அழகுமுத்துப் புலவர்
aḻakumuttup pulavar
200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தில் தோன்றியவர்.
200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தில் தோன்றியவர். தந்தையார் பெயர் அம்பலவாணச் செட்டியார்; தாயார் சிவகாமசுந்தரி. உடன் பிறந்தவர் நால்வர். அவர்களுள் மூவர் ஆண்கள்; ஒருவர் பெண்.
அம்பலவாணச் செட்டியார் நாகப்பட்டினத்து முருகன் கோவிலில் அலுவல் பார்த்து வந்தார். அம்பலவாணர் தம் மகன் அழகுமுத்துவுக்குப் போதிய கல்வியினை இளமையில் அளிக்காமைக்குக் காரணம் இளமையில் இவர் நோயால் பீடிக்கப் பெற்றவராக இருந்தமையாகும்.
இவர், முருகன் மீது அளவில்லாத பக்தியுடையவர், போதிய கல்வியறிவு இல்லாவிடினும் தந்தையாருக்குப்பிறகு, அவர் பார்த்த முருகன்கோவில் அலுவலை அழகுமுத்துப் புலவரே கவனித்து வந்தார். முருகனுக்குப் படைக்கப் பெற்ற படையலை மட்டுமே உண்டு வந்தார். தெய்வீக ஆற்றல் பெற்றவர் என்று போற்றப் பெற்றார்.
ஒரு நாள் முருகக் கடவுள் இவருக்குக் காட்சியளித்து ‘நான்தான் மெய்கண்ட வேலவன்; என்னைப் பாடுவாயாக’ என்று அருள் புரிந்தார் என்றும், அன்று முதல் கல்வியறிவு அற்றவராக இருந்த அழகுமுத்து அருட் கவிமழை பொழியும் அழகுமுத்துப் புலவரானார் என்றும் கூறுவர்.
முருகப் பெருமானே இவருக்கு எல்லாமுமாகத் திகழ்ந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தென்னகம் முழுதுமேயன்றி வடநாடும் சென்று அங்குள்ள பல தலங்களையும் வழிபட்டுத் திரும்பினார். பின்னர்ச் சீர்காழியில் ஒரு மடத்தில் தங்கியிருந்து இறைவழிபாடு நிகழ்த்தி வந்தார். அங்கேயே ஒரு சித்திரைத் திங்கள், சதய நட்சத்திர நாளில் இறைவன் திருவடியை அடைந்தார். அங்கேயே அடக்கம் செய்யப் பெற்றார். இவருடைய சமாதி திருத்தாளமுடையார் கோவிலுக்கு அருகில் உள்ளது என்பர்.
முருகப் பெருமான் மீது மாளாத அன்பு கொண்ட அழகுமுத்துப் புலவர், அவர் அருள் கிட்டியவுடன் பாடிய நூல் ‘மெய்கண்ட வேலாயுத சதகம்’ ஆகும். இது நூறு பாடல்களைக் கொண்டது. இதனை அடுத்துக், ‘காயாரோகணக் குறவஞ்சி’, ‘மெய்கண்ட வேலாயுத உலா’ ஆகிய நூல்களையும் ‘திறப்புகழ்’ என்ற நூலையும் பாடினார். அழகுமுத்துப் புலவர் பாடியருளிய ‘திறப்புகழ்’ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் போன்ற சிறப்புடையது என்னும் பாராட்டினைப் பெற்றது.மு.த.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 933)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x9hcaa3b/
தமிழ்“அழகுமுத்துப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x9hcaa3b/APA
Oliyon Research. (2026). அழகுமுத்துப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x9hcaa3b/MLA
"அழகுமுத்துப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x9hcaa3b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment