நாகரிகம் அடைதற்கு முந்தைய காலத் தொல்குடிச் சமுதாயங்களைப் பற்றிய செய்திகளையும் ஆராயும் துறைகளாகும். எனவே, அன்றைய நிலையில் பழங்குடியினரின் வரலாற்றுத் தொடர்பான ஆய்வுகளுக்கு இடமில்லாமல் இருந்தது. இந்த ஆய்வு இடைவெளியை நிரப்பும் வகையில் தலைசிறந்த ஆய்வுப் பரப்பொன்று 1950–இல் தொடங்கி, இனக்குழு வரலாறு என அமெரிக்கப் பண்பாட்டு மானிடவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதுமுறை இனக்குழுவியல் (Ethnogrphy) பிற தரவுகளின் துணையுடன் அண்டை நாகரிகச் சமுதாயங்களின் ஆவணங்களைத் துணையாகக் கொண்டு, கல்வியறிவிற்கு முந்தைய மக்களின் (Preliterate People) வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யும் தன்மையது என்பார் சோவியத்து நாட்டு இனவிளக்கவியலாளர் பெர்சித்சு.
முதன் முதலில் தொடர்பு ஏற்பட்ட காலத்திலிருந்தே, ஐரோப்பியருக்கு அமெரிக்க இந்தியப் பழங்குடியினர் ஆவலைத் தூண்டும் இனக்குழுக்களாகவே காணப்பட்டனர். ஐரோப்பியரின் தொடர்புக்குப் பின், மண்ணின் மைந்தரான அமெரிக்க இந்தியப் பழங்குடியினரின் தோற்றம் அவர்தம் இடப்பெயர்ச்சி, சமுதாயப் பண்பாடு முதலான மாற்றங்கள், அமெரிக்க இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology) துறையில் ஒரு வரலாற்று அணுகுமுறைக்கு வித்திட்டன. அமெரிக்காவில் மானிடவியல் துறை பல்லோராலும் ஏற்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க இந்தியப் பழங்குடியினர் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டனர். ஒரு காலத்தில் பாதுகாப்புடனும் வலிவுடனும் காணப்பட்ட அமெரிக்க இந்தியப் பழங்குடியினரின் சமுதாயங்கள், கட்டுக்கோப்புக் குலைந்து, முழுதும் அழிவுற்றுவிடும் என்று அஞ்சத்தக்க நிலையில் இருப்பதைத் தொடர்புடையோர் உணர்ந்தனர்.
குறிப்பாக, மானிடவியலாளர் துயர் களையும் பணியில் ஈடுபடுவதோடமையாமல் முந்தைப் பழங்குடியினர் வாழ்க்கை, மரபுகள் ஆகியன முழுதும் மறைந்தொழிவதற்கு முன்பாக அவற்றை முடிந்த மட்டில் பாதுகாத்து வைத்திட ஆர்வம் காட்டினர். இந்நிலையில் முகிழ்த்ததே இனக்குழு வரலாற்று ஆய்வுப் பார்வை.
ஒரு சமுதாயத்தைச் சார்ந்த அகவை முதிர்ந்தோருடன் நேர் காணல், பழைய மடல்கள், பருவ இதழ்கள், நாட்குறிப்பேடுகள் ஆகிய எவ்வகையான தொடர்புடைய ஆவணங்களையும் துணைக் கொள்ளல், தொல்லியல் செய்திகள், மரபுக் கதைகள் (Legends) உள்ளிட்ட வாய்மொழி இலக்கியங்களை விளக்கிக் காட்டுதல் ஆகியவை இனக்குழு வரலாற்று ஆய்வின் கண் அடங்கும். சி.ம.
துணை நூல்கள்
Garbarino. S., Socio–Cultural Theory in Anthropology: A short History (Baic Anthropology Units), Holt, Rinehart & Winston Inc. New York, 1977.
Hudson, C., Folk History and Ethnohistory, In Ethnohistory, Vol. 13, Bloomington, 1966.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 588)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8grdjcb/
தமிழ்“இனக்குழு வரலாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y8grdjcb/APA
Oliyon Research. (2026). இனக்குழு வரலாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y8grdjcb/MLA
"இனக்குழு வரலாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y8grdjcb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment