இலட்சுமணபுரி
ilaṭcumaṇapuri
இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தலைநகரமாகும்.
இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தலைநகரமாகும். இலட்சுமணபுரியை இலக்குனோ (Lucknow) என்று சொல்வர். இலக்குனோ என்னும் பெயரில் மாவட்டம் ஒன்றும் இயங்குகிறது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 2528 ச.கி.மீ. ஆகும்; மக்கள்தொகை 20,14,574 (1981).
இலட்சுமணபுரி கங்கையாற்றின் துணையாறுகளுள் ஒன்றான கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தில்லி மாநகருக்குத் தென் கிழக்கில் 435 கி.மீ. தொலைவிலும், கான்பூர் மாநகருக்கு வட கிழக்கில் 77 கி.மீ. தொலைவிலும் உள்ள இவ்வூர், மாபெரும் வாணிக மையமும் பண்பாட்டு மையமுமாகும். கங்கையாற்றுப் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ள இம்மாநகரம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இந்நகரில் இந்துப் பெருங்குடி மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்தாலும், இசுலாமியர்களும் இங்குக் கணிசமான தொகையினராய் உள்ளனர்.
இலட்சுமணபுரியின் தொடக்கத்தைப் பற்றியோ உருவாக்கத்தைப் பற்றியோ திட்டவட்டமான செய்திகள் கிடைத்தில. இந்நகரம் கி.பி. 13–ஆம் நூற்றாண்டிலிருந்து சிறப்புற்று விளங்கலாயிற்று. இவ்வூர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் அயோத்தி நவாபுகளின் தலைநகராயிற்று. அவர்கள் இங்குக் கட்டிய அழகான மாளிகைகள், மசூதிகள், ஏனைய கட்டடங்கள் போன்றவை நவாபுகளின் காலம் தொட்டுக் கட்டப் பெற்று வந்துள்ளன. ஆங்கிலேயர் அயோத்தியைத் தம் ஆட்சியுடன் இணைத்துக் கொண்டது (கி.பி. 1856) வரை இலட்சுமணபுரி நவாபுகளிடமே இருந்தது. ஆசப்–உத்–தௌலா (Asaf–ud–Daula) என்பார் இமாம்பரா என்னும் மாளிகையைப் பளிங்குக் கற்களால் கட்டியுள்ளார். இது குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னமாகும். இதனை அவர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டினார். இம்மாளிகையின் நடுவில் பெரும் மண்டபம் ஒன்று, பெரிய வில்வடிவான படிமேடை, மசூதி, தூபிகள் ஆகியன உள்ளன. ஆங்கில அரசாங்கத்தின் தலைமை அதிகாரியின் வீடும் இங்குக் கட்டப்பட்டிருந்தது. ஆனால், கி.பி 1857–58–ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருங்கலகம் எனப்படும் முதல் விடுதலைப் போரின்போது இக்கட்டடம் சீர்குலைந்தது. அதன் அழிவுச் சின்னங்களை இன்றும் காணலாம்.
இலட்சுமணபுரியில் தேசிய தாவரவியல் தோட்டம், விலங்கியல் தோட்டம், பூங்கா, பொது நூலகம், அரசு அருங்காட்சியகம், இலக்குனோப் பல்கலைக் கழகம், பலவகைக் கல்லூரிகள், பல்விதமான அரசு ஆய்வுக் கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் இந்தியாவிலேயே மக்கள்தொகை மிகுந்த மாநிலமாகும். அத்தகைய மாநிலத்தின் மொத்த வாணிக மையமாகத் திகழும் இலட்சுமணபுரி, குறிப்பாக உணவுப் பொருள்கள் வாணிகத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது. எனினும் இந்நகரில் தொழில்கள் குறைவு. மத்திய அரசின் இருப்புப்பாதைப் பணிமனைகளும் மிகப்பெரிய பருத்தி, காகிதம், சர்க்கரை ஆலைகளும் இங்குள்ளன. இம்மாநகரத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் ஆண்டு மாநாடுகள் பலமுறை நடைபெற்றுள்ளன.
இலக்குனோ ஒப்பந்தம் இங்குக் கையெழுத்தாயிற்று. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த ஒப்பந்தம் கி.பி. 1916–இல் இந்து–முசுலிம்களிடையே வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்னும் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தமக்குள் நிலவிய வேறுபாடுகளை மறந்து இரு வகுப்பினரும் நாட்டு விடுதலைக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதே இலக்குனோ ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமாகும். எனினும் இந்த நோக்கம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. நாட்டின் ஒருமைக்கு மாறாகப் பிரிவினைக்கு விதையூன்றியதும் இவ்வொப்பந்தமேயாகும். பாகிசுத்தான் பிரிவினைக்கு இவ்வொப்பந்தமே வழிகாட்டியது என்று குறை கூறுவோரும் உண்டு. இவ்வொப்பந்தம் முழுவதையும் ஆங்கில அரசு ஏற்றுக்கொள்ளாமல், வகுப்புவாதப் பிரதிநிதித்துவக் கோட்பாட்டை மட்டும் ஏற்றுக்கொண்டு இந்து–முசுலிம் ஒற்றுமைக்குத் தடைசெய்தது. கூட்டுப் பிரதிநிதித்துவத்தைக் காங்கிரசு கேட்ட போதிலும், அதனை ஆங்கில அரசு ஏற்றுக்கொள்ளாமையால் இத்திட்டம் தோல்வியுற்றது. இலட்சுமணபுரி புரட்சிவாதிகளின் முதன்மையான மையமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலட்சுமணபுரியின் மக்கள்தொகை 10,06,538 (1981). இது இந்தியாவின் 11–ஆம் பெருநகரமாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 324)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfjpde2c/
தமிழ்“இலட்சுமணபுரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xfjpde2c/APA
Oliyon Research. (2026). இலட்சுமணபுரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xfjpde2c/MLA
"இலட்சுமணபுரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xfjpde2c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment