உட்டு ஆவணம்
uṭṭu āvaṇam
இந்தியா ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டபின் (கி.பி.
இந்தியா ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டபின் (கி.பி. 1858) வணிகக் குழுவினர் (East India Company) கல்வி வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினர். சர் தாமசு மன்ரோ (Sir Thomas Munroe) சென்னை ஆளுநராகப் பதவியேற்றதும் கல்வி வளர்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டார். அவரது முயற்சியால் சாதகமான சூழ்நிலைகள் உருவாயின. பின்னர், கி.பி. 1838–இல் ஆளுநராகப் பதவியேற்ற எல்பின்சுடன் பிரபு பல்கலைக் கழக உயர்நிலைப் பள்ளி (High School of the University) என்ற நிறுவனத்தையும் மாவட்டப் பள்ளிகளையும் அமைத்தார்.
சர் சார்லசு உட்டு (Sir Charles Wood) கி.பி. 1854–ஆம் ஆண்டு சூலை மாதம் 19–ஆம் நாள் கல்வி பற்றிய அறிக்கை ஒன்று வெளியிட்டார். தொடக்கச் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரை கல்விப் பயிற்சிக்கு வரையறுக்கப் பெற்ற குறிக்கோள்கள் தேவையென இவர் வலியுறுத்தினார். இந்திய நாட்டுக் கல்வி வரலாற்றில் கி.பி. 1854–ஆம் ஆண்டு அறிக்கையை உச்சக் கட்டமெனக் கூறலாம். அதற்குமுன் மேற்கொள்ளப்பெற்ற முயற்சிகள் அவ்வாண்டில் முடிவுற்றன. பல முன்னேற்றங்கள் அவ்வாண்டிலிருந்து தொடங்கின. ‘இந்திய நாட்டு ஆங்கிலமுறைக் கல்வியில் மகா சாசனம்’, ‘இந்திய அறிவுப் பெருக்கின் ஒளிவிளக்கு’ என்ற புகழுரைகளை உட்டு ஆவணம் (Wood's Dispatch) பெற்றது.
பரிந்துரைகள்
:: ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுநலக் கல்வித்துறை இயக்குநர் அமர்த்தப்பட வேண்டும்.
:: தரமான ஆசிரியர்களை உருவாக்குவதற்குப் பயிற்சிக் கல்லூரிகளும் உயர்நிலை இடைநிலைப் பள்ளிகளும் அமைத்தல் வேண்டும்.
:: கல்விக்கூடங்கள் அமைப்பதில் தனியார் முயற்சிகளை ஊக்குவித்தல் வேண்டும்.
:: திட்டம் செயற்படுவதைக் கண்காணிப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுநலக் கல்வித்துறையை (Department of Public Instruction) அமைக்கவேண்டும்.
இசுலாமிய மற்றும் இந்துமதச் சார்புடைய கல்விக்கூடங்கள் பல அப்போது இயங்கிவந்தன. கிறித்தவச் சமயத்தினரும் கல்விநிலையங்கள் ஏற்படுத்தியிருந்தனர். நடைமுறையில் தொண்டாற்றி வரும் கல்வி நிறுவனங்களைப் பற்றிய புள்ளி விவரங்களை அரசு சேகரித்தது. இந்தியச் சூழல்களைப் புறக்கணித்து, மேலைநாட்டு முறைகளைப் புகுத்துவது முறையாகாது என்ற கருத்து நிலவியிருந்தது. உயர்நிலைக் கல்வி நிலையங்களில் ஆங்கில மொழி வாயிலாகப் பயிற்றுவிப்பது கல்வியின் தரத்தைப் பாதுகாக்கும் என்ற கருத்தை உட்டு வலியுறுத்தினார். ஆங்கிலத்திலும் தாய்மொழியிலும் புலமைமிக்க ஆசிரியர்களின் துணையுடன், கல்வி புகட்டுவது அரசின் நோக்கமாக இருக்கவேண்டும்.
தாய்மொழியின் மதிப்பைச் செயல்முறையால் உட்டு ஆவணம் குறைத்தது எனக் கூறுவதே பொருந்தும். நாட்டில் நிலவியிருந்த வறுமையும், ஆங்கிலக் கல்வி பெற்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளலாமென மக்கள் கருதியமையும் இவ்விளைவை ஏற்படுத்தின. வாழ்வாங்கு வாழ்வதற்கு இத்திட்டம் பயன்படவில்லை; ஆட்சி நிறுவனங்களில் பணித் தேவைகளை ஈடுசெய்யும் முறையில் எண்ணற்ற எழுத்தர்களை இத்திட்டம் உருவாக்கியது. எனினும் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்களை அமைத்தல் வேண்டும் எனத் திட்டம் வலியுறுத்தியதைச் சிறப்பாகக் கூறவேண்டும். தன்னாட்சி நிலை (Autonomous Status) பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படவில்லை.
இப்பரிந்துரைகள் கி.பி. 1857–ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டன. அவ்வாண்டில் பெருங்கிளர்ச்சி தோன்றியது. கல்வித்திட்டம் கிளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்றன்று என்பதை உறுதி செய்து கொண்டு, கி.பி. 1859–ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இந்திய அரசுச் செயலர் (Secretary of State for India) வெளியிட்ட அறிக்கை, கல்விக் கூடங்களில் மத போதனைகளைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியது. கிறித்தவப் பாதிரிகளுள் சிலர் மத போதனை வகுப்புகளைத் தொடர்வதற்கு அனுமதி வேண்டினர். ‘மதச் சார்பற்ற கல்வியை ஆதரித்து அரசு மேற்கொள்ளும் பணிகளில் எவ்வித மாறுதலையும் அரசு ஏற்காது’ என அவர் தெளிவாகவும் உறுதியாகவும் கூறினார். தி.வெ.கு.
துணை நூல்கள்
Luriya, B.N., Evolution of Indian Culture, Lakshmi Narain Agarwal, Agra, 1981.
Smith, V.A., and Percival Spear, The Oxford History of India, Oxford University Press, Delhi, 1976.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 759)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwaaegqj/
தமிழ்“உட்டு ஆவணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xwaaegqj/APA
Oliyon Research. (2026). உட்டு ஆவணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xwaaegqj/MLA
"உட்டு ஆவணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xwaaegqj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment