ஒரு கூட்டுப் பங்கு நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த மூலதனத் தொகையில் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியையும் அதற்குரிய உரிமைகளுடனும், பொறுப்புகளுடனும் தன்னகத்தே கொண்டவை ‘பங்குகள்’ (Shares) எனக் கூறப்படுகின்றன. இப்பங்குகளின் வகைகள், வெளியீட்டு முறை, பங்குதாரரின் உரிமை, பொறுப்பு, பங்கு மாற்றம், பங்கினுடைய ஆதாயம் போன்ற செய்திகள் யாவும் 1956–இல் ஏற்பட்ட கூட்டுப்பங்கு நிறுவனங்களின் சட்டத்தில் காணப்படுகின்றன. இச்சட்டம் பங்குகளை முன்னுரிமைப் பங்குகள் (Preference Shares), ஒப்புரவுப் பங்குகள் (Equity Shares) என இருவகைப்படுத்துகிறது. முன்னுரிமைப் பங்குகள் இவ்வகைப் பங்குகளுக்குச் சிறப்பாக இரண்டு முன்னுரிமைகள் உண்டு. (1) நிறுவனத்தின் ஆதாயத் தொகையினை ஒப்புரவுப் பங்குதாரருக்குப் பிரித்துக்கொடுக்கும் முன்னர், ஒரு குறிப்பிட்ட விழுக்காடு ஆதாயத்தை முன்னுரிமைப் பங்குதாரர்கள் பெற்றுக்கொள்ளும் முன்னுரிமையையுடையது. (2) ஒரு நிறுவனம் கலைக்கப்படும்போது அதனுடைய சொத்துகள், வருமானங்கள் ஆகியவற்றிலிருந்து முன்னுரிமைப் பங்குதாரர்கள் தங்களது மூலதனத் தொகையினைத் திரும்பப் பெற்றிடும் முன்னுரிமையும் உடையது. முன்னுரிமைப் பங்குகளில் ஏழு வகையான உட்பிரிவுகள் உண்டு. 1) குவிந்திடும் முன்னுரிமைப் பங்கு இவ்வகையான பங்குகளுக்குக் குறிப்பிடப்பட்ட ஆதாய விழுக்காடு குவிந்து கொண்டே (Cumulative) வரும். அறிவிக்கப்பட்ட ஆதாயப் பங்கு முன்னுரிமைப் பங்குதாரருக்கு அவ்வப்போது முழுமையாகக் கொடுக்கப்படாவிடின், அவை குவிந்து கொண்டே செல்லும். பின்வரும் ஆண்டுகளில் பிற பங்குதாரர்களுக்கு ஆதாயத்தைப் பிரித்துக் கொடுக்குமுன், குவிந்திடும் முன்னுரிமைப் பங்குதாரர்களுக்கு முன்னரே குவியப் பெற்ற ஆதாயப் பங்கினை முத- லில் கொடுக்க வேண்டும். ஆனால், கூட்டுப் பங்கு நிறுவனம் போதுமான ஆதாயத்தை ஈட்டாவிடின், ஆதாயப் பங்கினை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. 2) குவிந்திடாத முன்னுரிமைப் பங்கு இவ்வகைப் பங்கு முன்சொல்லப்பட்ட குவிந்திடும் முன்னுரிமைப் பங்கிற்கு நேர் மாறானது, ஆதாயப் பங்கு குவிந்து கொண்டே செல்லும் முறை இதனிற் கிடையாது. கூட்டுப்பங்கு நிறுவனத்தின் குழு அமைப்பு விதிகளில் காணப்படும் கருத்துகளுக்கு ஏற்ப, ஆதாயப்பங்கு குவியும் பிரிவினைச் சேர்ந்ததா, குவியாப் பிரிவினைச் (Non Cumulative) சேர்ந்ததா என முடிவு கட்ட இயலும். குறிப்பாக எவ்விதக் கருத்தும் குழு அமைப்பு விதிகளில் காணப்படாவிடின் அவை யாவும் குவியும் முன்னுரிமைப் பங்குகளாகவே அமையும். 3) பங்கேற்கும் முன்னுரிமைப் பங்கு வழக்கமாக அறிவிக்கப்பட்ட ஆதாயத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட லிழுக்காடு முன்னுரிமைப் பங்குகளுக்கு ஆதாயப் பங்காக வழங்கப்படும். பின்னர் அறிவிக்கப்பட்ட விழுக்காட்டின்படி ஒப்புரவுப் பங்குதாரர்களுக்குரிய ஆதாயப் பங்கு கொடுக்கப்படும். அதன் பின்னரும் மிகுதியாக எஞ்சிய ஆதாயம் இருப்பின், அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட விகிதப்படி பங்கேற்கும் முன்னுரிமைப் பங்குதாரர்களுக்கும், ஒப்புரவுப் பங்குதாரர்களுக்கும் பிரித்து வழங்கப்படும். இவ்வகையில் மிகுதியான ஆதாயப் பங்கில் பங்குகொள்ளும் உரிமையினையுடைய பங்கு முன்னுரிமைப் பங்கு (Participating Preference Shares) எனப்படுகிறது. 4) பங்கேற்க இயலா முன்னுரிமைப் பங்கு முன்னுரிமைப் பங்குதாரர்களுக்கும் ஒப்புரவுப் பங்குதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்ட ஆதாயப் பங்கிலிருந்து ஒப்புக்கொண்ட முறைப்படி ஆதாயப் பங்கு வழங்கப்பெற்ற பின், எஞ்சிய ஆதாயத்தில் பங்கேற்கும் உரிமை இவ்வகைப் பங்குதாரர்களுக்குக் கிடையாது. இத்தகைய பிரிவு, பங்கேற்க இயலா முன்னுரிமைப் பங்கு (Non–Participating Preference Shares) எனப்படுகிறது. 5) மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்கு இவ்வகைப் பங்குதாரர்கள் (Convertible Preference Shares) தங்களின் பங்குகளை ஒப்புரவுப் பங்குகளாக மாற்றிக் கொள்ளத்தக்க உரிமையினைப் பெறுகின்றனர். இவ்வுரிமையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்திட வேண்டும். 6) மாற்ற முடியா முன்னுரிமைப் பங்கு இவ்வகைப் பங்குதாரர் (Non–Convertible Preference Shares) தங்களின் பங்குகளை ஒப்புரவுப் பங்குகளாக மாற்றிக் கொள்ளும் உரிமை இல்லாதவராக இருப்பர். 7) திரும்பப் பெறும் முன்னுரிமைப் பங்கு நிறுவனத்தின் குழு அமைப்பு விதிகளில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அவ்வனுமதியின்படி இவ்வகைப் பங்குதாரர்கள் (Redeemable Preference Shares) தமது பங்கு மூலதனத்தைத் திரும்பப் பெறும் உரிமையுடையவராவர். இப்பங்கு மூலதனத்தைத் திரும்பப் பெற்றிடக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளாவன: (அ) திரும்பப் பெறும் முன்னுரிமைப் பங்குகளுக்குச் செலுத்தப்படவேண்டிய முழுப் பங்குத்தொகையும் நிறுவனத்திற்குக் கட்டப்பட்டு இருக்க வேண்டும். (ஆ) திரும்பக் கொடுக்கப்படும் பங்கு மூலதனம் ஒரு குறிப்பிட்ட கூட்டுப்பங்கு நிறுவனம் தான் ஈட்டிய ஆதாயத்தில் அறிவிக்க இருக்கும் ஆதாயப் பங்கிலிருந்துமட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (இ) பங்கு மூலதனத் தொகையினைத் திரும்பக் கொடுத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், இதற்கெனப் புதியதாக வெளியிடப்பட்ட பங்கு மூலதன உள்வரவுத் தொகையினின்று கொடுக்கப்படும். (ஈ) ஈட்டப் பெற்ற ஆதாயத்திலிருந்து திரும்பப் பெறும் முன்னுரிமைப் பங்கின் மூலதனத் தொகையினைத் திருப்பிக் கொடுக்கும்போது அத்தொகைக்கு ஈடான சம தொகையினைத் தனியாக ஒரு கணக்குத் தொடங்கி அதனில் வரவு வைத்துக் காத்திடல் வேண்டும். இப்புதிய கணக்கு ‘மூலதனத் திரும்ப ஒதுக்கீட்டுக் கணக்கு’ (Capital Redemption Reserve Accounts) எனச் சொல்லப்படும். இரண்டாம் முக்கிய பங்கு ஒப்புரவுப் பங்கு ஆகும். இப்பங்கு வெளியீட்டினால் ஒரு நிறுவனம் பேரளவு மூலதனத்தைப் பெற முடிகிறது. இப்பங்குதாரர்கள் ஒரு கூட்டுப்பங்கு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவர். நிறுவனம் சில காலத்தில் அல்லலுற நேரிடலாம். அக்காலங்களில் இப்பங்குதாரர்களுக்கு எவ்வித ஆதாயப் பங்கும் கிடைக்காமற் போகக் கூடும். அதே நிறுவனம் வளமும் நற்பேறும் பெற்றிடும் காலங்களில் அதன் பெரும் பயனைப் பெறுபவர்கள் இப்பங்குதாரர் ஆவர். இடர்தாங்கல்களினால் (Risk takings) ஏற்க வேண்டிய இன்னல்கள் பல இருப்பினும், அதனால் பெறக்கூடிய வளமும் மிகுதியாக ஒப்புரவுப் பங்கில் உண்டு. வாணிக மொழியில் இக்கருத்தினைத் ‘தாங்கிட வேண்டிய இழப்பைவிட ஆதாயம் மிகுதியாகக் கிடைத்திடப் பெரும் வாய்ப்புண்டு’ எனக் கூறுவர். ஒப்புரவுப் பங்குகளின் சிறப்பியல்புகள் பல: (1) இப்பங்குதாரர்களின் பொறுப்புகள் வரையறைக்குட்பட்டவை. தாங்கள் ஏற்க வேண்டிய பொறுப்- பின் அளவு, அவர்கள் எடுத்துக்கொள்ளும் ஒப்புரவுப் பங்குகளின் தொகையினை மிஞ்சாது. (2) இப்பங்குதாரர் தம் பங்குகளையும், அதன் உரிமைகளையும் மற்றவருக்கு மாற்றிக் கொடுக்கும் உரிமை உடையவராவர். (3) நிறுவனத்தின் வளர்ச்சி அல்லது இன்னல்களுக்கு ஏற்ப இப்பங்குகளின் உள்மதிப்பு உயரும் அல்லது குறையும். (4) இப்பங்குகளின் மூலதனத் தொகையினைக் குறைவான வருவாய் உடையோரும் தமது சேமிப்பினின்று சிறுகச் சிறுகச் செலுத்திப் பெறலாம். இப்பங்குகளின் முகமதிப்பு உரூ. 10,50,100 எனப் பல்வேறு வகையிலில் வெளியிடப்படும். பங்குகள் வெளியிடும் முறை கூட்டுப்பங்குப் பொது நிறுவனம் தனக்கு அனுமதிக்கப்பட்ட மூலதனத்தைத் திரட்டத் தகவல் தொகுப்பு அறிக்கையினை ஓர் அழைப்பிதழாகப் பொதுமக்களுக்கு வெளியிடும். இதனை வெளியிடும்முன், நிறுவனம் முன்னெச்சரிக்கையாகக் கீழ்க்காணும் கருத்துகளை மனத்திற்கொண்டு செயற்பட வேண்டும். (1) நிறுவனம் தன் பங்குகளை மூலதன அங்காடியில் இருப்பு மாற்றகம் (Stock Exchange) வழியாக விற்பனை செய்திடுமுன் பங்குகளுக்கு நிலவிவரும் தேவையினையும், முதலீடு செய்திட முன்வரும் மக்களின் மனப்பாங்கினையும், அரசினரின் நாணய வருவாய்க்குரிய கொள்கைகளையும் கவனத்தில் கொண்டு அறிதல் வேண்டும். (2) மூலதன வெளியீட்டுச் சட்டம் (கட்டுப்படுத்துதல்) 1947–இன்படி அனைத்துக் கூட்டுப்பங்கு நிறுவனங்களும் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனைக்கு வெளியிடுமுன், மூலதன வெளியீட்டுச் செயலினை ஒழுங்குபடுத்துபவரின் அனுமதியைப் பெறுதல் வேண்டும். (3) பங்குகளை வெளியிடும் கூட்டுப்பங்கு நிறுவனம் தனது வங்கியுடன் ஒப்பந்தம் செய்து, அவ்வங்கி முதலீடு செய்ய விரும்பும் மக்களிடமிருந்து விண்ணப்பப் பணம் பெற்று, அதற்கெனத் தனியே ஒரு கணக்கினைத் தொடங்கி, அதிலிருந்து பெறப்படும் பணத்தினை வரவு வைத்துக் காத்திடும் பொறுப்பினைச் செம்மையாகச் செய்யவேண்டும். (4) செலுத்தப் பெறும் விண்ணப்பப் பணம் வெளியிடப்பெற்ற பங்கின் முகமதிப்பினில் 5 விழுக்காட்டிற்குக் குறையாமல் இருக்கவேண்டும். (5) விண்ணப்பித்திடக் குறிப்பிட்ட இறுதிநாள் முடிந்தவுடன் பங்குகளுக்குரிய விண்ணப்பப் பணம் பெறுவது நிறுத்தப்பட்டு, அச்செய்தி விளம்பரக் கருத்தாகச் செய்தித் தாள்களில் கொடுக்கப்படவேண்டும்; அல்லது கடைசி நாள் முடிவடையும் முன்னரே, வெளியிட்ட பங்குகளுக்கு மேல் பங்குகளைக் கேட்டு விண்ணப்பங்கள் வருமாயினும், மேலே சொன்ன விளம்பரக் கருத்து நாள் ஏடுகளில் இடம்பெற வேண்டும். (6) பங்குகளை விண்ணப்பதாரர்களிடையே ஒதுக்கீடு செய்திட, நிறுவனத்தின் இயக்குநர்கள் முடிவுகளை நிறைவேற்ற வேண்டும். அதனையடுத்துப் பங்குகளுக்கு முழுமையாக ஒதுக்கப்பட்ட விவரம், அல்லது முழுமையின்றிப் பகுதியாக ஒதுக்கப்பட்ட விவரம் ஆகியவற்றை விண்ணப்பம் செய்தவர்களுக்குக் கடிதம் வழியாகக் கால தாமதம் இன்றி அறிவித்திட வேண்டும். இத்தகைய கடிதம் ‘ஒதுக்கீட்டு மடல்’ (Letter of Allotment) எனப்படும். பங்குகளுக்கு நிறுவன இயக்குநர்களால் எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படாவிடின், அச்செய்தியும் பங்கு கேட்டு விண்ணப்பம் செய்தவருக்குக் கடித வழியாக அறிவிக்கப்பட வேண்டும். இக்கடிதம் ‘இயலாமை மடல்’ (Letter of Regret) எனச் சொல்லப்படுகிறது. பங்குகளை முகமதிப்பினின்றும் கூடுதல் தொகைக்கு அல்லது கழிவுத்தொகைக்கு வெளியிடுதல் கூட்டுப்பங்கு நிறுவனம் தான் ஈட்டிய புகழ், நற்பெயர், தனது உழைப்புத் திறன், தான் அறிவித்த ஆதாயப்பங்கு ஆகியவற்றைப் பக்கபலமாகக் கொண்டு, இவற்றின் மதிப்பினில் ஆதாயம் அடைந்திட வெளியிட்ட பங்குகளை அதன் முகமதிப்பினின்று கூடுதல் தொகையினையும் சேர்த்து மிகுதியான தொகைக்குப் பொதுமக்களுக்கு வெளியிடுவதுண்டு. எடுத்துக்காட்டு: ஒரு ஒப்புரவுப் பங்கின் முகமதிப்பு உருபாய் 10 – ஆனால், நிறுவனம் தான் ஈட்டிய நற்பெயரினைக் கொண்டு கூடுதல் தொகையாக ஒவ்வொரு பங்கிற்கும் உருபாய் 2–ஐச் சேர்த்து மொத்த விலைத்தொகை உரூபாய் 12–க்கு வெளியிடக் கூடும். இதற்கு நேர்மாறாக, நிவறுனங்களின் சட்டம் 1956, பிரிவு 79–இன்படி ஒரு நிறுவனம் தன் உறுப்பினர்கள் கூட்டத்தில் தேவையான முடிவுகளை (Decisions) நிறைவேற்றியும், நிறுவனச் சட்டக் குழுவின் அனுமதி பெற்றதும் பங்குகளை அதன் முகமதிப்பினின்று விலையைக் குறைத்து, கழிவுத் தொகையினில் வெளியிட வழி வகுக்கிறது ஆனால், நடைமுறையில் பெரும்பாலும், ஒரு நிறுவனம் தன் பங்குகளைக் கழிவுத் தொகையில் வெளியிட முடியாது. பங்குச் சான்றிதழ் ஒதுக்கீடு செய்யப்பெற்ற பங்குகளுக்குக் குறிப்பிட்ட முதலீட்டாளர் பங்குதாரர் ஆகிறார். பங்குகள் ஒதுக்கீடு செய்த நாளிலிருந்து மூன்று மாதக் காலத்திற்குள் ஒவ்வொரு பங்குதாரர்க்கும் பங்குச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். அப்பங்குச் சான்றிதழில் பின்வரும் செய்திகள் எழுதப்பட்டு, நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பெறும். அ. நிறுவனத்தின் பெயர், முகவரி, பதிவு அலுவலக முகவரி; ஆ. சான்றிதழில் தொடர் வரிசை எண்; இ. பங்குதாரரின் பெயர், முகவரி; ஈ. பங்குகளின் எண்ணிக்கை, எவ்வகையான பங்கு; உ. பங்குகளுக்கெனக் கொடுக்கப்பட்ட சிறப்பு எண்; ஊ. பங்கின் முகமதிப்பு, செலுத்தப்பட்ட தொகை; எ. பங்குச் சான்றிதழ் வெளியிடப்பட்ட தேதி. பங்குப் பண அழைப்பு முறை பங்குதாரர்கள் தாங்கள் வாங்கிக் கொண்ட பங்குகளின் மொத்த விலைத் தொகையினைச் சிறு சிறு தொகையாக நிறுவனத்திற்கு வங்கி மூலம் செலுத்தும் வசதியினைப் பெற்றிட, ஒவ்வொரு பங்கின் மொத்த விலைத் தொகையும் பின்வரும் முறையில் பிரிக்கப்படுகிறது. 1. பங்கு விண்ணப்பத் தொகை; 2. பங்கு ஒதுக்கீட்டுத் தொகை; 3. பங்கின் முதல் பண அழைப்பு; 4. பங்கின் இரண்டாம் பண அழைப்பு; 5. பங்கின் இறுதிப் பண அழைப்பு. ஒவ்வொரு பண அழைப்பிற்கும் முன்பாக, அதற்கு முடிவுகள் நிறுவனத்தில் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு பங்குதாரர்க்கும் அவரவர் செலுத்த வேண்டிய தொகை குறிக்கப்பெற்றுப் பண அழைப்பு மடல் அனுப்பி வைக்கப்படும். பங்குப் பறிமுதல் இம்மடலில் குறிக்கப்பட்ட தொகையினை நிறுவனத்தின் வங்கி மூலம் குறிப்பிட்ட தேதிக்குள் பங்குதாரர் செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய தொகையினைப் பங்குதாரர் செலுத்தத் தவறினால், அவரால் பண அழைப்புச் செலுத்தப் பெறாத பங்குகளை மட்டும் பறிமுதல் (Forfeiture of Shares) செய்திடும் உரிமையை ஒரு நிறுவனம் பெறுகிறது. பங்கு பறி முதல் சட்ட விதிகளின்படி செயற்படுவதால், இச்செயல் தண்டனை வழங்கும் வழியாக அமைகிறது. பங்கு பறிமுதல் செய்யுமுன், அச்செய்தியைக் கடிதம் மூலம் நிறுவனம் பங்குதாரருக்கு அனுப்பி வைக்கும். இதன் பின்னரும் பங்குதாரர் பங்கு அழைப்புப் பணம் செலுத்தத் தவறினால், அவருக்குரிய பங்குகளில் கட்டப்படாத பங்குகள் மட்டுமே பறிமுதல் செய்யப்படும். பங்கு மீது பற்றூண் உரிமை பங்குதாரர் நிறுவனத்திற்குத் திரும்பச் செலுத்த வேண்டிய கடன், ஏற்றுக்கொண்ட பொறுப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றிடத் தவறினாலும், நிறுவனம் தனது குழு அமைப்பு விதிகளின்படிப் பங்குதாரர்களின் பங்குகளின்மீது முதல் பற்றூண் உரிமை (Lien on share) பெறுகிறது. இப்பற்றூண் உரிமையின் விளைவாக, நிறுவனம் பங்குமீது கொடுக்க வேண்டியிருக்கும் ஆதாயப்பங்கு போன்றவற்றை முடக்கி வைத்திடும் உரிமையைப் பெறுகிறது. பங்குச் சரணடைவு பங்குதாரர் தம் பங்குகளின் அழைப்புப் பணத்தொகையினைத் தம்மால் செலுத்த முடியாத நிலைமையை உணர்ந்து, குழு அமைப்பு விதிகளில் கூறப்பட்ட முறையில் முழுமையாகச் செலுத்த முடியாத பங்குகளை நிறுவனத்திடம் சரணடைவு செய்திட வழி உண்டு. பங்குகளை நிறுவனம் பறிமுதல் செய்திட வாய்ப்பு ஏற்படும் காலத்தில் மட்டுமே, இச்சரணடைவு ஏற்கப்படும். மற்ற காரணங்களால் செய்த பங்குச் சரணடைவு சட்டப்படி செல்லாது. பங்குகளின் உரிமை மாற்றீடு அசையும் சொத்துகளின் உரிமையை அதன் உரிமையாளர் மற்றொருவருக்கு உரிமை மாற்றீடு செய்து கொடுக்க முடியும். அத்தகைய முறையைப் பின்பற்றிப் பங்குதாரர் தமது பங்குகளையும் பிறருக்கு உரிமை மாற்றீடு செய்திட முடியும். உரிமை மாற்றீட்டு ஆவணத்தில் உரிமை மாற்றீடு செய்பவரும் செய்யப்படுபவரும் கையொப்பம் இட்டுத் தேவையான முத்திரையும் ஒட்டி மாற்றுதலுக்குரிய பங்குச் சான்றிதழ்களுடன் நிறுவனத்திடம் சேர்க்க வேண்டும். உரிமை மாற்றீடு செய்பவர் பெயர், முகவரி யாவும் பங்குப்பதிவு ஏட்டினிலிருந்து நீக்கப்பட்டு, உரிமை மாற்றீடு செய்யப்பட்டவரின் பெயர், முகவரி முதலானவை பதிவு செய்யப்படும். பங்குகளின் ஒப்படைப்பு மாற்றீடு பங்குதாரர் இறந்துவிட்டால் அல்லது தகுதியற்றவர் என முடிவு செய்யப்பட்டால் பங்குகளின் ஒப்படைப்பு மாற்றீடு (Transmission of Shares) நிகழ்ந்திடச் சட்டம் வழி வகுக்கிறது. ஒப்படைப்பு மாற்றீடு என்பது இறந்த போன பங்குதாரரின் சட்டபூர்வமான வாரிசு உரிமையாளரிடம் அப்பங்குகளின் உரிமையினை ஈந்து, உரிமையாளரையே பங்குதாரராக அந்த வாரிசு மாற்றும் வழி முறையாகும். பங்கு உரிமைச் சீட்டு பங்குதாரர்கள் தங்களின் பங்குச் சான்றிதழ்களை மற்றொருவர் கையினில் கொடுத்து, உடனடியாக அதன் உரிமையையும் மாற்றிக் கொடுத்திடும் வசதியினைப் பெற்றிடப் பங்கு உரிமைச் சீட்டு ஆவணம் (Share Warrant) நிறுவனத்தால் வழங்கப்படும். முழுமையாகச் செலுத்தப்பட்ட பங்குகளை மட்டுமே நிறுவனத்திடம் கொடுத்து, அவற்றிற்குப் பதிலாகப் பங்கு உரிமைச் சீட்டு என்ற ஆவணத்தைப் பெற முடியும். இப்பங்கு உரிமைச் சீட்டு நிறுவனத்தின் முத்திரையினைக் கொண்டிருக்கும். ஆனால், பங்குதாரர் பெயரும் முகவரியும் குறிக்கப்படமாட்டாது. மேலும் பங்கு உரிமைச் சீட்டாகத் தமது பங்குகளை மாற்றிக் கொண்டவர் பெயரும் பங்குப் பதிவு ஏட்டிலிருந்து நீக்கப்படும். இப்பங்கு உரிமைச் சீட்டினை வைத்திருப்பவரே அதனிற் குறிக்கப்பெற்ற பங்கு எண்ணிக்கைக்கும் ஆதாயப் பங்கைப் பெற்றுக் கொள்ளுதற்கும் உரிமை உடையவராகப் கருதப்படுவார். மிகை ஊதியப் பங்கு ஒரு கூட்டுப்பங்கு நிறுவனம் ஒவ்வோராண்டு முடிவிலும் தான் ஈட்டிய முழு ஆதாயத்தையும் ஆதாயப் பங்காக அறிவிக்காது. அறிவித்த ஆதாயப்பங்கு வழங்கப்பட்டபின் எஞ்சியுள்ள ஆதாயத்தை நிறுவனம் தனது ஒதுக்கீட்டுக் கணக்கினில் வரவு வைத்து அதனைப் பாதுகாக்கும். நிறுவனத்தின் குழு அமைப்பு விதிகளின்படி, நிறுவனம் தனது ஒதுக்கீட்டுக் கணக்கினில் உள்ள வரவுத் தொகையினைப் பங்கு மூலதனமாக மாற்றிட வழியுண்டு. இவ்வொதுக்கீட்டுக் கணக்கினில் உள்ள தொகைக்கு ஏற்ப, பங்குப் பதிவேட்டில் பதிவுபெற்ற பங்குதாரர்களுக்கு ‘மிகையூதியப் பங்கு’ (Bonus Share) என்ற முறையில் பங்குகளை வெளியிடும். இம்முறையில், ஒதுக்கீட்டுக் கணக்கினில் உள்ள வரவினை நிறுவனம் தனது பங்கு மூலதனமாக மாற்றி, மிகையூதியப் பங்குகள் எனப் பெயரிட்டுத் தனது பங்குதாரர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் எஞ்சிய ஆதாயம் நிறுவனத்தின் மூலதனமாக மாறுகிறது. முற்படு விலைக்கோள் உரிமை நிறுவனம் தனது புதிய பங்குகளை மூலதனச் சந்தையினில் பொதுமக்களுக்கு வெளியிடுமுன், பங்குப் பதிவேட்டினில் பதிவுபெற்ற பங்குதாரர்களுக்கு அப்புதிய பங்குகள் மீது முற்படு விலைக்கோள் உரிமை (Pre–emptive Right) கிடைக்கிறது. முற்படு விலைக்கோள் உரிமை என்பது பங்குதாரர் ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெளியிட இருக்கும் புதிய பங்குகளைத் தாங்களே வாங்கிடும் உரிமையினைக் குறிப்பதாகும். இவ்வுரிமையைப் பயன்படுத்தி வாங்கப்பெற்ற பங்குகளை முற்படு உரிமைப்பங்கு எனக் கூறுவர். இவ்வுரிமையைப் பங்குதாரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தாவிடின், அப்புதிய பங்குகள் பொது மக்களுக்கு வெளியிடப்படும். இருப்பு முழுமையாகச் செலுத்தப்பட்ட பங்குகளை ஒன்று சேர்த்துக் கிடைக்கும் கூட்டுத்தொகைக்குரிய பங்குச் சான்றிதழ்களை நிறுவனத்திடம் ஒப்படைத்து, அதற்கு ஈடாக ஒரே சான்றிதழ்–இருப்புச் சான்றிதழைப்–பெற்றுக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டு: ஒரு பங்குதாரர் ஒரு பங்கின் முகமதிப்பு உரூபாய் 10 என ஆயிரம் பங்குகளுக்குரிய பங்குச் சான்றிதழ்களை நான்கு சான்றிதழ்களாக வைத்துள்ளார். ஒவ்வொரு சான்றிதழும் உரூபாய் 2500 மதிப்புடையதாகவோ வெல்வேறு மதிப்புடையதாகவோ அமைந்துக் கூட்டுத் தொகை உரூபாய் 10,000 ஆக இருந்திட வாய்ப்புண்டு. தன்னிடம் உள்ள உரூபாய் 10,000 மதிப்பிற்குரிய நான்கு சான்றிதழ்களையும் நிறுவனத்திடம் ஒப்படைத்து, அதற்குப் பதில் சான்றிதழாக ஒரு இருப்புச் சான்றிதழ் உரூபாய் 10,000க்குப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பங்குச் சான்றிதழ்கள் யாவற்றையும் இணைத்து அதன் மொத்தக் கூட்டுத்தொகையினை ஓர் இருப்புச் சான்றிதழாக மாற்ற முடியும். இம்முறையில் பங்குகளை இருப்பாக மாற்றிட, ஒப்படைக்கப்படும் பங்குகள் யாவும் முழுமையாகப் பணம் செலுத்தப்பட்டிருத்தல் இன்றியமையாதது ஆகும். பங்குகள் இருப்புகளாக மாற்றப்பட, அப்பங்குகளின் மீது செலுத்தப்பட வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்பட்டது என நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின் இருப்புகளாக மாற்றிக் கொடுக்கப்படுகின்றன. முழுமையாகச் செலுத்தப்பட்ட பங்குகளை மட்டுமே இருப்புகளாக மாற்ற முடியும். பங்குதாரருக்கு இருக்கும் ஆதாயப்பங்கு பெறுவதற்கான சிறப்பு உரிமை, நிறுவனக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உரிமை ஆகிய யாவும் இருப்புகளாக மாற்றப்பட்டு, அதனை வைத்திருக்கும் இருப்புதாரரே பெறுவார். இருப்பிற்கும் பங்கிற்கும் உள்ள வேறுபாடுகள் (1) பங்கிற்குக் குறிப்பிட்ட முகமதிப்பு உண்டு; இருப்பிற்குக் குறிப்பிட்ட முகமதிப்பு இல்லை. (2) இருப்பு முழுமையாகச் செலுத்தப்பட்ட ஒரு பங்கின் அல்லது பல பங்குகளின் கூட்டுத் தொகையாகும்; ஆனால் பங்கு முழுமையாகச் செலுத்தப்பட்டதாகவோ இன்னும் செறுத்தப்பட வேண்டிய தொகை இருக்க, பகுதி மட்டும் செலுத்தப் பெற்ற பங்குகளாகவோ இருக்க முடியும். (3) ஒவ்வொரு இருப்பினையும் முழுமையாகவோ சிறு சிறு பகுதியாகவோ பிறருக்கு மாற்றீடு செய்திட முடியும்; ஆனால், பங்குகளை வைத்திருக்கும் பங்காளர் மாற்றீடு செய்யும் காலத்தில் ஒவ்வொரு பங்கையும் முழுமையாகத்தான் கொடுக்க முடியும். எடுத்துக்காட்டு: இருப்புதாரர் தாம் கொண்டுள்ள உரூபாய் 1000 இருப்பினில் உரூபாய் 545 மதிப்புள்ள இருப்பினை மட்டும் பிறருக்கு மாற்றீடு செய்திட முடியும். ஆனால், பங்குதாரர் தாம் வைத்துள்ள உரூபாய் 1000 பங்குகளில் (ஒன்றின் முகமதிப்பு உருபாய் 10 ஆகும்) 54½ பங்குகளை மதிப்பு உரூபாய் 545 பிறருக்கு மாற்றித் தர இயலாது. முழு எண்களான 10, 12, 27, 50, 75 பங்குகள் என்ற எண்ணிக்கையில் மட்டுமே பங்குதாரர் தமது பங்கினைப் பிறருக்கு மாற்றீடு செய்திட முடியும் (4) பங்குகளை வைத்திருப்பவர் பங்குதாரர் எனவும், இருப்புகளை வைத்திருப்பவர் இருப்புதாரர் எனவும் சொல்லப்படுகின்றனர். (5) ஒவ்வொரு பங்கிற்கும் அதனதன் பங்குச் சான்றிதழில் தனித்தனிச் சிறப்பு எண் கொடுக்கப்படும்; ஆனால், ஒவ்வொரு இருப்புக்கும் தனித்தனி எண் கிடையாது. (6) ஒரு நிறுவனம் வெளியிட்ட பங்கின் முகமதிப்பு ஒரே சீரான மதிப்புடையதாக விளங்கும்; ஆனால், ஒவ்வொரு இருப்பின் முகமதிப்பும் மாறுபட்ட தொகையுடையதாய் விளங்கும். (7) பங்குகள் கூட்டுப்பங்கு நிறுவனத்தால் பொதுமக்களுக்கு நேரடியாக மூலதன அங்காடி வழியாக வெளியிடப்படும். ஆனால், இருப்புகள் நேரடியாக வழங்கப்பட மாட்டா. இத்தகைய பலதரப்பட்ட முன்னுரிமை ஒப்புரவுப் பங்குகளையும் இருப்புகளையும் வாங்கி, விற்றிடுதல் பேரம் பேசிடுதல் செய்வதற்கு ஒரு மாற்றகம் அல்லது அங்காடி உள்ளது. இதனை இருப்பு மாற்றம் எனக் குறிப்பர். இவ்விருப்பு மாற்றகம் இந்தியாவில் பெருநகரங்களான பம்பாய், கல்கத்தா, சென்னை, அகமதாபாது, தில்லி, ஐதராபாது, இந்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில் மட்டுமே அமைந்துள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் தான் சேமிக்கும் சேமிப்பினை இத்தகைய பங்குகளையும் இருப்புகளையும் வாங்கி முதலீடு செய்திட இவ்விருப்பு மாற்றகம் தகுந்த வசதிகளை அளிக்கிறது. மக்கள் தங்கள் சேமிப்பினின்று செய்திடும் பங்கு, இருப்பு முதலீடுகள் நிறுவனத்தின் தொழில் வளர்ச்சிக்கு உற்ற துணையாய் அமைந்து, இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. காண்க: இருப்பு மாற்றகம். சி.பா. துணை நூல்கள் Kapoor, N.D., Company Law and Secretarial Practice 1980, Sultan Chand and Sons, New Delhi, 1983. Bhalla, V.K., Investment Management – 1983, S. Chand and Company Limited, New Delhi, 1983.