நுண் பயிர்ப் பெருக்க முறை
nuṇ payirp perukka muṟai
பாலியல் முறையிலும், பாலிலி முறையிலும் பயிர்கள் பெருக்கமுறுகின்றன.
பாலியல் முறையிலும், பாலிலி முறையிலும் பயிர்கள் பெருக்கமுறுகின்றன. இவ்விரு முறைகளும், பன்னெடுங் காலமாகப் பரந்த அளவு மேற்கொள்ளப் படுகின்றன. இவற்றின் விதைகள், செடியின் தண்டு, குமிழ், வேர் முதலிய பகுதிகளின் மூலம் இனப் பெருக்கம் நடை பெறுகிறது. மிகவும் சிறந்த பண்புகளையுடைய செடியின் வளரும் பகுதியினை, மிதமான பண்புகளையுடைய செடியின் மீது பதித்துப் பயிரின் தரம் உயர்த்தப் படுகிறது. இம்முறையில் செடியின் விதையும், ஏனைய வளரும் பகுதிகளும் இன்றியமையாதவை. செடியின் மிகச் சிறு பகுதிகளான திசுக்கள், செல்கள் முதரியவற்றை ஆய்வுக் குழாயினுள் தக்க சூழலில் வளர்த்து, மிகச் சிறந்த பண்புகளைக் கொண்ட பயிர்களை உருவாக்கும் வாய்ப்புகள் உள. இதனை நுண் பயிர்ப் பெருக்கமுறை (micro propagation technique) எனலாம். அண்மைக் காலத்தில், நோய்கள் வராதவாறு, மிகுந்த கட்டுப்பாடான சூழலில் வளர்க்கும் முறையைத் திசு வளர்ப்பு (tissue culture) எனலாம். அண்மைக் காலத்தில், நுண் பெருக்க முறை பரந்த அளவில் மேற்கொள்ளப் படுகிறது. இதனைப் பற்றி அறிதல், பயிர்ப் பெருக்கத்தின் மேம்பாட்டுக்கு உறு துணையாக இருக்கும்.
அண்மையில் பல திறப்பட்ட பயிர்களும், செடிகளும் நுண் பெருக்க முறைகளால் பெருக்கப் படுகின்றன. வைரஸ் தாக்காத ஆக்கு திசுக்களைப் (Meristem) பிரித்தெடுத்து, வளர் முனையினைத் தனியாக வளர்ப்பதிலிருந்து, நுண் பயிர்ப் பெருக்கம் தொடங்கியது. இம்முறையில், வளர் முனை பல திண்மையான புரோட்டோ கார்ம் பகுதிகளாகப் பெருகின. மீண்டும் இவற்றைப் பிரித்து வளர்த்துப் புதிய செடிகளை உருவாக்கலாம் என்று கண்டு பிடிக்கப் பட்டது. வளமையான பெருக்கம், மிகவும் மெதுவாக நடை பெறுவதால், நுண் பெருக்க முறையில் பயிர்களைப் பெருக்கும் வாய்ப்பு பன்மடங்கு மிகுதியாகும். உடலப் பகுதிப் பெருக்கம் (clonal) மிக விரைவானது. நோய்கள் இல்லாத பெருக்கப் பகுதிகளை, இம்முறையில் எளிதில் பரப்பிடலாம். இப்பெருக்கப் பொருள்களைச் சேமிப்பதும், பல இடங்களுக்குக் கொண்டு செல்வதும் எளிது. பயிர்ப் பெருக்கத்துடன் மருந்துப் பொருள்களையும் உருவாக்கலாம்.
இம்முறையினை மேற்கொள்வதற்குரிய இடத்தினைத் தேர்ந்தெடுத்து, உரிய கருவிகளை அமைத்துப் பயிர்ப் பெருக்குவதற்குப் பல தனிப்பட்ட வசதிகள் தேவை. இதற்கு முதலீடும் மிகுதியாகும். இப்பணியினை ஆற்றிடத் தனிப் பட்ட திறமையும் இன்றியமையாதது. உற்பத்தியாகும் செடிகளை நோய்கள் அணுகாது தடுத்திட, நுண்ணறிவியல் முறைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். குறிப்பிட்ட பாரம்பரியப் பண்புகள் (genetic characters) சிறிதளவும் மாறாது கண்காணித்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
மறு பெருக்க முறைகள். இதில் புறத் தண்டு முனை நீட்சி, இலைக் கோணத் தண்டு வளர்ச்சி, சல்லித் தண்டு, உறுப்புப் பெருக்கம், கருப் பெருக்கம் (embryogenesis) முதலியவை அடங்கும். புறத் தண்டு முனை, செடிகளின் வளரும் இடத்தில் உள்ள பல கணுக்களும் (nodes) கணு இடைவெளிகளும் மிக நெருக்கமாக இணைந்துள்ளன. ஒவ்வொரு கணுவிலும் மிக நுண்ணிய இலைகளும், பக்க வாட்டுப் புறத் தண்டுகளும் உள்ளன. வளரியல் அறுத்தெடுக்கப்பட்ட தண்டு முனையின் மீதுள்ள புறத் தண்டின் நுனி, வளரத் தொடங்கி, நுண் செடி (plantlet) தோன்றுகிறது. புறத் தண்டின் நுனியில் 0.5 மி.மீ. அளவு அறுத்த பகுதியில் சில இலைகள் உள்ளன. வைரஸ் தாக்காத, தூய நிலையில் உள்ள இதனை, வளரியில் (culture) கருத்தூன்றி வளர்த்தால், ஒரு புதிய செடி தோன்றும்.
இலைக் கோணத் தண்டு வளர்ச்சி. கொய்த செடியிலுள்ள புறத் தண்டின் பக்க வாட்டத்தில் வளரும் முனைகள் தூண்டப் பட்டுப் புறத் தண்டு முனை வளர்ச்சி ஒடுக்கப் படுகின்றது. இவ்வளர்ச்சி முனை தீவிரமாகப் பன்மடங்கு பெருகி, மீண்டும், மீண்டும் வளர்ச்சியுற்றுப் பெருகுந் தன்மை கொண்டுள்ளது.
சல்லித் தண்டு வளர்ச்சி. பொதுவாக வேர், இலை, குமிழ்ச் சிதல் (bud scale) போன்றவற்றின் மீது சல்லித் தண்டுகளைப் பதித்துச் செடிகளைப் பெருக்குவதுண்டு. இரு விதையிலைச் செடிகளின் தண்டிலிருந்து, சல்லித் தண்டு மீள் வளர்ச்சியுறுதல் மிகவும் அரிது. சில சமயங்களில், இயற்கையாகத் தண்டுகள் வளர்வதுண்டு, கொய்த செடியின் பகுதிகளை வளரியில் இட்டு வளர்த்தால், சல்லித் தண்டுகள் தோன்றுகின்றன. கொய்த பகுதியிலிருந்தும், வேறு பகுதியிலிருந்தும், பொதுத் திசுவிருந்தும் (Callus tissue) தண்டு தோன்றலாம்.
புறத் தோல் வளரிகளில் உறுப்புப் பிறப்பு. புறத் தோல் திசுச் செல்களிலிருந்து வேர்களும் தோன்றுவதை, உறுப்புப் பிறப்பு (organogenesis) எனலாம். பாரன்கைமா செல்கள் நிரம்பிய செல் திண்மம் ஆக்கு திசுக்களாகிக் குறிப்பிட்ட வளரிகளுக்கேற்ப உறுப்புகள் தோன்றத் தொடங்கும். இது தொய் பகுதியிலிருந்து சல்லித் தண்டுகள் தோன்றுவதனை ஒக்கும்; ஆனால், இதில் தனிப் பட்ட புறத் தோல் தோன்றும் கட்டமும் அடங்கியுள்ளது.
கருப் பெருக்கம். இயல்பான நாற்றுச் சுழற்சியில் (seedling cycle) ஒற்றைச் செல் கொண்ட நுண் வித்திலிருந்து கரு உற்பத்தியாவது முதல் கருப் பெருக்கம் தொடர்கிறது. இயங்கும் தன்மையிலுள்ள இளநீர் மற்றும் ஆக்சின் கரைசலில் வளர்த்த காரட் செல்களைச் சுரப்பி சாராத வளரியில் வளர்த்தால், பல ஆயிரக் கணக்கான தனிப் பட்ட கருக்கள் உண்டானது குறிப்பிடத் தக்க கண்டு பிடிப்பாகும். இவை கருவினிகள் (embroyoids) அல்லது பிறப்புச் சாராக் (somatic) கருக்கள் எனப் படும். செடியின் மிகச் சிறிய பகுதியினைப் பிரித்தெடுத்து, அதனை நுண்ணுயிரிகள் அணுகாது, வளரியில் இடுவதிலிருந்து நுண் பெருக்கம் தொடங்குகிறது. இதனைத் தொடங்கும் செடி, கொய்த செடி (explant) எனப் படும். இதிலிருந்து, புதிய தண்டு உண்டாக்குவதனைப் பெருக்கு (propagule) எனலாம். இவற்றை மேலும் பெருக்கி, நுண் செடிகள் உண்டாக்கப் படுகின்றன.
கொய்த இலைப் பகுதி (Vegetative explant). வளரும் தண்டின் மிகச் சிறிய பகுதி கொய்து எடுக்கப் படுகிறது. இதில், குவிந்த தண்டும், அதன் கீழ் வளரும் நுண் இலைகளும் அடங்கியிருக்கும். மிகவும் விரைவாக வளரும் தண்டின் நுண்ணிய பகுதியில் பூசணம், பாக்டீரியா, வைரஸ் போன்றவை தாக்காத 0.25–1.0 மி.மீ. நீளமுள்ள பகுதி வளர்க்கப் படுகிறது. இவ்வாறு, கொய்யும் பகுதி சிறியதாயின், நோய்கள் தாக்குவது குறைவு. ஆயினும், இதை வளர்ப்பது எளிதன்று. குறைந்த செறிவுள்ள சைடோகினினும், மிதமான ஆக்சினும் இக்கொடியின் வளர்ச்சிக்கு உதவும். பின்னரே, இதனை ஆக்சின் இல்லாத வளரிக்கு மாற்றி, வேர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கலாம். சிறிதளவு ஜிப்பெரேல்லிக் அமிலம், லிட்டருக்கு 0.1 மி.கி. சேர்ப்பது உதவியாக இருக்கும். ஆனால், இதனை மிகுதியாகச் சேர்த்தால், வேர் தோன்றுவது குறையும். இம்முறை உருளைக் கிழங்கு, ஈரிதல் மலர்ச் செடி வகைகள் (carnations) சூரிய காந்தி வகைகள், வண்ண மலர்ச் செடி வகைகள் (Orchid) முதலியவற்றைப் பெருக்குவதற்கு மிகவும் ஏற்றது.
தண்டு நுனி ஒட்டு. ஆப்பிள், எலுமிச்சை போன்ற செடிகளின் மூன்று சிற்றிலைகளும், புறத் தண்டும் கொண்டு 0.14–0.18 மி.மீ. அளவுள்ள பகுதியினை ஒட்டுதல் மூலம் பெருக்கலாம். தண்டு அல்லது வேர்களின் மூலம் மறு தோற்றமுறாத கட்டைச் செடிகளின் (woody Plant) வைரஸ் தாக்காத சிறு பகுதியினை வளரியில் பெருக்கலாம். எலுமிச்சைச் செடியின் இளம் பருவத்தினைச் தவிர்த்து. முதிர்ந்த செடிகளை உற்பத்தி செய்ய இம்முறை ஏற்றது. நுனித் தண்டு வளர்ச்சி. கொம்புகளை நட்டு வளர்ப்பதனைப் போன்று, நுனித் தண்டுகளின் மூலம், செடிகளைப் பெருக்கலாம். இதனை வளர்க்கப் பயன்படுத்தும் ஹார்மோனைப் பொறுத்து, வெற்றி அமையும். இது கொய்த நுனி அல்லது பக்க வளர்ச்சி முனை அல்லது பல கணுக்களின் வெட்டுப் பகுதியாக இருக்கலாம். இது 0.1–0.5 மி.மீ. வரை வேறுபட்ட பருமன் உள்ள பகுதியாக இருக்கலாம் அல்லது 0.5–2 மி.மி. விரியாத தண்டு முனையாக இருக்கலாம். பருமனுள்ள பகுதியினைக் கொய்வது எளிதாயினும், வைரஸ் போன்றவை இராமை அரிது. முதிராத தண்டின் 1–2 செ.மீ. நீளமுள்ள துண்டும் பயன் படும். இது பெருக்கத்தின் செயல்பாட்டிற்கு ஏற்றதாயினும், நோய்களின் தாக்கம் மிகுதி. ஒரு மொட்டுள்ள பக்க கணுவின் பகுதிகளையும் பயன் படுத்தலாம். தண்டு முனைப் பகுதிகள் நீண்டு வளர்ந்து, இலைக் கோணப் புறத் தண்டுகளும் தோன்றும். பெருக்கியைப் பல முறை மாற்றுவதால், செடிகளின் பெருக்கம் பரவலாகிறது. ஆனால், பெருக்கம் இலைக் கோண மொட்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது. வளரிகளின் அடிப் பகுதியிலுள்ள புறத் தோலிலிருந்து சல்லி மொட்டுகளும் பெருகும். வளரிகளின் தேவைகளையும், செயல்பாடுகளையும் வரிசைப் படுத்திப் பல்வேறு வகைச் செடிகளையும் நன்கு பெருக்கிடலாம். இது வளமையான முறையில் போத்துகளின் மூலம், செடிகளைப் பெருக்குவதனை ஒத்திருப்பதால், இம்முறை பரவலாகப் பயன் படுகிறது.
சல்லித் தண்டு வளர்ச்சி. நேரடியாகக் கொய்த பகுதியிலிருந்தும், கொய்த பகுதியின் புறத் தோலிலிருந்தும், புதிய தண்டுகள் தோன்றலாம். இவ்வாறு தோன்றுவது கொய்த செடிப் பகுதியின் தேர்வையும், ஹார்மோனையும் பொறுத்துள்ளது. இலைத் துண்டு, தண்டு முனை, வித்திலைக் கீழ்த் தண்டு (hypocotye), இளம் ஊசியிலைத் தொகுப்பு, முதிராத பூமஞ்சரி (inflorescence), குமிழ் தண்டுச் சிதல், உருளை கிழங்குத் திசு ஆகியவற்றின் கொய் பகுதிகளின் மூலம் பெருக்கலாம்.
நுண் பயிர்ப் பெருக்க முறைக்குரிய காரணிகள். நுண் பெருக்க முறையில் அமைவு (establishment), பெருக்கம் (multiplication), நாற்று நடு முன் நிலை (pretransplant), நடவு (transplant) என்னும் நான்கு கட்டங்கள் உள. சில இனச் செடிகளைப் பெருக்க இம்முறைகளைத் தவறாது, கடைப் பிடிக்க வேண்டும். இதில் பயன்படுத்தும் ஊடகம் இரு வகையில் பயனுள்ளது. செடியிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட பகுதி தொடர்ந்து வளர்வதற்கு ஏற்ற ஊட்டச் சத்துக்களை அளிப்பதோடு, பெருக்கச் செடி வளர்ச்சிக்கும் ஊடகம் உதவுகிறது. இச்சிறு பகுதியின் வளர்ச்சியையும், மேம்பாட்டினையும் சுரப்பிகள் இயக்குகின்றன. சுரப்பிகளின் கட்டுப்பாடு சுரப்பியின் வகை அல்லது வளர்ச்சியினை முறைப் படுத்தி அடர்த்தி அது பயன் படுத்தும் வரிசைப்பாடு ஆகியவற்றினால் அமையும். சைட்டோகிளைன், ஆக்கின்களில் அடங்கிய சுரப்பிகளைப் பொறுத்துப் பல வகைப்பட்ட செடிகளின் வளர்ச்சி வேறுபடும்.
அமைவு. முதிர்ந்த பகுதிகளை விடப் பொதுவாக, இலைக் கோணத் தண்டு நுனி வேற்றிடத் தண்டு (adventitious root) ஆகிய இளம் திசுக்கள் மிக நன்றாகச் செழித்து வளர்கின்றன. முதிராத பூ மொட்டுகளும், பூ மஞ்சரிகளும் மிக எளிதில் வளரக் கூடியவை. சேமிக்கும் பகுதிகளையும், மொட்டுகளையும் வளர்க்க உறங்கு நிலைகளின் பாங்குகளைக் கவனிக்க வேண்டும். ஒரு செடியின் பல உறுப்புகள் அவற்றின் உட்பாரம்பரியத் தன்மைகளுக்கேற்ப மாறு படுவதால், கொய்த பகுதியின் வெற்றிகரமான வளர்ச்சி, கொய் பகுதியின் தேர்வினைப் பொறுத்து அமைகிறது. இச்செடிகளின் பகுதிகளைக் கையாளும் முறையினை ஒத்து, இவை நோயுராதிருக்கும். கட்டுப்படுத்திய ஒளி மற்றும் வெப்ப நிலைகளில் செடிகளின் பகுதிகளைச் சேமித்து, அவற்றின் வாழ்வியல் கட்டத்திற்கேற்ற வளர்ச்சியினைத் தோற்றுவிக்கலாம். கட்டை மர வகைகளில், ஆதார மரத்தின் (Source free) பகுதியில், இளம் தளிர் வளர்ச்சியினைத் தூண்டலாம். கொய்து எடுத்த பகுதி. பிரித்த பகுதி ஆகியவற்றினைப் பூச்சி, பூசணம் தாக்காது காத்தல் மிகவும் இன்றியமையாதது. இலைக் கோணத் தண்டு தோன்றுவதற்குச் செறிவு குறைந்த வளர் ஊக்கியும், சைடோகினைனும் தேவை. சல்லித் தண்டு தோன்றுவதற்குச் செறிவு மிக்க சைடோசினைனும் அதனை ஒத்த ஆக்சினும் தேவை.
புறத் தோல் உண்டாவதற்குச் செறிவு மிக்க ஆச்சினும், செறிவு குறைந்த சைமோசினைனும் கலந்திட வேண்டும். சில சிற்றினங்களின் வெட்டுப் பகுதியிலிருந்து தோன்றிய பொருள்கள், வளரியினுள் கலந்து வளர்ச்சி குறைவதுண்டு. வளரி நீர்மத்தின் நீரை அடிக்கடி மாற்றி, இப்பொருள்களைக் கழுவிடலாம். உயிர் வளி மயத் தடுப்பான்களான (antioxidants) ஆஸ்கார்பிக் அல்லது சிட்ரிக் அமிலத்தினைத் தொடக்க நிலையில் பயன் படுத்தி அல்லது வளரும் நீர்மத்துடன் கலந்து, இதனைத் தடுக்கலாம். ஊக்கமூட்டிய (activated) கரியினை, வளரியில் இடலாம். கட்டைச் செடியின் பகுதிகளைத் தொடக்கத்தில் சுரப்பிகள் கலவாத வளரியில் இரு வாரங்கள் வளர்த்து மாசுபடும் பகுதிகள் உள்ளனவா என்று கண்டறியலாம். இவற்றில் மிகவும் விரைவாக வளரும் பகுதிகளைப் பிரித்து மேலும் பெருக்கிடலாம். பெருக்கம். முதல் கட்டத்தில், வளர்ந்த கொய் பகுதிகள் சிறு துண்டுகளாக்கப் பட்டு, மேலும் வளருவதற்குப் புதிய வளரி ஊடகத்தில் இடப் படும். இலைப் பகுதித் தண்டுகளின் வளர்ச்சி, சல்லித் தண்டுகள் தோன்றுவதனைப் பொறுத்துள்ளது. இப்பெருக்கம் ஒவ்வொரு கட்டத்திலும், தொடர்ந்து செய்யப் படுகிறது. மிகவும் ஏற்ற வளரியில் இப்பெருக்கம் மிக உயர்ந்திருக்கும். கொய் பகுதியின் அளவினைத் தீர்மானித்து, அதனை வளரியில் இட வேண்டும். ஒரு கட்டப் பெருக்கத்திலிருந்து மறு கட்டத்திற்குக் கொய் பகுதிகளைத் தாமதமின்றி மாற்றிட வேண்டும். கொய் பகுதிகளை வளர்க்கும் பாத்திரம், செடி வளரத் தேவையான பரப்பைப் பொறுத்தது. அடர்த்தி 0.3–0.4% உள்ள அகர் கரைசலில் கொய் பகுதி படிப் படியாக முழ்குமாறு வைக்க வேண்டும். கரைசல் உள்ள பாத்திரத்தில் இந்நீர்மத்தின் மட்டம் குறைவாக இருக்க வேண்டும். நீர்ம வளரிகள் கொண்ட பாத்திரம், நிமிடத்திற்கு ஒரு சுற்று வீதம் சுற்றுமாறு அமைக்கலாம். வண்ண மலர்ச் செடி வகைகளுக்கு இம்முறை பயன் படும்.
நாற்று நடு முன் நிலை. கட்டுப் படுத்தப் பட்ட நிலைகளில், பெருக்கப் பட்ட நுண் செடிகளை இயற்கைச் சூழலில் நடுவதற்கு வேண்டிய ஆயத்தம் செய்தல் அடிப்படையானது. பெருக்க கட்டத்தில், உயர் அளவு சைடோசினைன் வளரியில், கொய் பகுதியின் தண்டு பெருக்கப் படும். இந்நிலையில் வேர் விடும் செயல் குறையும். நாற்று நடு முன் கட்டத்தில், தண்டு வளர்ச்சியும், வேர் தோன்றுவதும் குறிப்பிடத் தக்கவை. இதற்குச் சைடோகிளைன் செறிவு குறைக்கப் படுகிறது அல்லது நீக்கப் பட்டு, ஆக்சின் மிகுதியாகச் சேர்க்கப் படுகிறது. ஆக்சின் நீர்மத்தில் 2–4 வாரங்களில் வேர்கள் உற்பத்தியாகின்றன. வளரும் கொய் செடி, நுண் செடி வளர்வதற்குத் தேவையான ஆற்றலை சுக்ரோசிலிருந்து பெறுகிறது. இந்நுண் செடி பச்சையாக இருப்பினும், ஒளிச் சேர்க்கையின் (Photosynthesis) மூலம் ஆற்றலைப் பெற இயலாது. இதனைப் பர ஊட்ட நிலை (heterotrophic) எனலாம். நான்காம் கட்டத்தில், நாற்று நட்ட நிலையினை அடைந்து, நுண்ணூட்ட உயிரி (autotrophic) ஆகிறது. வளரியிலிருந்து புதிய சூழலில், இந்நுண் செடியில் தோன்றிய புதிய இலைகள் ஒளிச் சேர்க்கையின் மூலம் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் பெறுகின்றன. இவ்வினச் செடியின் நிலையினைத் தாங்கும் ஆற்றல் குறைவு; மேலும், நோய்கள் எளிதில் தாக்குறும் நிலையும் உள்ளது.
நடவு. செயற்கைச் சூழலில் நோய்த் தாக்காத நீர்ம வளரியிலிருந்து, நுண் செடி தடையிலாத இயற்கைச் சூழலில் சென்று, பசுங்குடிலில் (green house) சென்று, இறுதியாக வயலில் நடப் படுகிறது. இதன் தொடக்கத்தில், நுண் செடியில் வேர் தோன்றியுமிருக்கும் அல்லது தோன்றாமலும் இருக்கும். இதனால், இந்நுண் செடி புதிய சூழலினை ஏற்று, வளரும் திறனைப் பெற வேண்டும். இதன் வேர்கள் மண்ணில் செல்ல வேண்டும். தண்டு வளர வேண்டும். இலைகள் ஒளிச் சேர்க்கையில் ஈடுபட வேண்டும். நுண் செடி நட்டதும், 3 வாரங்களுக்கு ஈரப் பதம் கூடுதலாக இருக்குமாறு கவனிக்க வேண்டும். மேலும், இளம் கன்றின் வேர்கள் எளிதில் இறங்குவதற்கு வசதியாக, மண் பொலபொலப்பாக இருப்பது இன்றியமையாதது.
நோய்க் காப்பு. நுண் செடிகள் வளரும் வளரியில், நோய்கள் அணுகாது பேணுதல் வேண்டும். பூசணம், பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவை எங்கும் பரவியுள்ளன. இவற்றின் விதைகள் காற்று, தூசி ஆகியவற்றில் கலந்து, பல இடங்களுக்குப் பரவுகின்றன. ஆய்வுக் கூடம், கருவிகள் போன்றவற்றை மருந்து தெளித்துத் தூய்மைப் படுத்த வேண்டும். செடிகளின் மேற்பரப்பிலுள்ள நோய்க் காரணிகளை அகற்றுதல் எளிது. ஆனால், உட்பகுதியில் உள்ளவற்றை அகற்றுதல் எளிதன்று. மிகவும் குளிர்ந்த சூழ்நிலையில் வளரும் செடிகளின் உட்பகுதியில் உள்ள காளான் கிளைகளை அகற்றுதல் சிக்கலானது. இக்காரணிகளை அகற்றப் பயன் படும் மருந்துகள் கொய் செடிகளுக்கு நச்சாகாது கவனிக்க வேண்டும். கால்சியம் ஹைபோகுளோரைட், சோடியம் ஹைபோகுளோரைட் போன்றவை இதற்கு மிகவும் பயனுள்ளவை.
பயிர்களையும், செடிகளையும் விதை மூலம் பெருக்குதல் பழங்காலம் முதல் நடை பெற்று வருகிறது. சில வகைச் செடிகளின் கொம்பு மற்றும் இளம் கன்றுகளை நட்டுச் செடிகள் பெருக்கப் படுகின்றன. பயிர்கள் நோய், பூச்சிகளினால் பெருமளவு சேதமுறுகின்றன. நோய், பூச்சித் தாக்குதலைத் தாங்கும் தன்மையுள்ள பயிர்களைத் தோற்றுவிக்க அயல் கருவுறும் முறை பயன் படுகிறது. இதுவன்றி இயற் தேர்வும் (natural selection) நடை பெறுகிறது. சிறந்த பண்புகளைக் கொண்ட பயிரினை உருவாக்க மிகுந்த காலம் தேவையாகிறது. எனவே, குறுகிய காலத்தில் பயிர்ப் பெருக்கம் செய்வது இன்றியமையாதது. இச்சூழலில், நுண் பயிர்ப் பெருக்க முறை மிகவும் பயனளிக்கும். இதில் புறத் தண்டு முனை நீட்சி, இலைக் கோணத் தண்டு, சல்லித் தண்டு, உறுப்புப் பெருக்கம், கருப் பெருக்கம், கொய் இலைப் பகுதி வளர்ச்சி, தண்டு நுனி ஒட்டு, இனப் பெருக்கக் கொய் பகுதி முதலியவற்றால், செடியின் மிகச் சிறு பகுதிகளைத் தேர்ந்து, வளர் ஊடகத்தில் கட்டுப்பாடான நிலையில் ஆய்வுக் கூடங்களில் பெருக்கலாம். —கே.ஆர். திருவேங்கடசாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 90)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xtnpjnn2/
தமிழ்“நுண் பயிர்ப் பெருக்க முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xtnpjnn2/APA
Oliyon Research. (2026). நுண் பயிர்ப் பெருக்க முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xtnpjnn2/MLA
"நுண் பயிர்ப் பெருக்க முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xtnpjnn2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment