கன்னட நாட்டுப் பெண்பாற் புலவர் ஆவர். வடகர்நாடகத்தில் வசவண்ணர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் தோன்றி வீரசைவ மதத்தைப் பரப்பினார். இந்நெறியைப் பின்பற்றிய அடியார் சிவசரணர் எனப்படுவர். இவர்கள் தமது கருத்துகளையும் இறை அனுபவங்களையும் பாடல் வடிவில் எழுதி வைத்தார்கள். இவை ‘வசனங்கள்’ எனப்படும். இவர்களுள் பெண்கள் பலர் இருந்தார்கள். இவர்களுள் ஒருவரே அக்கமாதேவி. இவர், அக்கமாதேவி என்றும் மகாதேவியக்கா என்றும் அழைக்கப்பட்டார். ‘அக்கா’ என்ற சொல் வீரசைவ சமயத்தில் இவரை மட்டுமே குறிக்கப் பயன்பட்டது. அக்கமாதேவியின் வசனங்கள் பட்டறிவின் களஞ்சியம்; உணர்ச்சி வெள்ளம்; கவிதைப் பெட்டகம். பெண்களுக்கே உரிய வகையில் எளிய சொற்களையும், அழகிய உவமைகளையும் அக்கமாதேவி பயன்படுத்தித் தம் கருத்துகளை இவர் வெளிப்படுத்தினார். எளிமையும் தெளிவும் இவர் தம் கருத்துகளில் மிளிர்கின்றன. அக்கமாதேவி வடகர்நாடகத்திலுள்ள உடுதடி என்னும் ஊரில் விமலர் என்பவருக்கும் சுமதி என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். இருவரும் சிவநெறிப்படி மகளை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கை நெறி ஆகியது. சிரீசைலம் என்னும் ஊரைப்பற்றியும், அங்கு உறையும் இறைவன் மல்லிகார்ச்சுனனைப் பற்றியும் கேள்விப்பட்டார். அந்த இறைவனையே தம் கணவனாக வரித்துக்கொண்டார். அந்நாளில், அவ்வூரையாண்ட கௌசிகன் என்ற மன்னன் உலாப் போகும்போது அக்கமாதேவியைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, மணம் செய்துகொள்ள விரும்பினான். அவள் மணத்துக்கு ஒப்புக்கொள்ளாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்பதற்காக அக்கமாதேவி அரசனை மணக்க ஒப்புக்கொண்டார். தம் வழிபாட்டுக்குத் தடைவிதிக்கக் கூடாதென்றும், தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக் கொள்வதாகவும் கூறினார். மணம் நிறைவேறியது. ஆனால், அக்கட்டுப்பாட்டின்படி அவனால் நடக்க முடியவில்லை. எனவே, அக்கமாதேவி அரண்மனையை விட்டு வெளியேறினார். கௌசிகன் தொட்ட ஆடைகளையும் களைந்து விட்டு, கூந்தல் உடலினை மறைக்கக் கலியாண நகரம் சேர்ந்தார். வசவண்ணர் முதலிய வீரசைவ அடியார்கள் அங்கே அனுபவ மண்டபத்தில் கூடியிருந்து, தம் இறையனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அக்கமாதேவியும் அவர்களுள் ஒருவர் ஆனார். “அடியார், மனைவியரே; ஆண்டவனே கணவன்” என்ற சீரிய கருத்தை அங்கே நிலைநாட்டினார். சிவசரணர் (சிவனடியார்) என்ற நிலையை எய்திய அக்கமாதேவி, தம் வசனங்களால் இறைவனுக்குப் புகழாரம் சூட்டினார். உலக வாழ்க்கையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டினார். உடல்மீதுள்ள பற்றுக் குறைவதற்கும், ஆன்மாவை அறிவதற்கும், ஆன்ம நாயகனாகிய இறைவனை அடைவதற்கும் வழிகூறினார். “அகந்தை கூடாது; பசிக்கும்போது பிச்சை எடுத்து உண்ண வேண்டும்; ஏரி குளங்களில் உள்ள நீரைக் குடித்துக் கோயில்களில் படுத்து உறங்க வேண்டும்; மாயை, உலகம் என்ற வடிவத்தில் எல்லோரையும் மயக்குகிறது; இதிலிருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும்; குருவே உய்யும் நெறி காட்டுவார்.” இவ்வாறெல்லாம் தம் வசனங்களில் பாடியிருக்கிறார் அக்கமாதேவி. ‘சென்ன மல்லிகார்ச்சு’ என்பது இவர் தம் வசனங்களில் பதித்துக்கொண்ட முத்திரையாகும். வாழ்க்கையின் மறைபொருளை மக்களுக்கு மிகத் தெளிவாக விளக்கினார். வீரசைவ வசன இலக்கியத்தில் ‘அக்கா’வின் இடம் இணையற்றதாகும்.டி.பி.சி.