அகதிகள்
akatikaḷ
இன, சமய, மொழி, சமுதாய அரசியல் காரணங்களால் அடக்கு முறைக்குட்பட்டும் தம் சொந்த நாடுகளிலிருந்து துரத்தப்பட்டும் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறும் மக்கள் அகதிகள் எனப்படுவர்.
இன, சமய, மொழி, சமுதாய அரசியல் காரணங்களால் அடக்கு முறைக்குட்பட்டும் தம் சொந்த நாடுகளிலிருந்து துரத்தப்பட்டும் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறும் மக்கள் அகதிகள் எனப்படுவர். வரலாற்றுக் காலம்தொட்டு மாபெரும் போர்களை அடுத்து, மக்கள் பெருமளவில் ஓர் இடம் விட்டு வேறு இடம் பெயர்ந்து வந்துள்ளனர். உரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில், ஒரு மாபெரும் மனித இடப்பெயர்ச்சி நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாக் கண்டத்திலிருந்து மிகப் பெரிய அளவில் மக்கள் குடிபெயர்ந்து, அமெரிக்கக் கண்டத்திலும் வேறு பல நாடுகளிலும் குடியேறினர், அக்காலத்தில் ஒரு நாடு விட்டு வேறு நாடு சென்று மக்கள் குடியேறுவதற்கு நுழைவுச் சீட்டு போன்ற கட்டுத் திட்டங்கள் இல்லை. அதனால் ஒரு நாட்டிலிருந்து துரத்தப்பட்ட மக்கள், வேறுநாடுகளில் நிலைத்து வாழ முடிந்தது நாடுகளின் எல்லைகள் திட்டவட்டமாக வரையறுக்கப்படாமலும், கண்காணிக்கப்படாமலும் இருந்ததே அக்காலத்தில் அகதிகளின் மறுவாழ்விற்குத் துணையாக அமைந்திருந்தது.
முதலாம் உலகப்போர் (1914-18), சீன-சப்பானியர் போர் (1937-45), இரண்டாம் உலகப்போர் (1939-45) இவைகளின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் நாட்டைவிட்டு ஓடி அகதிகளாயினர். செருமானியப் படைகளுக்கு அஞ்சி ஐரோப்பிய நாடுகளில் இருந்த மக்கள், வேற்று நாடுகளுக்கு ஓடினர். கிரேக்கப் படைகளுக்கு அஞ்சித் துருக்கி நாட்டு மக்கள் ஓடினர். போர் முடிந்தபின் இம்மக்கள் பெரும்பாலும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் (1942-ஆம் ஆண்டு) சப்பானியப் படையினர் பர்மாவில் படை எடுத்ததன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர் தாய் நாட்டிற்கு அகதிகளாக ஓடி வந்தனர்.
கிரேக்கப் படைகள் 1922-ஆம் ஆண்டு துருக்கியிடம் தோல்வியடைந்ததால் துருக்கியிலிருந்து பல்லாயிரம் கிரேக்கர்கள் நம் நாட்டிற்கு ஓட வேண்டியதாயிற்று. இவ்விரு நாடுகளுக்குமிடையே 1923-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி இரு நாடுகளும் சிறுபான்மையினரைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இதற்குப் பின் வேறு பல நாடுகளும் இத்தகைய பரிமாற்றத்தைப் பின்பற்றின.
அண்மைக் காலங்களில் அரசியல் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் மக்கள் தாமே நாட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். உருசியாவில் 1917 ஆம் ஆண்டில் நடந்த அக்டோபர் புரட்சி, அதற்குப் பின் நடந்த உருசிய உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் காரணமாக நூறாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி, ஐரோப்பாவின் பல இடங்களில் குடியேறினர். இசுபெயின் நாட்டில் தளபதி பிராங்கோ (General Franco) என்பவரின் ஆட்சிக் காலத்தில் 1936 முதல் 1939 வரை சுமார் 5 லட்சம் இசுபானியர்கள் (Spaniards) அரசியல்கொடுமை தாங்காமல் பிரெஞ்சு நாட்டிற்கு ஓடினர். அங்கேரியை 1956-ஆம் ஆண்டு உருசியா வலிந்து கவர்ந்து கொண்ட தன் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான அங்கேரியர் நாட்டைவிட்டு வெளியறினர். கிழக்குச் செருமனியிலிருந்து மேற்குச் செருமனியில் 1945-61 வரை 37 இலட்சம் மக்கள் தஞ்சம் புகுந்தனர். சீனா, 1959ஆம் ஆண்டு திபெத்மீது படைஎடுத்தபோது, ஆயிரக் சுணக்கான திபெத்தியர் இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
இன, சமய, மொழிக் காரணங்களாலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். இசுபெயின் (Spain) நாட்டிலிருந்து 15 இலட்சம் யூதர்கள் கி.பி. 1492-இல் வெளியேற்றப்பட்டனர். செருமானிய அரசின் யூதர் எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக 1930 முதல் 1940 வரை 40 இலட்சம் யூதர்கள் நாட்டைவிட்டு வேறுநாடுகளுக்கு ஓடினர்.
