அரசிறைக் கொள்கை என்பது அரசின் நிதிச் சுமையைப் பகிர்வதில் ஏற்படும் அடிப்படைச் சிக்கல்களையும் அரசின் செலவினங்கள் ஏற்படுத்தும் நன்மைகளையும் பற்றிக் கூறுவது. தொகுவினப் பொருளாதாரத்தை (Aggregate Economy) எவ்விதம் நன்மை தரத்தக்க வகையில் அமைத்திட முடியும் என்பதை இது விளக்குவது. தேவைகளை அளவீடு செய்வதிலும் அவற்றை ஆய்வு செய்வதிலும் ஏற்பட்ட முன்னேற்றம், பலவித நிதிக் கொள்கை அணுகுமுறைகளுக்கு வழிவகுத்தது. கினீசியப் (Keynesian) பொருளியல் கோட்பாடு இதற்குந் தூண்டுகோலாக அமைந்தது. பொருளாதாரத்தில் மொத்தத் தேவையின் மிகுதியையும் அதன் நிலைப்பாட்டையும் இவ்வணுகுமுறைகள் நோக்கங்களாகக் கொண்டன. மொத்தத் தேவை மிகும்போது, பொருளாதாரம் அதற்கு இணங்கும்; பயன்படுத்தப்படாத பொருளாதார மூலங்கள் பயன்படுத்தப்படும்; உற்பத்தி, வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவை பெருகும் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டவை இந்நோக்கங்கள். இக்கோட்பாட்டின்படி விலை நிலைப்பு ஒரு சிக்கலன்று. ஏனெனில், மிகுந்த தேவையை மிகுந்த அளிப்பு ஈடு கட்டுகிறது. இன்றேல், பண வீக்கம் தோன்றும். இக்கருத்துகள் யாவும் அரசிறைக் கொள்கையில் (Fiscal Policy) சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. இக்கொள்கையுடன் பொருளாதார, ஒழுங்கியல் அடிப்படையில் வருமான மறு பங்கீட்டு முறை அமைய வேண்டுமென்ற தேவையும் உணரப்பட்டது. இவ்வணுகுமுறைகளினால் எழுந்த கோட்பாடுகள், மக்களின் நுகர்வு, சேமிப்பு நடவடிக்கைகளையும், உபரி அல்லது பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் ஆகியவை எவ்வாறு நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன என்பதையும் ஆய்வு செய்ய வழிகோலின. பொருளாதாரத்தில் செலவுகளைப் பற்றிய ஆய்வு, பணத்தின் பங்கு பற்றி அறிய வழிகாட்டியது. செலவுகள் வருவாயினை உருவாக்குவதுடன், மொத்தச் செலவுகள் மொத்த வருவாய்க்குச் சமமாகின்றன. மொத்தச் செலவும் பணத்தின் அளிப்பும் நிலையான விகிதத்தில் இருக்கும்போது, அரசின் நிதிக் கொள்கையைவிடப் பணத்தின் அளிப்பு மொத்த வருவாய் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? என்ற வினா எழுகிறது. வரி இல்லாமலும், பணத்தின் அளிப்பை மிகுதிப்படுத்தாமலும் செயலின் அளவை உயர்த்திட முடியும். (இங்குப் பணத்தின் அளிப்பு என்பது அனைத்து மக்களின் மொத்தப் பண இருப்பு ஆகும்). அது பொது வருவாய் அல்லது செலவுக்குள்ள பண அளிப்பு விகிதத்தை மாற்றுகிறது. பொதுவாக, மக்கள் பணத்தை நீர்மை (Liquidity) நிலையில் வைத்திருக்க விரும்புவர். கூடுதலான நீர்மை விருப்பம் வரி வீதத்தை உயர்த்துகிறது. சொத்துகளையும் பிணைய வைப்புகளையும் (Securities) கூடப் பணமாக மாற்றிட விரும்புவர். பண அளிப்பிலும் அரசின் நிதிக் கொள்கையிலும் ஏற்படும் மாற்றங்கள் வட்டி வீதத்தைப் பாதிக்கின்றன. வட்டி வீதம் முதலீட்டைப் பாதிக்கிறது. செலவு, வருமானம், பணத்தின் அளிப்பு ஆகியவை குறித்த ஆய்வு, பணவாக்கக் கொள்கையும் (Monetary Policy), அரசாங்க நிதிக் கொள்கையும் ஒருங்கிணைந்து செயற்பட வலியுறுத்துகிறது. சமூக வருவாயை உயர்த்த இக்கொள்கைகள் துணைபுரிகின்றன. அரசிறைக் கொள்கையை வகைப்படுத்த நடைமுறையில் பல வழிகள் தோன்றியுள்ளன. பற்றாக்குறை நிதி நிலையில், அரசின் செலவில் ஏற்படும் மிகுதி, மொத்த வருவாயை உயர்த்துகிறது. இம்மிகுதி தொடக்கக் காலத்தில் பெருக்கியின் (Multiplier) விளைவுகள் மூலம் நிகழ்கிறது. அதே நேரத்தில் அரசின் செலவால் உண்டான வருவாய், மக்களால் பல்வேறு நிலைகளில் எவ்விதத்தில் செலவழிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமைகிறது. செலவுகள் மிகுதியாவதால் வருமானமும் மிகுதியாகிறது. மேற்கொண்டு செலவிற்குப் பணமில்லை என்ற நிலைவரை இந்நிகழ்ச்சி தொடர்கிறது. செலவில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமல்லாமல் பொதுச் செலவு நிலையாக இருக்கும் வகையில் வரியில் ஏற்படும் மாற்றம் பெருக்கியின் போக்கினைத் தூண்டுமென இன்று அறியப்படுகிறது. வரிக் குறைப்பினால் தனியார் செலவு மிகும். இவ்வாறு தனியார் செலவுகள் மாறுகிற போது பெருக்கியின் விளைவாக மாற்றங்கள் தோன்றும். பொதுச் செலவுக்கான பெருக்கிகளோடு, வரிப் பெருக்கிகளும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அரசின் செலவுகளும் வருவாய்களும் சமமாகும் நிலையில் கூடப் பெருக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கலாம். இதுவே சமநிலை வரவு செலவுத் திட்டப் பெருக்கியின் செயல்முறை ஆகும். அரசாங்கத்தைப் பொதுப் பொருள்கள் அல்லது அரசு சார்பான பொதுப் பொருள்களின் (Quasi Public Goods) உற்பத்தியாளராகவோ வருவாயை மறுபங்கீடு செய்யும் அமைப்பாகலோ அங்காடிப் பொருளாதார அமைப்பைச் சீர்செய்யும் கருவியாகவோ கருதலாம். அரசைப் பற்றிய இக்கருத்து தொன்மைக்காலக் கருத்தினின்றும் மாறுபட்டது. பொருளாதாரத்தின் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லாட்சிக் கருத்தினின்றும் இப்புதிய கருத்து மாறுபடுகிறது. மனித சமூகப் பொருளாதார வளர்ச்சியின் உடனடித் தேவை உணரப்பட்ட காலத்தில் தத்துவக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், பொதுவாகவே அரசின் பங்கு பெருகி வந்தது. இதன் காரணமாக வளர்ச்சி அல்லது முன்னேற்ற வழி முறைகளில் முழுமைப் படைப்புக் கோட்பாட்டின் (Wholistic Approach) அணுகுமுறை கையாளப்பட்டது. அரசின் பணியினை விளக்கும்போதும், அரசிறைக் கொள்கையின் விளைவுகளை விளக்கும்போதும் மொத்த வருவாய் அளவு, தனியார் வருவாய் அளவு, பொருளாதார மொத்தத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது இப்போது வலியுறுத்தப்படுகிறது. முன்னேறிய அல்லது முன்னேற்றமடையாத சமூக அமைப்பாக இருப்பினும், அவற்றின் சிக்கல்களை அணுகும்போது அப்பொருளாதாரத்தின் அளிப்புப் பகுதியும் கவனமாக ஆய்விற்குட்பட வேண்டும் எனக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் பொருளாதார மேலாண்மையின் தேவையைக் கருதும்போது பண வருவாய்க்கு மட்டும் சிறப்பிடம் அளித்திடாமல், வாழ்க்கைத் தரக் குறியீடுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் கருதப்படுகிறது. அரசின் பல வருமான வழிமுறைகளினால் வருவாயில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதுபோலவே நிதியியல் பயன்களும் பலவாறான விளைவுகளை உண்டாக்குகின்றன. இவற்றால் ஏற்படும் மேலோங்கிய அறிவு, ஆற்றல்மிகு பொருளாதார மேலாண்மைக்கான கொள்கையை உருவாக்குகிறது. சட்டமியற்றுவோர், நிருவாகத்தினர், மக்கள் தலைவர்கள், தனியமைப்புகளைச் சார்ந்தோர் ஆகிய அனைவரும் கொள்கைகளை உருவாக்குவதில் பங்கேற்கின்றனர். பொதுப் பண்ட (Public Good) உற்பத்தியிலிருந்து அரசின் கொள்கை முடிவுகளை அறிந்திட முடியும். அங்காடி விலையில் விற்கப்பட முடியாத தன்மையைப் பெற்றிருப்பவை பொதுப் பண்டங்கள், நாட்டின் பாதுகாப்பு, உண்மையான பொதுப் பண்டத்திற்குச் சான்றாக அமையும். தொடக்கக் கல்வி, சார்பான பொதுப் பண்டத்திற்கு (Quasi Public Good) எடுத்துக்காட்டாகும். பொதுப் பண்டங்களின் நுகர்வு பல சிறந்த நலன்களை விளைவிக்கிறது. அரசின் செலவுகள் நீண்டகாலங்களுக்கு அதிகரித்து வருகிறது. இப்போது பொதுப் பண்டங்கள் மிகுதியான அளவில் உற்பத்தி செய்யப்படுகிறதென்றும் வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. எப்பொருள் உற்பத்தி செய்யப்படவேண்டும், எந்த அளவிற்குச் செய்யப்படவேண்டுமென்பவை குறித்துத் திட்டமிடுவதன் தேவை உணரப்படுகிறது. இந்நிலையில் நிருவாகத் திறமை, உற்பத்திச் சிக்கனம், மிகைப் பயன் விளைவுகள் (Spill–over Effects) ஆகியவையும் கவனிக்கப்பட வேண்டியவையே. மிகைப் பயன்கள் பல்வேறு பிரிவினரிடையே மட்டுமல்லாமல் நீண்டகாலத்திலும் பயனளிப்பவையாக அமையலாம். இப்பயன்களை நுட்பமாக மதிப்பிடுவது கடினம். பொதுச் செலவு ஆய்வில், செலவு—நன்மை அணுகுமுறை (Cost–Benefit Approach) பல வழிகளில் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக அமைகிறது. இவ்வணுகுமுறையில் திட்டங்களுக்கு முதலீடு செய்யுமுன்னே, அவற்றால் ஏற்படும் நன்மைகளும் செலவுகளும் அளவிடப்படுகின்றன. வளரும் நாடுகளின் உற்பத்தி ஆற்றலைப் பெருக்கத் திட்டங்கள் தீட்டுவதன் தேவை பெருமளவில் உணரப்படுகிறது. வளர்ச்சியடைந்த தொழில் வள நாடுகள், அவற்றின் உண்மை ஆற்றலுக்கு (True Potential) ஈடாகத் தம் பொருளாதாரத்தை அமைத்திட அரசின் நிதிக் கொள்கையை முதன்மைக் கருவியாகக் கொண்டு செயற்படுகின்றன. வணிகச் சுழற்சியின் (Trade Cycle) விளைவால் ஏற்படும் சிக்கலையும் மாற்றங்களையும் களைந்திட இக்கொள்கைகளே உதவுகின்றன. பணவீக்கத்தைத் தவிர்ப்பது, வேலைவாய்ப்பை மிகக் செய்வது ஆகிய காரணங்களுக்காக இக்கொள்கைகளைப் பொருத்தமான வழி வகைகளில் கையாளுகின்றன. வளர்ச்சி குறைந்த நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்திருப்பதால், அரசாங்கம் பெருமளவில் செலவு செய்து வேலை வாய்ப்பினைப் பெருக்க வேண்டியுள்ளது. அதனைப் போலவே வறுமையை ஒழிப்பதும் ஒரு சிறந்த பணியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அரசாங்கம் தன் நிதிக் கொள்கையின் மூலம் பொதுச் செலவில் அளவிறந்த தொகையைத் துயர் துடைக்கும் பணிக்கும் (Relief) உதவித்தொகைக்கும் (Subsidy) கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது. மேலும், பொதுத் துறை நிறுவனங்கள் எப்போதும் உபரி வருமானத்தைப் பெறும் வண்ணம் செயற்பட இயலாது. அளிப்புப் பகுதியில் அரசின் கட்டுப்பாடு போதாத நிலையில், விலைகளை எளிதில் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். இந்நிலையில் அரசுக்கு மிகுந்த செலவு ஏற்படும் நிலையும் உள்ளது. நிதிக் கொள்கை பற்றிய ஆய்வில் வரவு செலவுத் திட்டமும் அதன் விளைவுகளும் கவனமாக வரையறுக்கப்பட்டு ஊக்கமளிக்கப்படுகின்றன. அரசாங்கம் வரிகள், வரியற்ற வருவாய், கடன்கள் போன்றவற்றிலிருந்து திரட்டிய வருவாயைச் சில குறிப்பிட்ட பணிகளுக்காகச் செலவு செய்யக் கூடும். பொருளாதாரத் திறனை மேம்படுத்த நிதியியல் நடவடிக்கையில் அரசாங்கம், ஓர் ஒழுங்கு முறையை வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக அறிமுகம் செய்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்த அல்லது ஊக்கப்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் சில உள்ளார்ந்த தன்மைகள் உண்டு. அயல்நாட்டு வருவாய், உதவி அல்லது கடன் போன்றவையும் இதில் சிறந்த பங்காற்றுகின்றன. அரசின் பன்னாட்டுப் பொருளாதார உறவுகளும் கூட வரவு செலவுத் திட்டத்திலும் அதன் மூலம் நிதிக் கொள்கையிலும் பாதிப்பை விளைவிக்கின்றன.பி.கி.ரா.