இராசாதித்தன்
irācātittaṉ
இவன் முதலாம் பராந்தகனுக்கும் (Parantaka I) சேர மன்னன் மகள் கோக்கிலானடிகளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
இவன் முதலாம் பராந்தகனுக்கும் (Parantaka I) சேர மன்னன் மகள் கோக்கிலானடிகளுக்கும் மகனாகப் பிறந்தவன். பராந்தக சோழனுக்குப் பல மனைவியர்கள் இருந்த போதிலும் இராசாதித்தனின் தாயே பட்டத்தரசியாகத் திகழ்ந்தாள். அதுபோலவே இராசாதித்தனுக்கு மற்றத் தாய்களின் பிள்ளைகளான கண்டராதித்தன் (Kandaraditya), அரிஞ்சயன் (Arinjayan), உத்தம சோழன் (Uttama Cholan) என்ற சகோதரர் இருந்தபோதிலும் இராசாதித்தனே பட்டத்து இளவரசனாகத் திகழ்ந்தாள்.
பராந்தக சோழன், ஆட்சிக் காலத்தின் இறுதியில் தன் பேரரசின் வடக்கில் இராட்டிரகூட (Rashtrakutas), கங்க (Ganga) மன்னர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருந்தது. இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணனும் (Krishna III), கங்க மன்னன் பூதுகனும் (Butuga II) ஒன்று சேர்ந்து பெரும்படையுடன் தொண்டை மண்டலத்தைத் தாக்கத் திட்டமிட்டனர். இதையறிந்த பராந்தகன் தன் மூத்த மகன் பட்டத்து இளவரசன் இராசாதித்தனை கி.பி. 936–ஆம் ஆண்டு பெருமளவிலான யானை, குதிரைப் படைகளுடன் அவர்களை முறியடிக்க அனுப்பி வைத்தான்.
இராசாதித்த சோழன் அப்பெரும் படைகளுடன் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள ருநாவலூரில் தங்கிப் பகைவர்களை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கலானான்.
தக்கோலப்போர் (Battle of Takkolam)
தங்கள் திட்டப்படி மூன்றாம் பூதுகனும் மூன்றாங் கிருட்டிணனும் இணைந்து, பெரும்படையுடன் கி.பி. 949–ஆம் ஆண்டு தக்கோலம் என்ற இடத்தில் சோழப் படையுடன் மோதினர். (தக்கோலம் என்ற இடம் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள அரக்கோணத்திற்குத் தென்கிழக்கில் ஆறு மைல் தூரத்திலுள்ளது.) இரு பக்கத்திலும் பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இப்போரில் இராசாதித்தன் மிகவும் வீரத்துடன் போர் புரிந்தான். இருந்தும் விதி அவனை விடவில்லை. யானை மீதமர்ந்து போர் செய்து கொண்டிருந்த இராசாதித்தன் இதயத்தைப் பூதுகனால் ஏவப்பட்ட அம்பு துளைக்கவே, யானையிலிருந்து கீழே விழுந்து வீரமரணமடைந்தான்.
கும்பகோணம், திருவிடைமருதூர், திருவெள்ளாறு முதலிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் ‘ஆனை மேற்றுஞ்சிய’ என்று குறிப்பிடுவதால் போர்க்களத்தில் யானையின் மேலிருந்தபடியே வீழ்ந்து இறந்தான் என்பது உறுதியாகிறது.
இப்போரைப் பற்றித் திருவாலங்காடு செப்பேடு இராசாதித்தன் மூன்றாம் கிருட்டிணனை வென்று பின்னர் வீரமரணம் அடைந்தான் என்று குறிப்பிடுகிறது. இதன்படி பார்த்தால் வெற்றிபெற்ற சோழ இளவரசன் இராசாதித்தனைப் பூதுகன் தன் அம்பால் கொன்றிருக்க வேண்டும். ஆகவேதான் பெருமகிழ்ச்சியடைந்த மூன்றாம் கிருட்டிணன் அவனைப் பாராட்டி நன்கொடைகள் வழங்கியிருக்க வேண்டுமென்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.
இராசாதித்தனின் வீர மரணம் பராந்தகனுக்குப் பேரதிர்ச்சியையும் எல்லையில்லாத் துக்கத்தையும் கொடுத்தபோதிலும், பேரரசின் நலத்திற்குத் தன் அடுத்த மகன் கண்டராதித்தனைப் பட்டத்து இளவரசாக்கினான். அதன்படி பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தன் அரசுக்கட்டிலேறினான். சி.சி.
துணை நூல்கள்
Chopra, P.N,, Ravindran, T.K. & Subramanian, N., History of South India, S. Chand & Co., Delhi, 1979.
Nilakanta Sastri, K.A., The Colas, University of Madras, 1974.
சதாசிவ பண்டாரத்தார் தி.வை., பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1975.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 42)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y4d47a73/
தமிழ்“இராசாதித்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y4d47a73/APA
Oliyon Research. (2026). இராசாதித்தன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y4d47a73/MLA
"இராசாதித்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y4d47a73/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment