உடற்பருமனும் உளவியற் கூறுகளும்
uṭaṟparumaṉum uḷaviyaṟ kūṟukaḷum
உலகில் பெரும்பான்மையான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பட்டினியில் திண்டாடினாலும், உடற்பருமன் சிலருக்குக் குறிப்பாகச் சில நாடுகளில் பெரும் சிக்கலாக இருந்துவருகிறது.
உலகில் பெரும்பான்மையான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பட்டினியில் திண்டாடினாலும், உடற்பருமன் சிலருக்குக் குறிப்பாகச் சில நாடுகளில் பெரும் சிக்கலாக இருந்துவருகிறது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளில் 20% மக்கள் இத்தொல்லையால் அவதியுறுகின்றனர். உடற்பருமன் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களை இன்னும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இதைக் குறைப்பதற்கான சிகிச்சை முறைகள் பல இருந்தாலும் அவற்றால் முழுமையான பலன் கிடைக்கும் என்று உறுதிகூற இயலவில்லை. இத்துறையில் நடந்துவரும் ஆராய்ச்சிகள் புற்று நோய் குறித்த ஆராய்ச்சிகளைவிடக் குறைந்த பலனையே அளித்துள்ளன. உடற்பருமனைக் குறைக்க மருத்துவ உதவியை நாடும் 100 பேரில் 12 பேர் மட்டுமே பருமனைக் குறைக்கமுடிகிறது. இந்த 12 பேரிலும் 10 பேர் ஓரிரண்டு ஆண்டுகளில் முந்தைய உடற்பருமனைத் திரும்பப் பெற்றுவிடுகின்றனர்.
உடற்பருமன் ஏற்படுவதற்கு உளவியலிலும் உடற்கூற்றியலிலும் காரணங்கள் பல உள்ளன. சிக்மண்டு பிராய்டு (Sigmund Freud) என்ற உளவியலாளர் குழந்தையின் தொடக்க கால வாழ்க்கையே உடற்பருமன் ஏற்படக் காரணமாக உள்ளதெனக் கூறியுள்ளார். குழந்தை முதல் 8 மாதங்களுக்குள் தாயிடம் இருந்து பெறும் அன்பும் கவனிப்புமே இதற்குச் சிறந்த காரணம் என்கிறார் இவர். எடுத்துக்காட்டாக, தாய் குழந்தையிடம் பாசமின்றியோ வெறுப்புடனோ இயந்திரம்போல் – குறிப்பாகப் பால் புகட்டும்போது நடந்து கொண்டால் அருந்துதல், உண்ணுதல், சுவைத்தல் ஆகிய செயல்களில் அளவற்ற ஆவலுள்ளவர்களாக இக்குழந்தைகள் வளர வாய்ப்புள்ளது. இத்தகைய பழக்கத்தால் இவர்கள் உடற்பருமன் அடைவது மட்டுமன்றி விரலைச் சுவைத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல், வாயாடுதல், இரைந்து பேசுதல், திக்கிப் பேசுதல், தேவையற்ற முறையில் அடிக்கடி வாயசைத்தல் அல்லது துடித்தல், உடலுறவின்போது வாய் வழி இன்பம் தேடுதல் ஆகியவற்றில் ஈடுபடலாம். அதாவது வாய் வழி இன்பம் துய்ப்பது இவர்களுக்குத் தலையாய இன்ப உணர்வு தரும் வழியாக அமைந்து விடுகிறது.
பிற்காலத்தில் உடற்பருமன் அடைந்தவர்களை விடக் குழந்தைப் பருவத்திலிருந்தே உடற்பருமன் உள்ளவர்களை மெலியச் செய்வது கடினமாகும். உடற்பருமன் ஒரே குடும்பத்தில் பலருக்கு இருப்பதுண்டு. இது பரம்பரை நோயாக இருந்து வருவதைக் குறிக்கிறது. பெற்றோரின் வளர்ப்பு முறையும் உடற்பருமன் ஏற்பட வாய்ப்புகளை மிகுதிப்படுத்தலாம். பெற்றோர்கள் உடற்பருமனையும் உடல் நலனையும் ஒன்றென நினைப்பது தவறு. இத்தகைய எண்ணத்தால் குழந்தைகள் உடல் நலமின்றி இருக்கும்போது அவர்களை உண்ணுமாறு பெற்றோர் வற்புறுத்துகின்றனர். குழந்தையும் பெற்றோரின் அன்பையும் துணையையும் பெறவேண்டும் என்ற ஆசையில் உண்ணுகிறது. குழந்தைக்கும் பெற்றோருக்கும் உணவு அன்பையும் துணையையும் வெளிக்காட்டும் ஒரு பொருளாக ஆகிவிடுகிறது. சில வேளைகளில் ஏமாற்றம், தனிமை, ஏக்கம் ஆகிய உணர்வுகள் மேலெழும்போது இக்குழந்தைகள் உணவுண்ண விரும்புவர். உடற்பருமன் உள்ளவர்களால் பசியையும் கோபம், அச்சம், துயரம், எரிச்சல் ஆகிய உணர்வுகளையும் வேறுபடுத்திப் பார்க்க இயலுவதில்லை. இதனால் இவர்கள் இத்தகைய உணர்வுகள் ஏற்படும்போது உண்ணத் தொடங்கிவிடுகின்றனர்.
உடற்பருமன் உடையவர்கள் மற்றவர்களைவிட அடிக்கடி மிகுதியாகவும் விரைவாகவும் உண்பார்கள். இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாவர். இவர்கள் உணவின் சுவையறிவதில் மற்றவர்களை விடச் சிறந்து விளங்குவர். வயிற்றில் பசி ஏற்படாவிட்டாலும் உணவுப்பொருள்களின் நிறம், மணம், சுவை இவற்றால் கவரப்பட்டு உண்ணத் தொடங்குவர். குடலின் சுருங்கி விரியும் இயக்கம் தொடங்கு முன்னரே இவர்களுக்குப் பசியெடுக்கத் தொடங்கி விடுகிறது. அதாவது இவர்கள் உடற்கூறு காரணமாக ஏற்படும் உள்ளுணர்வினால் (Internal Feedback) உணவருந்தாமல் வெளித் தூண்டுதல்களால் (External Stimuli) உந்தப்பட்டு உண்ணத் தொடங்கிவிடுகின்றனர். வயிராற உணவு உண்டபிறகும் இவர்கள் ரொட்டி, கடலை, வறுவல் போன்றவற்றை உண்பார்கள்.
உடற்பருமன் உள்ளவர்கள் பசி எடுத்து உணவு அருந்தாமல் கடிகாரம் காட்டும் நேரத்திற்கு ஏற்ப உணவருந்துகின்றனர். இவர்கள் தட்டில் வைத்ததை ஒன்றுவிடாமல் உண்ணும் பழக்கமுள்ளவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள் உணவுப்பொருள்களைச் சுவை மிக்கதாக இருந்தால் மிகுதியாகவும் சுவை குறைந்திருந்தால் குறைவாகவும் உண்பார்கள். இவர்கள் உணவுப் பொருளைப் பெறுவதற்கான முயற்சியில் சிறிது உடலை வருத்திக்கொள்ளவேண்டும் என்- றாலோ துன்பம் அடையவேண்டுமென்றாலோ அதை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாகப் பட்டினி கிடப்பதே மேல் என்று நினைப்பார்கள்.
உடற்கூற்றியல் வல்லுநர்கள் உடற்பருமனுக்குக் காரணம் உடலிலுள்ள கொழுப்பு அணுக்கள் (Fat Cells: Lipocytes Adipocytes) என்று கூறுகின்றனர். இக்கொழுப்பு அணுக்களின் எண்ணிக்கையை மாற்ற இயலாது. இவை குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகளிலேயே வரையறுக்கப்படுகின்றன. ஒரு சாரார் மூளையின் இருபகுதிகள் உண்பதற்கும் திகட்டுவதற்கும் காரணமாக இருப்பதாகக் கருதுகின்றனர். இவற்றின் செயலுக்கேற்ப உடற்பருமனும் உடல் மெலிவும் ஏற்படுகின்றன. திகட்டுவது மிகுந்தால் உடல் மெலிவு (Anorexia Nervosa) ஏற்படுகிறது. மூளையின் எந்தப் பாகத்தில் இப்பகுதிகள் இருக்கின்றன என்பதை இன்னும் திட்டவட்டமாக அறிய இயலவில்லை.
உடற்பருமனைக் குறைக்க உதவும் மருத்துவமுறைகள்
முழுமையான பலன் அளிக்காவிட்டாலும் ஓரளவு பலனளிக்கும் சில புதிய சிகிச்சை முறைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
1. மின் அதிர்ச்சி மருத்துவம்
உடற்பருமனை மிகுதியாக்கும் உணவு வகைகளை உண்ணவைத்து அதனுடனே மின் அதிர்ச்சியைக் கொடுத்து அவ்வுணவுப் பொருள்களின் மேல் உள்ள ஆர்வத்தைக் குறைக்க முடியும்.
2. துர்வாடை மருத்துவம்
விரும்பியுண்ணும் உணவை உண்ணும்போது துர்வாடையை ஏற்படுத்தி, அவ்வுணவின் மேலுள்ள விருப்பத்தைக் குறைக்கலாம். பெருங்காயத்தை மூக்கின் அருகில் வைத்துக்கொண்டு உணவு அருந்தச் சொல்வதுமுண்டு. சுருட்டுப் புகையை விரும்பாத ஒருவரை உணவு அருந்தியதும் புகைபிடிக்கச் செய்வதால் அவ்வுணவின் மேல் உள்ள விருப்பத்தைக் குறைக்கலாம்.
3. வெளித்தூண்டுதலைக் கட்டுப்படுத்தும் மருத்துவம்
உடற்பருமன் உள்ளவர்கள் வெளித்தூண்டுதல் காரணமாகவே முக்கியமாகத் தூண்டப்பட்டு உணவு அருந்துவதால் அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே சாப்பிடவேண்டும். உண்ணும்போது எந்த வேலையையும் செய்யக் கூடாது (படித்தல், இசைகேட்டல், தொலைக்காட்சி பார்த்தல்).
4. உள் தூண்டுதலைக் கட்டுப்படுத்தும் மருத்துவம்
உண்ணும்போது என்ன உண்கிறோம், எங்கே உண்கிறோம் என்பதைக் குறிப்பெடுத்தல் வேண்டும். உண்பது குறித்து எழும் எண்ணங்களைக் குறித்துக் கொண்டு, சாப்பிடுவது குறித்து முன்கூட்டியே திட்டமிடுவதும் நல்லது. உணவருந்தும்போதும் இடையில் நான்கு, ஐந்து இடைவெளிகளில் (ஒரு நிமிடம்) சாப்பிடுவதை நிறுத்துவது சாப்பாட்டின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
5. குடல் அறுவை மருத்துவம்
குடலின் ஒரு பகுதியை நீக்குவதன் மூலம் உடற்பருமனைக் குறைக்க இயலும் என்றாலும், இச்சிகிச்சைக்குப் பிறகு சில மன நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
6. உடற்பயிற்சி மருத்துவம்
பலவகை உடற்பயிற்சிகளின் மூலமாக உடற்பருமனைக் குறைக்க முடியும். உடற்பயிற்சிகளை மன உறுதியுடன் இடைவிடாமல் செய்யவேண்டும்.
7. உணவுக் கட்டுப்பாட்டு மருத்துவம்
உணவுப் பொருள்களின் சத்தின் அளவை (Calories) அறிந்து அளவாக உண்பது சிறந்த வழியாகும். இதற்கு மனக் கட்டுப்பாடு தேவை.
8. உள்மனமாற்று மருத்துவம்
உடலை ஓய்வுறச் செய்து மனக்கண் முன் சில காட்சிகளைக் கற்பனை செய்யச் செய்து அதன் மூலமாக உணவுப் பழக்கங்களை மாற்ற மனக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம். ஒருவர் விரும்பியுண்ணும் உணவை உண்ணத் தொடங்கும்போது அவருக்குக் குமட்டலும் வாந்தியும் வருவது போலவும் அவர் உண்ணாமல் விலகிச் செல்லும்போது நல்ல மன அமைதி ஏற்படுவதுபோலவும் மனக்காட்சிகளை (Imagineries) ஏற்படுத்தி, அவ்வுணவின் மேலுள்ள ஆவலைக் குறைக்கலாம். தன்னுடைய உடற்பருமனைக் கண்டு மற்றவர்கள் எள்ளி நகையாடுவதையும் தன் உடற்கட்டு நன்றாக இருந்தால் மற்றவர்கள் பாராட்டுவதையும் கற்பனைக் காட்சிகளாக உருவாக்கி மருத்துவம் செய்யப்படுகிறது.
உளவியல் வல்லுநர்களுடன் மருத்துவர்களும் இணைந்து செயற்பட்டால் பெருஞ்சிக்கலான உடற்பருமனுக்குத் தகுந்த மருத்துவ முறையைத் தேர்வு செய்து அளிக்க இயலும். வே.க.
துணை நூல்கள்
Mc. Connell, J.V., Understanding Human Behaviour, Hoet Rinehart & Winston, New York, 1983.
Norton, J.C., Introduction to Medical Psychology, Free Press, New York, 1982.
Walman, B.B. (Ed), Psychological Aspects of Obesity: A Handbook, Van Nostrand & Rein–hold, New York, 1982.
Yates, A.J., Theory and Practice in Behaviour Therapy, John Wiley, New York, 1975.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 805)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xyfvyysk/
தமிழ்“உடற்பருமனும் உளவியற் கூறுகளும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xyfvyysk/APA
Oliyon Research. (2026). உடற்பருமனும் உளவியற் கூறுகளும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xyfvyysk/MLA
"உடற்பருமனும் உளவியற் கூறுகளும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xyfvyysk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment