சாறு மூலம் பரவுதல்
cāṟu mūlam paravutal
நோய்களை உருவாக்கும் உயிரினக் காரணிகளைப் போலவே நச்சுயிரிகளும் பரவுகின்றன.
நோய்களை உருவாக்கும் உயிரினக் காரணிகளைப் போலவே நச்சுயிரிகளும் பரவுகின்றன. அவற்றில் ஒன்றே சாறு மூலம் பரவுதல் (sap transmission) ஆகும். இயற்கையில் சில சமயங்களில் மட்டுமே இம்முறையில் நோய் பரவுகிறது. செயற்கை முறையில் சாறு மூலம் பரவுதலை, உயிரி உட்செலுத்தல் (mechanical inoculation) என்று குறிப்பிடுவர். இம்முறை, நச்சுயிரி கலந்த சாற்றை விரல்களால் இலை மேல் தேய்ப்பதால் ஏற்படும் சிறு வெட்டுகள் மூலம் உள்ளே சேர்ப்பது ஆகும்.
நச்சுயிரி ஆய்வில் முதன்மை பெறும் இம்முறையால் நச்சுயிரியின் நோய் ஆற்றல், அதனால் நோய்க்- குட்படும் செடிகளின் வகைகள், செடிகளில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை அறியலாம். அனைத்து வகை நச்சுயிரிகளையும் சாற்றின் மூலம் செடிகளின் உள் செலுத்தலாம். ஆனால், அனைத்து நச்சுயிரிகளும் இம்முறையில் உள்ளே சென்று செயல்பட்டு, நோயை உண்டாக்க முடியாது. குறிப்பிட்ட அந்த நச்சுயிரிக்கு எந்தச் செடி ஆதாரமாகிறது என்பதைப் பொறுத்துள்ளது. இம்முறையில் பார்லி மஞ்சள் குட்டை நச்சுயிரி, உருளைக்கிழங்கு இலைச்சுருள் நச்சுயிரி, பீச் தேமல் நச்சுயிரி போன்றவை நோய் உண்டாக்க மாட்டா.
செடிகளின் மேற்பரப்பில் சிறு காயங்களோ, சிராய்ப்புகளோ உண்டாக்கப்பட வேண்டும் என்பது முதல் படியாகும். நச்சுயிரி உள்ள சாற்றை நோய் பாதித்த திசுக்களிலிருந்து சேகரித்து, நோய் உண்டாக்கப்பட வேண்டிய உறுப்புகளில் தேய்த்தல், இந்த இடத்தில் நுழைந்த நச்சுயிரிகள் பிற செல்களுக்கு நகர்ந்து நோய் உண்டாக்குதல் முதலிய தொடர் நிகழ்ச்சிகள் இம்முறையில் அடங்கும். நச்சுயிரி சாறுசரியான முறையில் சேகரிக்கப்பட்டால்தான், அவற்றை வெற்றிகரமாக உட்செலுத்த முடியும். நச்சுயிரிகள் நோயுற்ற செடியின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட்டாலும், அவை எங்கு அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனவோ, அங்கிருந்து எடுக்கப் பட வேண்டும். பொதுவாக,-நோய்க் குறிகள் காணப்படும் இலைகள், நச்சுயிரிச் சாறு சேகரிக்கச் சிறந்த இடமாகும். சில நச்சுயிரிகள் குறிப்பிட்ட சில உறுப்புகளில் மட்டும் காணப்படுகின்றன. காட்டாகப் புகையிலைக் கொல்லி நச்சுயிரிகள் (tobacco necrosis virus) வேர்ப் பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன.
இரண்டாவதாக, நச்சுயிரிச் சாற்றின் நோய் உண்டாக்கும் ஆற்றல் அதைப் பிரித்தெடுக்கும் முறைகளைப் பொறுத்தும், வேறு சில காரணிகளைப் பொறுத்தும் அமையும். நச்சுயிரிச் சாறு வெளிச் சூழலுக்கு மாற்றப்படுவது மட்டுமல்லாமல், இலைச் சாற்றிலுள்ள சில கரிமப் பொருள்கள் நச்சுயிரியின் ஆற்றலைக் குறைக்கவும் கூடும். அதனால், நச்சுயிரிகளை ஏனைய பொருள்களிலிருந்து பிரித்து எடுப்பதால், அவை ஆற்றலுடன் காணப்படுகின்றன. ஆனால், உருளைக்கிழங்கு மஞ்சள் குட்டை நச்சுயிரி தூய்மை செய்யப்பட்டால், தன் ஆற்றலை இழந்து விடுகிறது. டானின், ஃபினால் போன்ற தாவரப் பொருள்கள் நச்சுயிரியின் ஆற்றலைக் குறைக்க வல்லவை.
வைரஸ் சாறு, இலைகளின் மேல் காணப்படும் சிராய்ப்புகள் மூலம் உள்ளே நுழைகிறது. இலையின் மேற்பரப்பில் கியூட்டின், மெழுகு போன்ற பொருள்கள் உள்ளன. இவை இலையில் சிராய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் நீக்கப்படுகின்றன. இம்முறையில், நோய் தோற்றுவிப்பதை அதிகமாக்கச் சில காரணிகளைப் பயன்படுத்துகின்றனர். நச்சுயிரிச் சாற்றுடன் பாஸ்ஃபேட் பஃபர் சேர்ப்பது நச்சுயிரியுடன் நோய் உண்டாக்கும் தன்மையை அதிகமாக்குவதுடன், செடிகளின் தடுப்பு ஆற்றலையும் குறைக்கிறது. சிறு சிராய்ப்புகள் உண்டாக்கச் சாற்றுடன் கார்போரண்டம் தூள் போன்ற பொருள்கள் சேர்க்கப் படுகின்றன.
ஆய்வு முறையில், சாறு மூலம் பரவுதல் கீழ்க்காணுமாறு செய்யப்படுகிறது. சுமார் 5 கிராம் நோயுற்ற இலைகளை அரைவைக் குடுவையில் அரைத்துக் கொண்டு, 1 க்கு 10 என்ற அளவில் நீருடனோ, பாஸ்ஃபேட் பஃபருடனோ சேர்த்து நீர்த்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு மில்லி லிட்டருக்கு 0.7 கிராம் என்ற அளவில் கார்போரண்டம் தூளைக் கலந்து கொள்ள வேண்டும். ஒரு கையில் இலைப் பரப்பை வைத்துக் கொண்டு, மற்றொரு கை விரலை நச்சுயிரிக் கலவையில் நனைத்து எடுத்து, இலைப் பரப்பின் மேல் 1—3 முறை தேய்க்க வேண்டும். சிறிது நேரத்திற்குப் பின், இலைப் பரப்பை நீரால் கழுவி விட வேண்டும். சில நோயின் அறிகுறிகள் இலையில் தோன்றும். சில சமயங்களில் சாறு மூலம் பரவும் முறை இயற்கையிலும் நோய் பரவுவதற்குக் காரணமாகலாம். புகையிலைத் தேமல் நோய், புகையிலைத் தோட்டத்தில் அச்செடியைக் கையாள்வதன் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. —எம். எஸ். கிருஷ்ணமூர்த்தி நூலோதி. C. I. Kado and H. O. Agarwal, Principles and Techniques in Plant Virology, Van Nostrand Reinhold Co., New York, 1972.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 174)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xru8bgt7/
தமிழ்“சாறு மூலம் பரவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xru8bgt7/APA
Oliyon Research. (2026). சாறு மூலம் பரவுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xru8bgt7/MLA
"சாறு மூலம் பரவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xru8bgt7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment