உத்தம சோழன்
uttama cōḻaṉ
பரகேசரி உத்தமசோழன் (கி.பி.
பரகேசரி உத்தமசோழன் (கி.பி. 971–987) கி.பி. 971–ஆம் ஆண்டில் சோழ வேந்தனாக மணிமுடி சூட்டப்பட்டான். இவன் இராசகேசரி கண்டராதித்த சோழனுக்கும் (கி.பி. 955–957) செம்பியன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்தான். இவன் உத்தமசோழனான மதுராந்தகன் எனவும் அழைக்கப்பட்டான். பரகேசரி இரண்டாம் ஆதித்த சோழன் தனது ஆட்சிக் காலத்திலேயே கொலை செய்யப்பட்டான். இதன் காரணமாக இராசகேசரி சுந்தர சோழன் உத்தம சோழனுக்கு மணிமுடியினைச் சூட்டினான். இவ்வேந்தனது கல்வெட்டுகள் கும்பகோணம், பழங்கோயில், கோவிந்த புத்தூர், உடையார்குடி, திருவிளக்குடி, திருவிடை மருதூர், திருமெய்ஞ்ஞானம், திருமால்புரம், திருமுல்லைவாயில், காஞ்சிபுரம், மீஞ்சூர், திருவிடந்தை திருவொற்றியூர், திருவதிகை வீரட்டானம் முதலான இடங்களில் காணப்படுகின்றன. இதனால் இவ்வேந்தனது ஆட்சி தொண்டை நாட்டிலும் திருமுனைப்பாடி நாட்டிலுங் கூடப் பரவியிருந்தமை புலனாகும். இவ்வேந்தனது பதினாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கிடைத்துள்ளதால் இவன் கி.பி. 987 முடிய அரசாண்டான் என்பதுறுதி.
சிற்றரசரும் அரசியலதிகாரிகளும்
திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு, மலையமான் நாட்டை ஆண்டுவந்த ஒத்தவடத்தடிகள் என்பான், உத்தம சோழனுக்கு உட்பட்ட குறுநில மன்னனாக விளங்கினான். இவன் நரசிங்கவர்மன் என்னும் அபிடேகப் பெயரையும் பெற்று விளங்கினான்.
உத்தம சோழனது அரசியல் அதிகாரிகளுள் அம்பலவன் பழுவூர்நக்கன் மிகவும் குறிப்பிடத்தக்கவன் ஆவான். குவலாளபுரத்தினனான இப்பழுவூர் நக்கனது சேவையைப் பாராட்டி, இச்சோழவேந்தன் ‘விக்கிரம சோழ மாராயன்’ என்னும் விருதுப்பெயரினை அளித்தான். சில கல்வெட்டுகளில் இவன் ‘குவலாளமுடையான் அம்பலவன் பழுவூர்நக்கனான விக்கிரமசோழ மகாராசன்’ எனவும் குறிக்கப்பெறுகிறான். இத்தலைவன் முதலாம் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் இராசராச பல்லவரையன் என்னும் பெயரில் குறிக்கப்பெறுகிறான். உத்தம சோழனது பத்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 981) இத்தலைவன் திருச்சி மாவட்டம் விசயமங்கலத்தில் (கோவிந்தபுத்தூர்) கற்றளி ஒன்றினை எடுப்பித்து, அதற்கு 96 ஆடுகளைத் தானமளித்து, விளக்கெரிக்க ஏற்பாடுகள் செய்துள்ளான். இக்கோயிலின் விமானத்தையும் (நடுவில் கோபுரம்) கி.பி. 984–இல் இவன் கற்களால் அமைத்துள்ளான்.
அடுத்து, உத்தம சோழனின் மகனான மதுராந்தகன் கண்டராதித்த சோழன் என்பான் முதலாம் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் கோயிலையும், அறநிலையங்களையும் நன்கு பராமரித்து வந்தான் எனத் தெரிகிறது. இறையன்பில் மேம்பட்டு விளங்கிய உத்தமன் காஞ்சிபுரம் அரண்மனையில் தங்கி இருந்தபோது, திருப்பழங்கோளூர் திருக்கோயிலுக்குச் சில நிலங்களைத் தானமளித்ததுடன், அந்நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளையும் செய்து தந்துள்ளான். இதனை இவ்வேந்தனது ஆறாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட பழங்கோயில் கல்வெட்டால் அறியலாம்.
வெள்ளிக்காசு
இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில்தான் சோழர் வரலாற்றிலேயே முதன்முறையாக வெள்ளிக்காசு வெளியிடப்பட்டது. இக்காசின் நடுவில் புலியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது; ஓரத்தில் உத்தமசோழன் என்று வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழர் கால நாணயங்களுள் இதுவே பழமைமிக்கது என்று கருதப்படுகிறது. தங்கம், செம்பு ஆகிய உலோகங்களாலான காசுகளும் இவனது காலத்தில் வெளியிடப்பட்டன.
குடும்பம்
இவ்வேந்தனது பட்டத்தரசி மூத்த நம்பிராட்டியாகிய திருபுவன மாதேவி ஆவாள். இவளன்றியும் இவனுக்குப் பல அரசியர் இருந்தனர். செம்பியன் மாதேவி என்னும் ஊரில் உள்ள கல்வெட்டில், இவ்வேந்தனது அரசியர்களாக ஐவர் குறிக்கப்படுகின்றனர். அவர்கள் மழபாடித் தென்னவன் தேவி, பட்டன்தானதுங்கி, இருங்கோளர் மகள் வானவன்மாதேவி, விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள், பழுவேட்டரையர் மகள் ஆகியோராவர். பஞ்சவன்மாதேவி, சொன்னமாதேவி, ஆரூரன் அம்பலத்தடிகள் என்பாரும் இவன்தன் மனைவியரே. இவர்கள் அனைவரும் தம் மாமியார் செம்பியன் மாதேவியின் பால் பேரன்பும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இதனை நாகப்பட்டினம் வட்டம், செம்பியன்மாதேவி என்னும் ஊரில் இவர்கள் அனைவரும் திருக்கயிலாயம் என்னும் சிவன் கோயிவைத் தம் மாமியார் பெயரால் எடுப்பித்து. நாள்வழிபாட்டிற்கும் திங்கள் விழாக்களுக்கும் அறக்கொடைகள் அளித்து உள்ளதால் அறியலாம்.
இணைந்த ஆட்சி
உத்தம சோழன் கி.பி. 985–இல் முதலாம் இராசராச சோழனுக்கு மணிமுடி சூட்டி, அரசனாக்கித் தானும் அவனுடன் இணைந்து இரண்டாண்டுகள் ஆட்சிபுரிந்தான். இதனைத் திருவாலங்காட்டுச் செப்பேட்டால் அறியலாம். இச்செப்பேடு குறிப்பிடும் மதுராந்தகன் என்பான் உத்தம சோழனேயாவான். ம.இரா.த.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 872)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xpeucswm/
தமிழ்“உத்தம சோழன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xpeucswm/APA
Oliyon Research. (2026). உத்தம சோழன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xpeucswm/MLA
"உத்தம சோழன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xpeucswm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment