திபேத்திய புத்த சமயத் தலைவர். திபேத்திய மொழியில் இதனைப் பிலாமா (Blama) என்பர். இலாமா (Lama) என்னும் சொல்லுக்கு மிக உயர்ந்தவர் அல்லது முதன்மையானவர் என்பது பொருள். இலாமாக்களுள் சிலர் அவதாரங்களாகக் கருதப்படுகின்றனர். உயர்ந்த ஆன்ம மெய்யுணர்வைப் பெற்றவர்களாதலால் இவர்கள் மக்களின் மதிப்புக்கும் மரியாகைக்கும் உரியவர்களானார்கள். இலாமாக்கள் முழுத் துறவிகள் இவர்களை அடுத்து மூன்று படி நிலைகளில் புத்த சமயச் சார்பாளர் அமைந்துள்ளனர். குடும்பப் பொறுப்பேற்று நடக்கும் பௌத்தர்கள் கடைநிலையைச் சார்ந்தவர்கள். திபேத்திய மக்கள் ஆட்சித் தலைமையுடைய சமயத் தலைவரைத் தலாய் இலாமா (Dalai Lama) எனக் குறிப்பிடுகின்றனர். புத்தசமயம் திபேத்திற்கு வருவதற்கு முன்னர்த் திபேத்திய மக்கள் பான் (Bon) என்னும் ஒருவகைச் சமயத்தைப் பின்பற்றினார்கள். இந்தப் பண்டைய சமயத்தைப் பற்றி விவரங்கள் கிடைத்தில, புத்த சமயம் ஏறத்தாழ 1300 ஆண்டுகளுக்கு முன்னர் நேபாளத்திலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அப்போது திபேத்தின் மன்னராயிருந்தவர் சாங்சென் காம்போ (Song–tsen Gam-po} என்பவராவார். இவர் கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவருக்கு மனைவியர் இருவர். அவர்களுள் ஒருவர் நேபாள இளவரசி; மற்றவர் சீன இளவரசி, அவ்விருவரும் புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள். திபேத்தின் புதிய தலைநகரான இலாசா (Lhasa)வுக்குப் புத்த சமய நூல்களையும், புத்தரின் படிமங்களையும் கொண்டுவந்தவர்கள் அவர்களே, பான் சமயத்தைச் சார்ந்தவர்கள் புத்த சமயத்தைக் சுடுமையாக எதிர்த்து அதன் முன்னேற்றத்தைத் தடுத்ததுடன், அதை வளரவிடாமலும் அடக்கி வைத்தனர். புத்த சமய வரவினால் திபேத்து பெற்ற பெரியதொரு சாகனை அவர்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் அமைந்ததுதான். அதை வடமொழியிலிருந்து உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இகன் விளைவாக இந்தியாவிலிருந்து வந்த புத்த சமய நூல்களைத் தாம் வழிவமைத்த மொழியில் மொழிபெயர்ப்புச் செய்து ஆயிரக்கணக்கான நூல்களை உருவாக்கிக் கொண்டார்கள். இம்மொழியே பின்னர்த் திபேத்தின் இலக்கிய மொழியாயிற்று. எனினும், புத்த சமயம் வளர்ந்து முன்னேறவில்லை. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், புத்த சமயம் மீண்டும் தலையெடுத்தது. அப்போதைய திபேத்திய மன்னரான தி–சாங் தீ–சென் (Ti–song De–sen, ஏறக்குறைய கி.பி. 740–786) என்பார் புத்த சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்த மன்னர் காலத்தில்தான் இந்தியாவிலிருத்த நாலந்தாப் பல்கலைக் கழகத்திலிருந்து மகாயான புத்த சமய அறிஞரான சாந்திரக்சிதர் (Santiraksita) திபேத்து நாட்டின் அழைப்பின் பேரில் அங்குச் சென்று, புத்த சமயத்தை நிலைநாட்டினார். அவரே திபேத்தின் புத்த சமயத் தலைவருமானார். அவருடைய பரிந்துரையின்பேரில் பத்மசம்பலர் (Padmasambhava) என்னும் பெயர்கொண்ட இந்தியப் புத்த சமய நல்லாசிரியர் திபேத்திற்கு அழைக்கப்பட்டார். அவர் யோகக் கலையிலும், மந்திரம், தந்திரம், பக்தி போன்றவற்றிலும் தலைசிறந்தவராகக் கருதப்பட்டார். அவர் திபேத்திய குருமார்களைப் பயிற்றுவிக்கும் நோக்குடன், மடாலய முறையில் அமைக்கப் பெற்ற பாடத்திட்டத்தைச் செயற்படுத்தினார். பத்மசம்பவரும் சாந்திரக்சிதரும் இணைந்து கட்டியதே முதல் புத்த மடாலயமாகும். இதை அவர்கள் கி.பி. 749–ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்கள். இந்த முதல் மடாலயம் நியுங்–மா–பா (Nying–ma–pa) என்று கூறப்படுகிறது. பத்மசம்பவரின் சீடர்கள் இந்தியாவிலிருந்து வந்த பல புத்த சமய நூல்களைக் திபேத்திய மொழியில் பெயர்த்துக் கொடுத்தார்கள். புத்த சமயம் பெருகி வளரவே, ஏனைய மடாலயங்கள் கட்டப்பட்டதுடன் பிற மடாலய அமைப்புகளும் தோற்றுவிக்கப் பெறலாயின. அதீசர் (Atisha) என்னும் பெயர்கொண்ட இந்தியப் புத்தசமயத் துறவியொருவர் கி.பி. 1039–ஆம் ஆண்டு திபேத்துக்கு வந்தார். அவர் அமைத்த மடாலய முறை க–தம்–பா (Ka–dam–pa) எனப் பெயர் பெற்றது. இது ஒரு சீர்திருத்த இயக்கமாகும். இந்நிறுவனம் மடாலயக் கட்டுப்பாடு, கள்ளுண்ணாமை, பிரமசரியம் போன்றவற்றை மீண்டும் நிலைநாட்டப் பாடுபட்டது. அதீசர் வடமொழியில் ‘துறவற நிறைவுக்கு வழிகாட்டும் ஒளி’ (Lamp on the path to saintly perfection) என்னும் நூலை இயற்றினார். இதன் திபேத்திய மொழிபெயர்ப்பும் புகழ்பெற்றது. சில ஆண்டுகளுக்குப் பின்னர்க் க–குயு–பா (Ka-Byu-pa) என்னும் மடாலய முறையைக் திபேத்திய இலாமாவான மார்–பா (Mar–pa) என்பார் நிலைநாட்டி, தாந்திரியக் கொள்ளைகளைத் (Tantric doctrines) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில சீடர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் இக்கொள்கைகளை இந்திய ஆசிரிய- ரான நரோப்பா (Naropa) என்பாரிடமிருந்து கற்றுக் கொண்டார். மார்–பாவின் தலைமைச் சீடரான மிலரீபா (Milarepa) என்பாரே திபேத்திய வரலாற்றில் தலைசிறந்த புத்தசமயத் துறவியாகக் கருதப்படுகிறார். சாக்ய–பா (Sakya–pa) மடாலயம் கி.பி. 1071–இல் உருவாக்கப்பட்டு, இந்தியப் புத்தசமய நூல்களை ஆழ்ந்த புலமையுடன் திபேத்திய மொழியில் மொழிபெயர்க்கும் பணியைச் சீரிய முறையில் செய்தது. சாக்யலாமா பாக்-பா (Pak–pa) என்பாரே, திபேத்தின் முதல் இலாமாவாகக் கி.பி. 1270–ஆம் ஆண்டில் சீனாவை ஆண்ட மங்கோலியப் பேரரசரான குப்லேகான் (Kublai Khan) என்பவரால் அமர்த்தப்பட்டார். தொசாங்–கா–பா (Tsong–Kha–pa) என்பார் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரை இரண்டாம் புத்தர் என்று போற்றினர். இவரும் அதீசரைப் பின்பற்றிப் பல அரும் சீர்திருத்தங்களைச் செய்தார். இவரும் இவர்தம் சீடர்களும் இலாசா–கான்-தன் (Lhasa–gan–den) என்னும் மடாலயத்தை கி.பி. 1409–இலும், திரே–புங் (Dre–pung) என்னும் மடாலயத்தை கி.பி. 1416–இலும், சே–ரா (Se–ra) என்னும் மடாலயத்தை கி.பி. 1419–லும் கட்டி முடித்தனர். இம்மூன்று மடாலயங்களில் 16,500 இலாமாக்கள் தங்கியிருந்தார்கள். தொசாங்–கா–பா என்பாரே கி.பி. 1409–ஆம் ஆண்டில் கே–லூக்–பா (Ge–luk–pa) மஞ்சள் தொப்பி இயக்கத்தைத் (Yellow–Hat Order) தொடங்கினார். இக்குழுவினரே ஆட்சியையும் நடத்துகிறார்கள். முதல் தலாய் லாமா பிறந்தது கி.பி. 1474–ஆம் ஆண்டுக்குப் பின்னர்த்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பின்னர் வந்த 14–ஆம் தலாய் லாமா 1950–ஆம் ஆண்டில் முழுப் பொறுப்பைப் பெற்றார். அந்த ஆண்டில்தான் சீனா திபேத்தின்மீது படையெடுத்தது. திபேத்தியர்கள் சீனர்களின் வல்லாட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தனர். தலாய் லாமா 1959–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இந்தியாவுக்கு ஓடி வந்தார். அவர் இன்றும் இமயமலைச் சாரவிலுள்ள முசோரியில் தங்கி வாழ்கிறார். புத்த சமய நூல்கள் கி.பி. 7–ஆம் நூற்றாணடிலிருந்து கி.பி. 13–ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் புத்த சமய நூல்களிலிருந்து திபேத்திய மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவை 225 தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. திபேத்திய முறையில் எழுத்த புத்த சமயத்தை மங்கோலியா (Mongolia), மஞ்சூரியா (Manchuria), சிக்கிம் (Sikkim), பூட்டான் (Bhutan) போன்ற பகுதிகளிலும், ஓரளவு நேபாளத்திலும், வட இந்தியாவிலும், வடக்கு, மேற்குச் சீனாவிலும், சோவியத்து ஒன்றியத்தின் சில பகுதிகளிலும் இன்னும் காணலாம்.