தட்டைப் புழுக்கள் தொகுதியில் உள் ஒட்டுண்ணிகளை மட்டுமே கொண்ட வகுப்பு செஸ்டாய்டியா (cestoidea) ஆகும். பொதுவாக, இவற்றின் இனங்கள் முதுகெலும்பிகளின் உணவு மண்டலத்தில் காணப் படுகின்றன. செஸ்டாய்டா வகுப்பைச் சேர்ந்த தட்டைப் புழுக்கள் 1.00 மி. மீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர் நீளம் வரை காணப் படுகின்றன. இவற்றின் இனங்களில் உடலின் மேற்பகுதியில் செல்களால் ஆன வெளிப்புறச் செல் அடுக்கு (epidermis) இல்லை. மாறாகச் செல்களற்ற தடித்த கியூட்டிகிள் (cuticle) என்ற பகுதி புறத்தே அமைந்துள்ளது. வாயும், உணவு மண்டலமும் இல்லாமையே இவ்வினங்களின் சிறப்பாகும். இவ்வினங்களின் வாழ்க்கை சுழற்சியில் வெளிப்புறக் குற்றிழைகள் (external cilia) எந்த நிலையிலும் காணப் படவில்லை. இருப்பினும், இவற்றின் கியூட்டிகிள் மேற்பரப்பில் நுண்ணிய முள்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இம்முள் 0.1–1.0 குறுக்களவைக் கொண்டுள்ளது. இவ்வகுப்பில் உள்ள பெரும்பாலான இனங்களின் உடற் பகுதி புரோகிளாட்டிஸ் எனும் கண்டங்களாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கண்டமும், அதனுள் இரு பால் இனப் பெருக்க மண்டலத்தைக் (hermaphrodite) கொண்டிருக்கும். உடலின் முன் பகுதி ஒட்டும் உறுப்பாகக் காணப் படும். இவற்றில், உறிஞ்சிகளும் (suckers) உறிஞ்சி, வரிப் பள்ளங்களும், கொக்கிகளும் காணப் படுகின்றன. கரு வளர்ச்சி. இவற்றின் தொடக்க காலக் கரு வளர்ச்சி, கருப்பையில் கருவின் கொக்கி வளர் நிலை வரை நடை பெறுகிறது. இந்தக் கொக்கி நிலைக் கரு கொக்கி நிலை உருண்டை (oncosphere) எனப் படும். கருப்பைத் துளை மூலமாகவோ, தட்டைப் புழுவின் இறுதிக் கண்டம் விடுபடுவதன் மூலமாகவோ, அப்புழுவின் முதன்மையான இடத்தை விட்டு வெளியேறும். இவற்றை விருந்தோம்பிகள் உட்கொள்ள நேர்ந்தால், இப்புழுக்களின் அடுத்த வளர்ச்சி விரும்பியின் உடலில் நிகழும். முதுகெலும்பிகளே பெரும்பாலும், இவற்றின் விருந்தோம்பிகளாகக் காணப் படுகின்றன. இளவுயிரிகளின் வளர்ச்சியில் பல தொடர்ச்சியான மாற்றங்கள் அவற்றின் ஒட்டுறுப்பில் காணப் படுகின்றன. சில இனங்களில் மொட்டு விடுதல் எனும் பாலிலி (budding) இனப் பெருக்கத்தின் மூலம் அவற்றின் இனம் பெருகுவதை விருந்தோம்பிகளின் உடலில் காண இயலும். இவ்வுயிரிகளின் இனப் பெருக்க மண்டல வளர்ச்சி வேறோரு விருந்தோம்பியிடமே நடை பெறுகிறது. இவற்றைக் குறிப்பாக, முதுகெலும்பிகள் இளவுயிரிகளையோ, இளவுயிரிகளைக் கொண்ட விருந்தோம்பிகளையோ உணவாகக் கொள்வதன் மூலம் பெறுகின்றன. முதுகெலும்பிகளை விருந்தோம்பிகளாகக் கிடைக்கப் பெற்ற இப்புழுக்களின் இனப் பெருக்க மண்டலத்தின் வளர்ச்சி இவ்விருந்தோம்பிகளின் உடலில் தொடரும். எ-டு: சூடோபில்லிடே. சூடோஃபில்லிடே. இவை துணை வகுப்பு செஸ்டோபாவின் ஒரு வரிசையாகும். அனைத்து முதுகெலும்பிகளின் உணவு மண்டலத்திலும் காணப் படும் ஒட்டுண்ணிகளாகும். இவ்வினங்களில் எளிமையான அமைப்புடைய தலை காணப் படுகிறது. தலையில் இரு வரிப் பள்ளம் போன்ற ஒட்டுறுட்புக் (bornria) காணப் படுகிறது. சூடோபில்லியன்கள் பெரும்பாலும் பல அமைப்புகளில் கண்டங்களைப் பெற்றுள்ளன. இவ்வினங்களின் இனப் பெருக்க உறுப்புகளின் புழைகள் உடலின் நடுக் கோட்டிலேயே திறக்கின்றன. கருப்பைத் துளையும் உடலின் நடுக் கோட்டில் திறக்கிறது. இதன் மூலம் கருக்கள் வெளியேற்றப் படுகின்றன. எ-டு. டிபோதிரியோசெபாலஸ் லேட்டல் என்னும் ஒட்டுண்ணிகள் மீன்களின் மூலமாகத் தொற்றிக் கொண்டு மனிதனின் உணவு மண்டலத்திற்கு வந்து சேர்கின்றன. உணவூட்டம். உணவுப் பொருள்கள் இவ்வுயிரினங்களின் மேற்பரப்பு வழியாகவே உட்கொள்ளப் படுகின்றன எளிய சர்க்கரைகள் மற்றும் அமினோ அமிலங்களை வினையூக்கச் செயலின் மூலமாக, அவற்றின் சுற்றுப் புறத்திலிருந்து மிக விரைவாக உட் கவர்ந்து கொள்கின்றன. இவற்றின் உடலில் காணப் படும் நொதிகள் பற்றிய தெளிவான விவரங்கள் இன்னும் அறியப் படவில்லை. இத்தட்டைப் புழுக்களின் காய்ந்த திசுவில் பாலி சாக்கரைடுகளும் மிகுதியாகக் காணப் படுகின்றன. இவற்றின் அளவு அவற்றின் உடலில் காணப் படும் புரதத்தின் அளவை விட மிகுதியாக இருப்பது இவற்றின் சிறப்பாகும். —ந. இராமலிங்கம் —கி. வாசுதேவன்