அகமதாபாத்து என்னும் நகரம் குசராத்து மாநிலத்தின் தலைநகரமாகும். இந்நகரம் சபர்மதி ஆற்றின் மேல்கரையில் கடல் மட்டத்திலிருந்து 55 மீட்டர் உயரத்தில் உள்ளது. பம்பாய் மாநகருக்கு வடக்கே 451 கி.மீ. தொலைவிலும், தில்லி மாநகருக்கு 805 கி.மீ. தென்மேற்கிலும் இது உள்ளது. இந்திய மக்கள்தொகைக் கணக்குப்படி இது இந்தியாவின் ஆறாம் பெரும் நகரமாகும். இந்நகரத்தின் பழைய பெயர் கருணாவதி என்பதாம். கருணன் என்னும் அரசரால் அமைக்கப்பட்டதால் இது இப்பெயர் பெற்றது. அகமதாபாத்து (Ahamedabad) இந்தியாவின் மிகப் பெரிய வாணிக மையங்களுள் ஒன்றாகும், இங்கு ஆயிரத்துக்கு மேல் பஞ்சாலைகள் உள்ளன. பருத்தி நூல் நூற்றல், பருத்தி ஆடைகள், பனியன்கள், கதராடைகள் நெய்தல் போன்றவை இந்நகரத்தின் முதன்மையான கைத்தொழில்களாம். புகையிலை, கண்ணாடி, பட்டு முதலியன உற்பத்தியாகும் பிற பொருள்களாம். கண்ணைக் கவரும் கைவினைப் பொருள்களின் உற்பத்திக்கும் இந்நகரம் பெயர்பெற்றது. அகமதாபாத்தில் எண்ணற்ற அழகான மசூதிகளும், கல்லறைகளும், நுழைவாயில்களும் உள்ளன. இவை 15, 16, 17–ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. இக்கட்டிடங்களில் இந்து-முசுலிம் பாணி கட்டிடக்கலை இணைப்பினைக் காணலாம். இந்நகரில் இருக்கும் ‘சும்மா’ மசூதியைப் (Jumma Mosque) ‘பெரிய மசூதி’ என்றும் கூறுவர். சும்மா மசூதி குசராத்தை ஆண்ட சுல்தான் முதலாம் அகமது சா (Ahmed Shah I கி.பி. 1411) என்பவரால் இந்நகர் கட்டப்பெற்றது. மொகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் புகழ் மிக்க நகரங்களுள் ஒன்றாகவும் இது திகழ்ந்தது. வரலாற்றில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் கண்ட இந்நகரம் 19—ஆம் நூற்றாண்டில் வளம் கொழிக்கும் நகரமாக மாறியது. இது ஒரு கல்வி மையமும் ஆகும். இந்தியத் தேசிய காங்கிரசின் இரு மாநாடுகள் இங்கு நடைபெற்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்நகர மக்கள் சீரிய முறையில் பங்கேற்றனர். இந்நகரின் மக்கள்தொகை 21,23,831 ஆகும்.