இருமொழி வழிக் கல்விமுறை
irumoḻi vaḻik kalvimuṟai
இரண்டு மொழிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பித்தல் இருமொழி வழிக் கல்வி முறை (Bilingual Education) எனச் சொல்லப்படும்.
இரண்டு மொழிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பித்தல் இருமொழி வழிக் கல்வி முறை (Bilingual Education) எனச் சொல்லப்படும். இம்முறையிலான கற்பித்தலில், இரு மொழிகளையும் ஒரே கல்வி ஆண்டில் ஆசிரியர் பயன்படுத்திக் கற்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மாறாக, முதலாண்டில் ஒரு மொழியிலும், அடுத்த ஆண்டில் இன்னொரு மொழியிலும் பாடங்களைக் கற்பிப்பது கூட இரு மொழி வழிக்கல்வி முறையில்தான் அடங்கும். மேலும், பாடம் கற்பிக்கப் பயன்படும் இரு மொழிகளையும் மாணவர்கள் ஏற்கனவே பள்ளியில் சேருவதற்கு முன்பே பேசவோ அறிந்தோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இக்கல்வி முறையில் இல்லை. மாணவர்களின் தாய்மொழி தவிர்த்து, ஏதாவது ஒரு மொழியை மட்டும், ஆசிரியர் பள்ளிக் கல்வி முழுவதும் பயன்படுத்துவாரேயானால், அது இருமொழி வழிக் கல்வி முறையின்பாற்படாது. இதேபோல், மாணவர்களின் தாய் மொழியை மட்டும் பயன்படுத்தி, ஆசிரியர் பள்ளிப் பாடத்தை எல்லாம் நடத்திவிட்டு, ஏதாவது ஒரு அயல் மொழியை ஒருபாடமாக மட்டும் கற்பிப்பதும் இரு மொழி வழிக் கல்வி முறையில் வாராது.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் கற்பித்தல் இருமொழி வழி முறையில் நடைபெறுகிறது. பள்ளி இறுதி வரை தாய் மொழியான தமிழில் பாடம் கற்பிக்கப்படுவதும், பின்பு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் அயல்மொழியான ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கப்படுவதும் இருமொழி வழிக் கல்விக்கு எடுத்துக்காட்டாகும்.
செருமனி நாட்டில் தங்கியுள்ள துருக்கி பேசும் குழந்தைகட்குச் செருமன் மொழி மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இது இருமொழி வழிக் கற்பித்தலில் வாராது.
நைசீரியா (Nigeria) நாட்டில் பல இனமொழிகள் உள்ளன. ஆனால், அங்கு ஆங்கில மொழிதான் அலுவலக மொழியாக ஆக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் மும்மொழித் திட்டம் (Three–language formula) பள்ளிகளில் உள்ளது. நைசீரிய நாட்டுக் குழந்தைகள் தங்கள் ஒன்பது வயது வரை தத்தம் தாய்மொழியிலேயே பள்ளிக் கல்விப் பாடங்களைக் கற்கின்றனர். ஒவ்வொரு நைசீரியக் குழந்தையும் இன்னுமோர் இன மொழியையும் கற்க வேண்டும். மேலும், இந்நாட்டுக் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியின் அடிப்படைகள் கற்பிக்கப்படுகின்றன. ஒன்பது வயதுக்குப் பின், ஆங்கிலமே தலையாய பயிற்றுமொழியாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
கனடா (Canada) நாட்டில் பிரெஞ்சு மொழியும், ஆங்கில மொழியும் அலுவலக மொழிகள். இந்நாட்டில் கனடா மொழி பேசுவோரும் பிரெஞ்சு மொழி பேசுவோரும் பெருமளவு உள்ளனர். பிரெஞ்சு மொழி பேசுவோரின் குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று வகுப்புகளில் முறையே ஆறு, ஏழு, எட்டு வயதுகளில் பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தியே எல்லாப் பாடங்களையும் கற்கின்றனர். இருந்த போதிலும், அக்குழந்தைகள் இரண்டு, மூன்று, நான்கு, வகுப்புகளில் முறையே ஏழு, எட்டு, ஒன்பது வயதுகளில் கற்பித்தலில் 20 விழுக்காடு நேரம் மட்டுமே ஆங்கில மொழி கற்கின்றனர், பின்பு, தொடர்ந்து ஆங்கில மொழி கற்பிக்கும் நேரம் அதிகரிக்கப்படுகிறது. தொடக்கப்பள்ளிக் கல்வி இறுதியில் பள்ளிப் பாடங்களில் 40 விழுக்காடு ஆங்கிலத்திலும், 60 விழுக்காடு பிரெஞ்சு மொழியிலும் கற்கின்றனர். இம்முறைக் கல்வியின் வழியே, பிரெஞ்சு மொழி பேசும் குழந்தைகள், பிரெஞ்சுப் மொழியில் திறமையைப் பெறுவதோடு மட்டுமன்றி, இரண்டாவது மொழியாகிய ஆங்கிலத்தில் எழுதும், படிக்கும் பேசும் திறனையும் பெறுகின்றனர். இவ்வகைக் கல்வி, நிறுவன இருமொழிக் கல்வி (Institutional Bilingualism) எனச் சொல்லப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அலுவலக மொழி என்று எதுவும் சட்டப்படி இல்லையென்றாலும், ஆங்கிலம் நடைமுறையில் அலுவலக மொழியின் சிறப்பைப் பெற்றுவிட்டது. இக்குடியரசில் பெரும்பாலான பெருமக்கள் பள்ளிகளில் (Public Schools) ஆங்கிலம்தான் பயிற்சி மொழியாக உள்ளது. சிறுபான்மை மொழி பேசும் இனக் குழந்தைகளுக்கு, திறம்பட ஆங்கிலம் வழியே கல்வி தர இயலாததால் மாநிலங்களில் சிறுபான்மை மொழி பேசும் குழந்தைகள் உள்ள பள்ளிகளில் இருமொழி வழிக் கல்விமுறை பின்பற்றப்படுகிறது. இக்கல்வி முறை, 1963–ஆம் ஆண்டு புளோரிடா (Florida)வில் உள்ள மியாமி (Miami) நகரில் தொடங்கப்பட்டது. இங்கு இசுபானிசு மொழி பேசும் குழந்தைகள் முதலில் இம்மொழியிலேயே கற்பிக்கப்பட்டுப் பின்னர் ஆங்கில மொழியிலும் கற்பிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளின் பள்ளிப் பாடங்களை முதலில் குழந்தைகளின் தாய்மொழியிலும் பின்னர் இரண்டாம் மொழியான அயல்மொழியிலும் கற்பதனால், இரு மொழிகளிலும் மாணவர்கள் திறன்பெறுகின்றனர் என்பது, பல இன மொழிகளைக் கொண்ட சிறுபான்மை மக்கள் வாழும் நாடுகளில் காணப்படும் இருமொழி வழிக் கற்பித்தல் முறையிலிருந்து அறியமுடிகின்றது. மேலும், சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களின் மொழியே குழந்தைகளின் தாய்மொழியாக இருப்பின், முதலில் இரண்டாம் மொழியான அயல் மொழியில் பாடங்களையும் மேல்வகுப்புகளில் தாய் மொழியின் வழியே பாடங்களையும் கற்பித்தால், இருமொழி வழிக் கற்பித்தல் திறம்பட அமையும் என்பது கல்வியாளர்களின் கருத்து.
துணை நூல்கள்
Fishman J.A., Bilingual Education: An International Sociological Perspective, Newbury House, Rowley, Massachusetts, 1976.
Hartford, B. and Valdman A, (Eds) Issues in International Bilingual Education: The Role of the Vernacular, Plenum, Newyork, 1982.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 242)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y297cc2k/
தமிழ்“இருமொழி வழிக் கல்விமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y297cc2k/APA
Oliyon Research. (2026). இருமொழி வழிக் கல்விமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y297cc2k/MLA
"இருமொழி வழிக் கல்விமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y297cc2k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment