இராதாசாமி சத்சங்கம்
irātācāmi catcaṅkam
இந்தியாவின் மறைபொருள் சமய இயக்கங்களுள் ஒன்று.
இந்தியாவின் மறைபொருள் சமய இயக்கங்களுள் ஒன்று. இதனை இந்துக்களும் சீக்கியர்களும் இன்றும் பின்பற்றுகிறார்கள். இவ்வியக்கம் கி.பி. 1861–ஆம் ஆண்டில் ஆக்ராவைச் சார்ந்த சிவதயாள் என்பவரால் தொடங்கப்பட்டது. இறைவனின் திருப்பெயரை ஒலி வடிவில் திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் மக்கள் உயரிய நிலைக்குச் சென்று முழுமையை அடைய இயலும் என்று இவர் நம்பினார். இதனை வடமொழியில் சுரத சப்தயோகம் என்பர். (இறைவனிடத்திலிருந்து வரும் ஒலி அலையும் சீவாத்மாவும் இணைவதே சுரத சப்த யோகமாகும்). வீடுபேறு குருவின் வழிகாட்டுதல் மூலமே அடையக் கூடியது.
இராதாசாமி என்னும் சொல் சீவாத்மா இறைவனுடன் இணைவதைக் குறிக்கும்; நம்முள் கேட்கும் ஒலி இறைவனிடத்திலிருந்து பெறப்படுவதாகும். உண்மை விளம்பும் மக்கள் ஒன்றுபடுவது சாலச் சிறந்தது என்பது இராதாசாமி இயக்கவாதிகளின் அசையாத நம்பிக்கை.
சிவதயாள் காலமானதும் இராதாசாமி இயக்கம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு குழுவின் தலைவராக இராய் சாளிகிராம் சாகேப் பகதூர் என்பவர் இருந்தார். இவருடைய குழுவினரின் தலைமையிடமாக ஆக்ரா திகழ்ந்தது. பிறிதொரு குழுவின் தலைவராகச் செய்மல் சிங் என்பவர் இருந்தார். இவர் சிவதயாளின் சீக்கியச் சீடர்களுள் ஒருவர். இக்குழுவினர் பியாசுப் பகுதியில் வாழும் இராதாசாமிகள் எனப்பட்டனர். அமிருதசரசுக்கு அருகில் பியாசு ஆற்றங்கரையில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. பியாசு இராதாசாமி இயக்கத்தில் சீக்கியக் குருமார் வரிசையொன்றும் உருவாகியது. இவர்களுக்கும் வைதிக சீக்கியர்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. வைதிக சீக்கியர்கள் உயிருடன் வாழ்ந்து வரும் குரு ஒருவரை வழிபடுவதுடன், முதல் ஐந்து சீக்கியக் குருமார்களின் போதனைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வர். அவர்களுடைய வழிபாட்டில் இசை பயன்படுத்தப்படுவதில்லை. இசையால் எழும் ஒலி பாடல்களில் வரும் சொற்களின் பொருளைக் கெடுத்துவிடும் என்பதே இதற்குக் காரணமாகும்.
இராதாசாமி இயக்கத்தினர் ஆக்ரா மாநகரில் பளிங்குக் கல் கோயிலொன்றைக் கட்டுகின்றனர். இவ்விடம் தயால்பாக்கு என்று இவர்களால் குறிக்கப்படுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 87)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwexwkr9/
தமிழ்“இராதாசாமி சத்சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xwexwkr9/APA
Oliyon Research. (2026). இராதாசாமி சத்சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xwexwkr9/MLA
"இராதாசாமி சத்சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xwexwkr9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment