இராமானுசக் கவிராயர்
irāmāṉucak kavirāyar
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; பாண்டிநாட்டைச் சேர்ந்த இராமநாத புரத்தில் தோன்றியவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; பாண்டிநாட்டைச் சேர்ந்த இராமநாத புரத்தில் தோன்றியவர். பிற்காலத்தில் இவர் சென்னையில் வாழ்ந்து வந்தார். சிவஞான முனிவரின் மாணவராகிய இராமநாதபுரம் சோமசுந்தரம்பிள்ளையிடம் தமிழ் பயின்றார். வைணவ அந்தணர் மரபில் தோன்றிய இவர், பல மேனாட்டுக் கிறித்தவ அறிஞர்களுக்குத் தமிழ் கற்பித்துள்ளார். அவ்வாறு இவர்பால் தமிழ் கற்ற மேலை நாட்டவர்களுள் துரு, தாம்சன் கிளார்க்கு, வின்சுலோ, இராசர்சு, போப்பையர் முதலியோர் அடங்குவர். கிறித்தவ சமயப் போதகர்களாக விளங்கி, இவர்பால் தமிழ் கற்ற மேனாட்டறிஞர் வேண்டுகோளுக்கிணங்கி இவர் நன்னூலுக்கு உரை எழுதினார் என்று தெரிகிறது. இந்நூல் முதன் முதலில் கி.பி. 1847–ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இது இராமானுசவிருத்தி என்றும் காண்டிகை என்றும் வழங்கப்படுகிறது. சிறந்த உரையாசிரியராகிய இவர் திருக்குறள், நறுந்தொகை என்னும் வெற்றிவேற்கை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களுக்கும் உரை வரைந்துள்ளார்.
இவர் பார்த்தசாரதிமாலை, திருவேங்கட அனுபூதி, வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல் மீது பஞ்ச ரத்தின மாலிகை ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
ஆதி சங்கரர் 67 சுலோகங்களில் ‘ஆத்மபோதம்’ என்னும் பெயரில் வடமொழியில் எழுதியுள்ள நூலைத் தமிழில் ‘ஆத்மபோதப் பிரகாசிகை’ என்றும் பெயரில் மொழிபெயர்த்து, கி.பி. 1840–ஆம் ஆண்டில் அச்சியற்றி வெளியிட்டார். வின்சுலோ உருவாக்கிய தமிழ் அகராதி நிறைவேறுதற்கு இவர் துணை புரிந்துள்ளார்.
போப்பையர், வின்சுலோ, சரவணப் பெருமாளையர். விசாகப்பெருமாளையர் முதலியோர் இவர்க்கு மாணவராவர். ஆசிரியராகவும் கவிஞராகவும் இலக்கண உரையாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கிய சிறப்பு இவருக்குண்டு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 154)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xuc55hwm/
தமிழ்“இராமானுசக் கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xuc55hwm/APA
Oliyon Research. (2026). இராமானுசக் கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xuc55hwm/MLA
"இராமானுசக் கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xuc55hwm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment