தமிழ் நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தின் தலைநகரும் தமிழ்நாட்டின் தலை சிறந்த கோடைவாசத்தலமுமாகும். இதனை ஊட்டி (Ooty) என்றும் கூறுவர். இங்குத் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் தொதவர்கள் இதனை ‘ஒத்தகமந்து’ என்று தம் மொழியில் கூறினர். ஒத்தைக்கல் மந்து (ஒற்றைக்கல் மந்து) என்னும் தமிழ்ச் சொல்லை ஒத்தகமந்து என்று திரிந்துள்ளது என்பர். உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தின் பெருநகரம். இதன் மக்கள் தொகை 78,186 (1981). இந்நகரம் கடல் மட்டத்தை விட 2600 மீ. உயரமுடையது. தமிழ் நாட்டின் மிக உயர்ந்த மலையுச்சியான தொட்டபெட்டா (Doddabetta) உதகமண்டலத்திலிருந்து மேலே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் உயரம் 2640 மீ. கோவை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக கி.பி. 1819–இல் இருந்த சான் சலிவன் (John Sullivan) நீலகிரிக்குச் சென்ற முதல் வெள்ளையர். இவர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் உதகமண்டலத்தில் தங்குவதற்காக முதன் முதலில் வீட்டையும் கட்டிக் கொண்டார். இசுடீபன் இரம்போல்டு இலசிங்கன் (Stephen Rambold Lushington) இந்நகரத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். இவர் கி.பி. 1827 முதல் 1832 வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். கி.பி. 1855–இல் இது நகராட்சியாக மாறியது. நீலகிரி மாவட்டம் தென்மேற்குப் பருவக்காற்றினால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 1520 முதல் 1780 மி.மீ. வரை மழை பொழிகிறது. உதக மண்டலத்தைச் சுற்றியுள்ள மலைச்சரிவுகளிலும் பள்ளத்தாக்கிலும் தேயிலை, காப்பி போன்ற பணப்பயிர்கள் விளைகின்றன. உயர்ந்து செழிப்பாக வளரும் தேக்கு மரமும் சந்தன மரமும் காட்டு மர வகைகளாகும். இவற்றைத் தவிரத் தைலமரம் எனப்படும் ‘யூகலிப்டசு’ மரங்கள் உயர்ந்து வளருகின்றன. இம்மர வளர்ச்சிக்கு உதக மண்டலத்தின் தட்பவெப்பநிலை பொருத்தமுடையதாக உள்ளது. இங்குக் கொய்னாத் தோட்டங்களும் உள்ளன. கொய்னா மரப்பொருள்களிருந்து மருந்துகள் தயாரிக்கின்றனர். உதகமண்டலத்தில் காய்கறிகள் மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. உருளைக்கிழங்கு, முட்டைக் கோசு போன்றவை இங்குச் சிறப்பாகப் பயிராகின்றன. தோட்டப் பயிர்களுள் தேயிலையும் காப்பியும் சிறப்பானவை. இந்தியாவில் அசாமிற்கு அடுத்தபடியாகத் தேயிலை உதகமண்டலப் பகுதியில் மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. இந்நகரின் மையத்தில் உள்ள அழகான ஏரியும் அதன் அருகில் குதிரைப் பந்தய மைதானமும் பயணியர் தங்கும் விடுதிகளும் சிற்றுண்டிச் சாலைகளும் அழகிய பூங்காவும் தாவரவியல் தோட்டமும் இந்நகருக்கு அழகூட்டுவன; ஆண்டு தோறும் மே திங்களில் இங்கு மலர்க் காட்சி நடைபெறுகிறது. இதனைக் கண்டுகளிக்கப் பல்லாயிரவர் திரளுகின்றனர். உதகமண்டலத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் தொதவர்கள் என்னும் பழங்குடி மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். பழங்குடி மக்களாயினும் இவர்கள் உருவத்தில் அழகானவர்கள். இருளர் படகர், கோத்தர் போன்ற ஏனைய பழங்குடி மக்களும் வாழ்கிறார்கள். படகர் நீலகிரி மாவட்டத்தில் மிகுதியாக வாழும் பழங்குடியினர். இங்குத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பழங்குடி மக்கள் ஆய்வு மையம் ஒன்றை நடத்திவருகிறது. இங்கு இந்துசுத்தான் கச்சா ஒளிப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.