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் தோற்ற செருமனி, தான் வசப்படுத்தியிருந்த சிவ நாடுகளை இழக்கவேண்டியதாயிற்று. இதனால் பல்லாயிரக்கணக்கான செருமானியர் நாட்டைவிட்டு வெளியேறினர். இவ்வாறு வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் (1947) ஏறத்தாழ ஒரு கோடி இந்துக்கள் பாகிசுத்தானிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்து அடைக்கலம் புகுந்தனர். இதுவே வரலாற்றில் மிகப் பெரிய மக்கள் மாற்றமாகும் இம்மாற்றத்திற்கு அரசியலும் சமயமும் காரணங்களாக இருந்தன.
பாலசுதீன நாடு 1948–ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பாலசுதீன ஐரோப்பியர்கள் பாலசுதீனத்திலிருந்து (Palestine) இசுரேலுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று அடைக்கலம் அடைந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபின், இத்தகைய மக்கள் மாற்றங்கள் பெருமளவில் நடைபெற்றன. ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களால் துன்புறுத்தப்பட்டு, இங்கும் அங்கும் மிருகங்கள்போல் வேட்டையாடப்பட்டு அகதிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 1971-ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் அமைப்பின் கணக்குப்படி 10 இலட்சத்து 85 ஆயிரமாகும்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகெங்கிலும் நாடு இழந்து தவித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடி ஆகும். உலக அகதிகளின் மொத்த எண்ணிக்கை 1966-ஆம் ஆண்டில் 1 கோடி 10 இலட்சமாகக் குறைந்தது; 1970-ஆம் ஆண்டிற்குப் பின் இது 1 கோடி 80 இலட்சமாக உயர்ந்தது.
அகதிகள் பற்றிய சிக்கல் உலகெங்கிலும் காணப்படுவதாகும். இந்நூற்றாண்டில் தம் சொந்த நாடுகளிலிருந்து பல காரணங்களினால் வெளியேற்றப்பட்டவர்கள், வேறு நாடுகளில் குடியேறுவதால் பல இன்னல்களும் சிக்கல்களும் தோன்றியுள்ளன. நாடு இழந்தவர்கள், பெரும்பாலும் வேற்று நாட்டினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
ஐக்கியநாடுகள் அமைப்பு, 1947-ஆம் ஆண்டிற்குப்பின் 70 இலட்சம் அகதிகளைத் தத்தம் நாட்டிற்குத் திருப்பியனுப்ப உதவி செய்தது. ஐக்கிய நாடுகளின் உறுப்பான அனைத்துலக அகதிகள் நிறுவனம் (International Refugee Organization) அகதிகளின் மறுவாழ்வுக்காகப் பல திட்டங்களைத் தீட்டிற்து. இதன் விளைவாக உலகெங்கணுமுள்ள பல்வேறு நாடுகள், அகதிகளின் மறுவாழ்வுக்குப் பொறுப்பேற்க முன் வந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள பல தனியார் அமைப்புகளும் அகதிகளின் மறுவாழ்வுக்காகப் பாடுபட்டு வருகின்றன.
ஐக்கியநாடுகள் அமைப்பு, அகதிகளின் நிலை பற்றி முடிவெடுக்க 1951-இல் ஒரு பேரவையைக் கூட்டியது. இதன் முடிவுகளைப் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இம்முடிவுகளையொட்டி அகதிகளுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன அவை. அகதிகள் தாம் குடியேறிய நாட்டில் நம் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை, சமய உரிமை, தொழில் செய்து பொருளீட்டும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, குடியுரிமை, சட்டம்சார் உரிமைகள் போன்றவையாகும்.
அகதிகள் தாம் குடியேறிய நாட்டின் மக்களாக மாறிய பின் அகதிகள் என்ற நிலை மாறி, அவர்கள் அந்நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடிழந்தவர்கள் என்ற எண்ணம் மாற்றப்படவேண்டும். அவர்களின் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ற மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
எஸ்.கோ.
துணை நூல்கள்
Murphy, Henry. B.H., “Flight & Resettlement”, UNESCO, Paris, 1955.
“U.S. Committee for Refugee Report”, Annual Survey, New York, 1971.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 81)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xras464c/
தமிழ்“அகதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xras464c/APA
Oliyon Research. (2026). அகதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xras464c/MLA
"அகதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xras464c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment