குழந்தைகளின் மிகச் சிறந்த உணவுகளில் முதன்மையானது தாய்ப் பால் ஆகும். தாய்ப் பால் இல்லாத சூழ்நிலையில், பசுவின் பாலைக் கொடுக்க நேரிடுகிறது. சில குழந்தைகளுக்குப் பசும் பாலுக்கு ஒவ்வாமை நேரிடுகிறது. பசும் பால் அருந்தும் சில குழந்தைகளில் வயிற்றுப் போக்கு, சிறு குடல் குருதிப் போக்கு, கறுப்பு மலம்,குத்து வலி, தோல் அழற்சி போன்றவை தோன்றுகின்றன. முலைப் பால் அருந்தும் குழந்தைகளில், தோல் அழற்சி போன்றவை தோன்றுவதில்லை. புதுப் பிறப்புகளின் குருதியில், பால் புரதங்களின் பிரசிபிட்டின்கள் (Preciptins) காணப் படுவதற்கும், நுரையீரல் ஹீமோசிடெரோசிஸ் உண்டாவதற்கும், இடையேயுள்ள உறவை, ஹீனர் போன்ற மருத்துவர்கள் கண்டு பிடித்தனர். அதே போன்று, பசுவின் பால் கொடுப்பதை நிறுத்தி விட்டால் பிரசிபிட்டின்கள் மறைந்து விடுவதையும் கண்டனர். பசும் பால் அருந்தும் குழந்தைகளில் தோன்றும் பல நோயினங்கள் விவரிக்கப் பட்டுள்ளன. திடீரென்று தோன்றும் வயிற்றுப் போக்கும் வாந்தியும். வயிற்றுப் போக்கில் குருதி வெளிப்படுகிறது. மிகவும் மோசமான நிலையில், நோயாளிகளின் குரல் வளை மூடி வீக்கமடைந்து, ஒவ்வாமை அதிர்ச்சி உண்டாகி, மரணம் ஏற்படுகிறது. மலத்தில் ஈயோசினோஃபில் செல்களும், குருதிச் சிவப்பணுக்களும் காணப் படுகின்றன. நாள் பட்ட வயிற்றுப் போக்கும் உள்ளேற்புக் குறைபாடும். நாள் பட்ட பேதியுடன், குன்றிய வளர்ச்சியும், காணப் படுகிறது. சிறுகுடல் நோய்க் கூறாய்வில், சிலேட்டும நைவுகள் காணப் படுகின்றன. குடல் உறிஞ்சி குட்டையாகவும், மறையறை நீண்டும், நிணச் செல்களும் லேமினா புரோப்பிரியா செல்களும், அதிகரித்தும் காணப் படுகின்றன. குடல் புரத மிகையும், குருதியிழப்பும். குழந்தைகளில் பொதுப்படையான உடல் வீக்கமும், குருதிக் குறை புரதமும், இரும்புப் பற்றாக்குறைச் சோகையும், வயிற்றுப் போக்கும் காணப் படுகின்றன. நோய் அறுதியிடல். பசுவின் பால் புரதத் தாங்காமை நிலை, அறிகுறிகள் கொண்டு உறுதி செய்யப் படுகிறது. தீவிர அறிகுறிகள் 48 மணி நேரத்தில் நின்று விடுகின்றன. பசும் பால் நிறுத்தப் பட்ட 1 வாரத்திற்குள், நாள் பட்ட நோயும் சீரடைகிறது. பசும் பாலைத் தவிர்த்து, மற்ற வகையான பால் கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். மருத்துவம். நீண்ட நாள் முலைப் பால் கொடுத்தால், பசும் பாலுக்கான ஒவ்வாமை வருவது தடைப் படுகிறது. நோய்க்குக் காரணமான உணவுப் பொருளையும் அகற்ற வேண்டும். நீர்ப் பகுப்படைந்த புரதங்கள் அல்லது இறைச்சி கொண்ட உணவு கொடுக்கலாம். சோடியம் குரோமோ கிளைகேட், வாய் வழியாகக் கொடுக்கப் பட்டால், சிறு குடல் குறைகள் நின்று விடுகின்றன. எனவே, பசும் பால் ஒவ்வாமை, தற்காலிகமாகவே நீடிக்கிறது. ஏறத் தாழ 1–2 ஆண்டுகளில் நோயாளி நலம் பெறுவார். —மு.ப. கிருஷ்ணன் துணை நூல். Victor C. Vaughan et. al., (Eds)., Nelson Text book of Paediatrics, Eleventh Edition, W.B. Saunders Companry,Philadelphia, 1979.