நன்னுாலாசிரியர் சார்பெழுத்துகள் பத்து வகைப்படும் என்று கூறி, அவை இத்துணைய என்பதையும் விளக்கியுள்ளார். பத்துச் சார்பெழுத்துகளுள் ‘ஆய்தம்’ ஒன்றாகும். அதனை அவர், ‘உயர் ஆய்தம் எட்டு’ என்று விரித்தும் காட்டியுள்ளார் (நன். 61). இதில் ‘உயர் ஆய்தம்’ என்பது தன் மாத்திரையில் குறைவுபடாது அமைந்தியலும் முற்றாய்தத்தினைக் குறிக்கும். புள்ளி வடிவினதாகிய முற்றாய்தம் குற்றெழுத்திற்கு முன்னதாய், உயிரோடு கூடிய வல்லெழுத்து ஆறன் மேலதாய் வருவதாகும். இதனை நன்னூலார், ‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி, உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே’ என்று இலக்கணப்படுத்திக் காட்டியுள்ளார். இதனை, எஃகு கஃக, கஃடு, கஃது, கஃபு, கஃறு என்று வல்லின வகையால் இயல்பாக வரும் ஆய்தம் ஆறினோடு, அஃகடிய (அவ்+கடிய), அஃகான் (அ+கான்) என்று முறையே புணர்ச்சி விகாரத்தாலும் செய்யுள் விகாரத்தாலும் வரும் ஆய்தம் இரண்டினையும் சேர்த்து, முற்றாய்தம் எட்டு என்பதனை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுத் தந்து விளக்கியுள்ளனர். கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என்று லகார ளகார ஈற்றுப் புணர்ச்சியினால் உண்டாகிய ஆய்தம் புணர்ச்சியால் தோன்றிய ஆய்தம் என்றாலும், அவை குறுகி ஒலிப்பதனால் முற்றாய்தமாகக் கொள்ளப்படாமல் ஆய்தக் குறுக்கமாகவே கொள்ளப்படும். இதனை நன்னூலார், ‘லள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும்’ என்னும் நூற்பாவில் (நன். 97) தெளிவுபடுத்தியுள்ளார். ‘ஆய்தம்’ தோன்றுவதற்கு இடம் தலை; முயற்சி அங்காத்தல் ஆகும்.