அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்
accakam maṟṟum nūlkaḷ pativuc caṭṭam
இது மத்திய அரசின் சட்டம்.
இது மத்திய அரசின் சட்டம். முதல் பகுதி, சட்டத்தின் பெயரையும் விதிகளின் வரையறைகளையும் சட்டப் பெயர்களின் விரிவான பொருள் விளக்கத்தையும், இரண்டாம் பகுதி, அச்சகம் நடத்த, நூல் வெளியிட, பருவ இதழ் வெளியிட அனுமதி பெறும் வழிமுறைகளையும், மூன்றாம் பகுதி, அச்சிட்ட நூலினையும் பருவ வெளியீடுகளையும் அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கும் விதிமுறைகளையும், நான்காம் பகுதி, விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனையின் தன்மைகளையும், ஐந்தாம் பகுதி, நூல்களையும் இதழ்களையும் பதிவு செய்யும் முறைகளையும், ஆறாம் பகுதி, மத்திய–மாநில அரசுகளின் அதிகார வரம்புகளையும் சட்டத்திற்கு உட்பட்டு உள்விதிகள் ஏற்படுத்தும் முறைகளையும் சட்டத்தின் பிடியிலிருந்து விலக்கு அளிக்கும் உரிமையினையும் கூறுகின்றன.
இச்சட்ட விதிகளின்படி, புதிதாக அச்சகமோ பருவ இதழ்களோ தொடங்க விரும்புவோர், மாவட்டங்களில், மாவட்ட வருவாய்த் துறை அலுவலரிடமும், சென்னைப் பெருநகரில், சென்னைப் பெருநகர்த் தலைமைக் குற்றவியல் நடுவரிடமும் உறுதி ஆவணம் (Declaration) தாக்கல் செய்து, அனுமதி பெற்றுச் செயற்பட வேண்டும். அச்சகத்தின் இருப்பிடத்தையோ பருவ வெளியீட்டின் இருப்பிடத்தையோ மாற்ற விரும்பினால், குற்ற இயல் நடுவரின் அதிகார எல்லைக்குள் 60 நாள்களுக்குள் மாற்றலாம். ஆனால், அம்மாற்றத்தை 24 மணி நேரத்திற்குள் குற்றவியல் நடுவருக்குத் தெரிவிக்க வேண்டும்; அச்சகத்தின் உரிமையாளரும் மாறாமல் இருக்க வேண்டும். அச்சிடப்பட்ட நூல்களிலும் பருவ வெளியீடுகளிலும் அச்சகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியிடுபவரின் பெயர், அச்சக முகவரி, பருவ வெளியீட்டின் முகவரி முதலிய தேவையான விவரங்களை அச்சிட வேண்டும். பருவ வெளியீட்டின் பெயர் மாறினாலும் உரிமையாளர் மாறினாலும் புதிய உறுதி ஆவணம் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும்.
அச்சகத்தைப் பற்றியும் பருவவெளியீடு பற்றியும் தவறான விவரங்களைக் கொடுப்பது குற்றமாகும். அத்தகைய குற்றத்திற்கு உரூ. 2,000/– ஒறுப்புத் தொகை அல்லது 6 மாதத்திற்குக் குறையாத சிறைத் தண்டனை வழங்க விதி அனுமதிக்கிறது. இச்சட்டத்தின் 11-ஆம் (பிற்.) பிரிவுப்படி, பதிவாளருக்குப் படிகள் அனுப்பாமல் இருப்பது குற்றமாகும். அத்தகைய குற்றத்திற்கு உரூ. 50/– ஒறுப்புத்தொகை பெற விதி இடமளிக்கிறது.
மாநில நூற்பதிவாளருக்கு இரு படிகளை இலவசமாக அனுப்பும்பொழுது அதனுடன் நூலின் பெயர், மொழி, ஆசிரியர் பெயர், பொருள், அச்சகப் பெயர், வெளியிடுவோரின் முகவரி, அச்சிடப்பட்ட காலம், பக்கங்கள், படிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் விவரங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினையும் நூலுடன் தாக்கல் செய்யவேண்டும்.
மத்திய அரசின் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் விதிமுறைகளை வரையறை செய்யவும் மாநில அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யும் உரிமையுடையது மத்திய அரசாகும். சட்டத்திலிருந்து விதிவிலக்கு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசு கையாளலாம்.
அச்சகம், மற்றும் நூல்கள் பதிவுச் சட்டத்தில் (1867) சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அச்சகச் சட்ட விசாரணைக் குழு 1948-இல் பரிந்துரை செய்தது. மாநில அரசுகளும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த இடர்ப்பாடுகளைக் களையப் பரிந்துரைகள் வழங்கின. இதன் விளைவாக, அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டத்திற்கு 1955–ஆம் ஆண்டில் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. திருத்தச் சட்ட விதியின்படி உறுதி ஆவணம் தாக்கல் செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் செய்தித் தாளை அச்சிட்டு வெளியிட்டாக வேண்டும். அவ்வாறு வெளியிட முடியவில்லை என்றால், அனுமதி வழங்கப்பட்ட உறுதி ஆவணம் முறிக்கப்பட்டதாகக் கருதப்படும். வார இதழாக இருப்பின், உறுதி ஆவணம் பெற்று, ஆறு வாரத்திற்குள் இதழ் வெளி வர இயலவில்லை என்றால், உறுதி ஆவணம் செல்லாது. உறுதி ஆவணம் பெற்ற மூன்று மாதத்திற்குள் செய்தித்தாளை வெளியிடாமல் இருந்தால், உறுதி ஆவணம் செல்லத்தகாததாகி விடும். குற்றவியல் நடுவர் உறுதி ஆவணத்தில் அலுவலக முத்திரையைக் குத்தி, ஒரு படியைச் செய்தித்தாள் பதிவாளருக்கும் ஒரு படியை உறுதியாவணம் தாக்கல் செய்தவருக்கும் அனுப்பவேண்டும். உறுதி ஆவணம் ஏற்காமல் தள்ளப்பட்டாலும், மேலே கூறிய இருவருக்கும் முத்திரை குத்திய ஆவணப்படியை அனுப்ப வேண்டும். அச்சிடுகின்றவரோ, வெளியிடுகின்றவரோ தம் பொறுப்பிலிருந்து விலகினால், குற்றவியல் நடுவர்முன் தோன்றி, பணியிலிருந்து விலகிவிட்ட விவரத்தை உறுதி ஆவணமாக எழுதிக் கையொப்பமிட வேண்டும். ஒப்புதல் இல்லாமல் ஒருவரின் பெயர், ஆசிரியர் என்று செய்தித்தாளில் அச்சிடப்பட்டிருந்தால், அதனால் பாதிக்கப்பட்டவர் குற்றவியல் நடுவர்முன் தோன்றித் தன் நிலைமையை விளக்கினால், குற்றவியல் நடுவர், தக்க விசாரணைக்குப் பின், அதற்கு உரிய சான்றிதழ் கொடுப்பார். உறுதி ஆவணம் தாக்கல் செய்து, அனுமதி பெற்றபின் அச்சகத்தாரோ, வெளியிடுவோரோ, அப்பணிகளிலிருந்து விடுபட்ட விவரத்தைக் குற்றவியல் நடுவர் முன்பு அறிவிக்கத் தவறினால், அக்குற்றத்திற்கு ரூ. 2,000/– வரை ஒறுப்புத் தொகை விதிக்கலாம். தொடர்ந்து ஓராண்டுக் காலம் செய்தித்தாள் வெளிவராவிட்டால், உறுதி ஆவணம் செல்லாத ஆவணமாகிவிடும். நீதி மன்றங்கள் வழங்கிய சில தீர்ப்புகளால் ஏற்பட்ட சிக்கல்களையும் திருத்தச் சட்டம் சீர்படுத்தியுள்ளது. சுவரொட்டிகளையும் திருத்தச்சட்டம் நெறிப்படுத்தியது. நாட்டிலுள்ள செய்தித் தாள்களை நெறிமுறைப்படுத்தி, உற்று நோக்கி, நோட்டமிடச் செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம் புதுதில்லியில் ஏற்படுத்தப்பட்டது. செய்தித் தாள் வெளியிடுகிறவர் வெளியிடும் ஒவ்வொரு படியையும் செய்தித்தாள் பதிவாளருக்கு இலவசமாக அனுப்பவேண்டும். அவ்வாறு அனுப்பத் தவறும் குற்றத்திற்கு உரூ. 50/– ஒறுப்புத் தொகை விதிக்க, விதி இடமளிக்கிறது.
1867–ஆம் ஆண்டுச் சட்டத்தையும் 1955–இல் திருத்திய சட்டத்தையும் செயற்படுத்தும் போது, சில முரண்பாடுகளும், காலத்துக்கு ஒவ்வாத இயல்புகளும் வெளிப்படவே, மீண்டும் இச்சட்டம் 1960–ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. சூழ்நிலை நெருக்கத்தின் விளைவாக, அனுமதி வழங்கிய உறுதி ஆவணத்தை முறிக்கும் ஆணை வழங்குவதற்கு முன், பாதிக்கப்படுபவருக்குத் தம் நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர், மத்திய அரசினால் ஏற்படுத்தப்பட்ட குழுமத்திற்கு மேல் முறையீடு செய்யவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. உள்ளூர்க் குற்றவியல் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. அச்சக உரிமையாளரோ வெளியிடுகிறவரோ மாறினாலும், உடைமை மாற்றப்பட்டாலும் புதியதாக உறுதி ஆவணம் தாக்கல் செய்து அனுமதி பெறவேண்டும். வெளியிடும் காலம் மாறினாலும் (மாத இதழை வார இதழாக மாற்றினாலோ வேறு விதமாக மாற்றினாலோ) புதிய உறுதி ஆவணம் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும். செய்தித் தாள்களுக்கு உரிய விதிகளை மீறினால் 20–ஆம் விதியின்படி உரூ. 100/– ஒறுப்புத்தொகையாக விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. திருத்தச் சட்டத்தின் 21–ஆம் பிரிவுப்படி மாநில அரசுகள், மத்திய அரசின் ஒப்புதல் பெற்றே விதி விலக்கு வழங்கவேண்டும். இத்தகைய கூறுகள் மேலே காட்டிய திருத்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இன்றியமையாத திருத்தங்களாகும்.
புது தில்லியில் இயங்கிவரும் செய்தித்தாள் பதிவாளர் தம்முடைய அலுவலகத்தில் செய்தித் தாள்களின் பெயர், மொழி, ஆசிரியர் பெயர், அச்சிடுகின்றவர்பெயர், வெளியிடுபவர் பெயர், அச்சிடப்படும் இடம், வெளியாகும் இடம், பக்கங்கள், விலை, பருவ வெளியீட்டின் உரிமையாளர் பெயர் முதலிய விவரங்கள் அடங்கிய பதிவேட்டினைத் தயாரித்து வைத்திருப்பார். 19-சி பிரிவின்படி குற்றவியல் நடுவர் உறுதி ஆவணம் வழங்கிய விவரம் கிடைத்ததும் அப்பருவ வெளியீட்டிற்குப் பதிவுச் சான்றிதழைச் செய்தித் தாள் பதிவாளர் வழங்குவார். சட்டத்தின் 19–டி, பிரிவின்படி செய்தித் தாள்கள், செய்தித்தாள் பதிவாளருக்குத் தங்களுடைய பருவ வெளியீட்டின் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையைத் (Statement) தாக்கல் செய்ய வேண்டும். அத்தகைய விவரங்களைத் தங்களுடைய பருவ வெளியீட்டில் வெளியிடவேண்டும். 19–இ பிரிவுப்படி செய்தித்தாள் பதியாளர் கேட்கும் விவர அறிக்கையை (Return) அனைத்துச் செய்தித் தாள்களும் கொடுத்தாக வேண்டும். பதிவாளர், செய்தித்தாள் அலுவலகங்களுக்குச் சென்று பருவ வெளியீடு தொடர்பான ஆவணங்களையும், மூல ஏடுகளையும். இதர குறிப்புகள் அடங்கிய பதிவேடுகளையும் பார்வையிடலாம்; தேவையான குறிப்புகளுக்கு நகல் எடுத்துக் கொள்ளலாம், எந்த விதமான தகவலையும் கேட்டு அறிந்து கொள்ளச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
சேகரிக்கப்பட்ட தகவல்களைச் செய்தித்தாள் பதிவாளர், முறைப்படுத்தி, வகைப்படுத்தி, ஆண்டறிக்கை தயாரித்து, அச்சிட்டு, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்குவார். சட்டத்தின் 19–டி, 19–இ பிரிவுகளை மீறினால், செய்தித் தாள்களுக்கு உரூ. 500/– தண்டனை அளிக்கச் சட்டம் இடமளிக்கிறது.
இச்சட்டத்தின்படி, தவறான தகவல்களை வேண்டும் என்றே எவர் கொடுத்தாலும், அத்தகைய குற்றத்துக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் உரூ. 1,000/– ஒறுப்புத் தொகையும் விதிக்கச் சட்டம் இடமளிக்கிறது. இச்சட்டத்தைத் திருத்தவோ, சட்- டத்தில் புதிய விதிமுறைகளை உருவாக்கவோ மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு.
நூல் வெளியிடத் தனியாக உறுதி ஆவணம் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டியதில்லை; அச்சகத்திற்குப் பெறப்பட்ட உறுதி ஆவணமே போதுமானது. நூல் வெளிவந்ததும், அச்சிட்டவர் இரு படிகளை நூற்பதிவாளரிடம் கொடுத்து ஒப்புதல் சீட்டுப் பெற வேண்டும். அவ்வாறு கொடுக்கும் நூலுடன் நூலின் பெயர், மொழி, நவின் அளவு, விலை, பக்கம், படிகளின் எண்ணிக்கை, ஆசிரியர் பெயர் முதலிய விவரங்கள் அடங்கிய உறுதி மொழி ஆவணத்தையும் உடன் இணைத்துக் கொடுக்கவேண்டும். அன்றி, அத்தகைய விவரங்களை நூலின் ஒரு பகுதியில் அச்சிட்டும் தரலாம். நூல் வெளியிட்டவர் கன்னிமாரா, நூலகம் (சென்னை), தேசிய நூலகம் (பம்பாய்), தேசிய நூலகம் (கல்கத்தா) ஆகிய மூன்று நூலகங்களுக்கு மூன்று படிகள் அனுப்பி அல்லது நேரில் கொடுத்து, ஒப்புதல் சீட்டுப் பெற வேண்டும்.டி.எம்.கா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 156)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xjqqysfx/
தமிழ்“அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xjqqysfx/APA
Oliyon Research. (2026). அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xjqqysfx/MLA
"அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xjqqysfx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment