கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் பாண்டிய நாட்டில் இருந்த ஓர் அரசியல் பிரிவு. இருஞ்சோணாட்டுப் பிரிவில் அர்ச்சுனாநதி, வைப்பாறு, கௌசிகமாநதி, உப்போடை ஆகியன பாயும் இன்றைய சாத்தூர் வட்டத்தின் கீழ்ப்பகுதியும், இதனை ஒட்டிய முதுகுளத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியிருந்தன. இப்பிரிவில் இருப்பைக்குடி, கூடற்குடி, குளத்தூர், துழாயூர், வெளியங்குடி, ஆலங்குடி, நென்மலி முதலான நகரங்களும், முதலூர், மாறனூர், கொழுவூர், சாத்தனூர், சிறுபுத்தூர், கும்மண மங்கலம், இளவிருப்பை முதலான ஊர்களும் அடங்கியிருந்தன. இருஞ்சோணாட்டுப் பகுதி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டினை ஆண்டு வந்த சீமாற சீவல்லபனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 815–862), சாத்தூர்ப் பகுதியைப் பாண்டியனின் மேலாண்மைக்குட்பட்டு ஆண்டுவந்த இருப்பைக்குடி கிழவனின் அரும்பணியால் செழிப்புற்று விளங்கியது. இதற்கு முன்பு இப்பகுதி வறட்சியாகவே இருந்தது. ம.இரா.த.