இது ஒரு வீரிய கனிம அமிலம். இதன் மூலக் கூறு வாய்ப்பாடு இந்த அமிலத்தை இந்தியர்களும், எகிப்தியர்களும் தொன்று தொட்டே அறிந்திருந்தனர். அந்நாளைய இரசவாதிகள் நைட்ரிக் அமிலத்தைத் தயாரிப்பதற்கான வழிமுறையையும், அமிலத்தின் பயன்பாடுகளையும் அறிந்திருந்தனர். அவர்கள் இதனை வீரியம் மிக்க நீர்மம் என்று பொருள் படுவதான அக்வாஃபோர்ட்டிஸ் (aquafortis) என்னும் பெயரால் அழைத்தனர். வெடியுப்பு எனப்படும் பொட்டாசியம் நைட்ரேட்டை, அடர் சல்ஃப்யூரிக் அமிலத்துடன் காய்ச்சி வடித்தால், நைட்ரிக் அமிலம் கிடைக்கப் பெறும் என்பதை அவர்கள் பட்டறிவின் மூலம் தெரிந்து கொண்டனர். பல்லாண்டுகளாகக் கையாளப் பெறும் இந்த ஆய்வக முறையை, முதன் முதலில் கிளாபர் என்னும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர் 1648–ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். இந்த அமிலத்தில் ஆக்சிஜன் அடங்கியிருக்கிறது என்பதை லவாய்சியர் 1776இல் கண்டறிந்தார். 1816இல் கே லூசாக் என்பாரும், பெர்த்தல்லோ என்பாரும் இந்த அமில மூலக் கூறின் வேதி அமைப்பைக் கண்டறிந்தனர். இன்றைய நடைமுறையிலும், ஆய்வகத்தில் நைட்ரிக் அமிலம் கிளாபர் முறையில்தான் தயாரிக்கப் படுகிறது. சோடியம் நைட்ரேட் அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டை அடர் கல்ஃப்யூரிக் அமிலத்துடன் கலந்து, வாலை வடி கருவியில் காய்ச்சி வடித்தால், நைட்ரிக் அமிலத்துடன் வெப்ப நிலைக்கு எற்றவாறு, பிற துணை விளை பொருள்களும் உருவாகின்றன. குறைந்த வெப்ப நிலையில், சோடியம் அல்லது பொட்டாசியத்தின் ஹைட்ரஜன் சல்ஃபேட்டும், உயர் வெப்ப நிலையில், அவற்றின் சல்பேட்டும் துணை விளை பொருள்களாக அமைகின்றன. (நைட்ரிக் அமிலம்.............. ) இவ்வாறு தயாரிக்கப்படும் நைட்ரிக் அமிலம் மாசு கலந்த நிலையில், பழுப்பு நிறமாக இருக்கும். அதற்குக் காரணம், சிறிதளவு நைட்ரிக் அமிலம் காய்ச்சி வடித்தலின் போது, சிதைவுறுவதும், அச்சிதைவினால் உருவாகும் பழுப்பு நிற நைட்ரஜன் பெராக்சைடு வளிம அமிலத்தில் கரைந்து விடுவதும் ஆகும். இத்தகைய பழுப்பு நிறத்தை தவிர்க்கச் சூடான காற்றை அமிலத்திற்குள் செலுத்தி மாசு நீக்கலாம். தொழில் துறையில் ஆஸ்வால்டு என்னும் வழி முறையில் நைட்ரிக் அமிலம் பெருமளவில் தயாரிக்கப் படுகிறது. ஒரு வினை வேக மாற்றியின் முன்னிலையில், அம்மோனியாவை ஆக்சிஜனேற்றத்திற்கு (Catalytic oxidation) உட்படுத்தி, நைட்ரிக் அமிலத்தைத் தயாரிக்கும் இம்முறையை ஆஸ்வால்டு என்னும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர் 1901–இல் உருவாக்கினார். இதற்கு அடிப்படைத் தேவையான அம்மோனியா, ஹேபர் முறையில் தயாரிக்கப் படுகிறது. அம்மோனியா வாயுவை, அதைப் போல் பத்து மடங்குப் பருமன் அளவான காற்றுடன் கலந்து, ஏறத் தாழ 600°C வெப்ப நிலைக்குச் சூடாக்கப்பட்ட பிளாட்டினம்–ரேடியம் உலோகக் கலவையாலான கம்பி வலையின் மீது செலுத்த வேண்டும். உலோக வலைக் கம்பி, வினை வேக மாற்றியாகச் செயல் படுகிறது. அம்மோனியா காற்றிலுள்ள ஆக்சிஜனால், ஆக்சிஜனேற்றம் செய்யப் பட்டு, நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. அது தாழ் வெப்ப நிலையில், ஆக்சிஜனோடு சேர்ந்து, நைட்ரஜன் பெராக்சைடாக மாற்றம் பெறுகிறது. பின்னர், நைட்ரஜன் பெராக்சைடு நீரில் கரைந்து, நைட்ரிக் அமிலத்தைத் தருகிறது. இவ்வாறு உருவான அமிலம் 50–70% அமிலச் செறிவைக் கொண்டிருக்கும். அமிலச் செறிவு 90–100% கொண்டதாக நைட்ரிக் அமிலத்தைப் பெறக் கீழ்க் காணும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம். அவை: நைட்ரேட்டுகளைத் திண்ம நிலையில் அடர் சல்ப்யூரிக் அமிலத்துடன் காய்ச்சி வடித்தல், 60% நைட்ரிக் அமிலத்துடன் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைக் கலந்து, காய்ச்சி வடித்தல் மூலம் நீர் நீக்கம் (dehydration) செய்தல், நைட்ரஜன் பெராக்சைடை நீர்த்த நைட்ரிக் அமிலக் கரைசலில் ஆக்சிஜனேற்றம் செய்தல் என்பன. நைட்ரிக் அமிலத்தைப் பெருமளவில் பெற, மற்றொரு முறையும் கையாளப் படுகிறது. பர்க்லண்டு–இடு முறை அல்லது மின் வில் முறையில் (arc process) இரண்டு மின் முனைச் சட்டங்களுக்கு இடையில் ஒரு மின்சார வில் (electric arc) உண்டாக்கப் படுகிறது. இந்த மின்சார வில்லின் வெப்ப நிலை 3000°C ஆகும். மின்சார வில்லின் ஊடாகக் காற்றைச் செலுத்தினால், காற்றிலுள்ள நைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்து, நைட்ரிக் ஆக்சைடைத் தருகின்றன. இவ்வாறு உருவாகும் நைட்ரிக் ஆக்சைடை 3000°C வெப்ப நிலையிலிருந்து, திடீரென்று 1000°C வெப்ப நிலைக்குக் குளிரச் செய்ய வேண்டும். இல்லையெனில், நைட்ரிக் ஆக்சைடு, மீண்டும் நைட்ரஜனாகவும், ஆக்சிஜனாகவும் சிதைந்து விடும். இதைப் படிப் படியாக, மேலும் குளிரச் செய்து, 150°C வெப்ப நிலைக்குக் கொண்டு வந்து, காற்றுடன் வினையுறச் செய்தால், அது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து நைட்ரஜன் பெராக்சைடாக மாறுகிறது. நைட்ரஜன் பெராக்சைடு நீருடன் வினைப் பட்டு, நைட்ரிக் அமிலமாக மாறும். மின் வில் முறையைப் பின்பற்றியே, இயற்கையில் காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் பகுதி வினைகளுக்கு உட்பட்டு, நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. மின்னல், இடி தோன்றும் போது, காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன், ஆக்சிஜனுடன் கூடி, மின்னலின் பெரு மின்சாரத்தின் உதவியால், நைட்ரஜன் ஆக்சைடுகள் உருவாகின்றன. பின்னர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மழை நீரில் கரைந்து, நைட்ரிக் அமிலமாக மாறுகின்றன. இயற்பியல் பண்புகள். தூய்மையான நைட்ரிக் அமிலம் ஒரு நிறமற்ற, ஒளி புக விடும் நீர்மம். இதன் அடர்த்தி எண்: 1.52; உறை நிலை -47 °C, கொதி நிலை 83°C. இது, நீருடன் எல்லா விகிதத்திலும் கலக்கும். காற்றுப் படத் திறந்து வைத்தால், இந்த அமிலம் புகையும் தன்மையுடையது. இது தோலில் பட்டால், மஞ்சள் நிறத்தை உண்டாக்கும், தோலின் அடிப்படைப் பொருளான புரதத்துடன் இது, வேதி வினைப் படுவதே இதற்குக் காரணம். சூரிய ஒளியின் தாக்கத்தால் இது, நைட்ரஜன் பெராக்சைடு, நீர், ஆக்சிஜன் எனச் சிதைகிறது. எனவே, அடர் நைட்ரிக் அமிலம், பழுப்பு நிறச் சீசாக்களில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப் படுகிறது. வேதிப் பண்புகள். வினைப் படும் தன்மையைக் கொண்டு, நைட்ரிக் அமிலத்தின் பண்புகளை அமிலப் பண்புகள் என்றும், ஆன்ஜினேற்றப் பண்புகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். அ) அமிலப் பண்புகள். இது ஒரு வீரிய அமிலமாகும். நீர்க் கரைசலில் இது ஹைட்ரஜன் அயனி எனவும், நைட்ரேட் அயனி எனவும் பிரிகிறது. அரிப்புத் தன்மை, புளிப்புச் சுவை, நீல நிற லிட்மசைச் சிவப்பு நிறமாக்கல் போன்ற அமிலப் பொதுக் குணங்களை இது பெற்றிருக்கிறது. பிற அமிலங்களையுப் போலவே இதுவும், காரங்களுடனும், கார ஆச்சைடுகளுடனும் வினை புரிந்து உப்பையும், நீரையும் தருகிறது. நைட்ரிக் அமிலத்திலிருந்து கிடைக்கும் உப்புக்கள் நைட்ரேட்டுகள் எனப் படுகின்றன. ஏனைய அமிலங்களைப் போலவே, நைட்ரிக் அமிலமும், உலோகக் கார்பனேட்டுகளுடனும், பை-கார்பனேட்டுகளுடனும், வினையுற்றுக் கார்பன்டை ஆக்சைடை வெளிப் படுத்துகிறது. ஆ) ஆக்சிஜனேற்றப் பண்புகள். நைட்ரிக் அமிலத்தைச் சூடாக்கினால், அது நைட்ரஜன் பெராக்சைடு, நீர், ஆக்சிஜன் எனச் சிதைகிறது. 4HNO_3 \rightarrow 4NO_2 + 2H_2O + O_2 இந்த ஆக்சிஜன், ஆக்சிஜனேற்றத்திற்குப் பயன் படுகிறது. எனவே, நைட்ரிக் அமிலம் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாகச் செயல் படுகிறது எனக் கொள்ளலாம். நைட்ரிக் அமிலம் உலோகங்களுடன், பல வழிகளில் வினைகளில் ஈடுபட்டுப் பல்வேறு வளிமங்களைத் தருகிறது. நைட்ரிக் அமிலத்தின் அடர்த்தி, வெப்ப நிலை, வினையில் ஈடுபடும் உலோகத்தின் தன்மை முதலியவற்றைப் பொறுத்துப் பல்வேறு விளை பொருள்கள் உண்டாகின்றன. ஓர் உலோகத்தின் தன்மை, அது மின் வேதி வரிசையில் (electrochemical series) அமைந்துள்ள இடத்தைப் பொறுத்திருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. தாமிரம், காரீயம் (lead), வெள்ளீயம் போன்ற உலோகங்களுடன், நீர்த்த நைட்ரிக் அமிலம் வினையுற்று, நைட்ரிக் ஆக்சைடைத் (nitric oxide) தருகிறது. மக்னீசியம், மாங்கனீஸ் ஆகிய இரண்டு உலோகங்களுடன் நீர்த்த நைட்ரிக் அமிலம் வினை புரிந்து, ஹைட்ரஜன் வளிமத்தைத் தருகிறது. துத்தநாகம், இரும்பு, வெள்ளீயம் ஆகிய உலோகங்களுடன் வெப்ப நிலை, அமிலத்தின் அடர்த்தி ஆகியவற்றைச் சார்ந்து, நைட்ரிக் அமிலம் வினையுற்று, அம்மோனியா அல்லது அம்மோனியம் நைட்ரேட் அல்லது நைட்ரஸ் ஆக்சைடு வளிமம் போன்ற விளை பொருள்களைத் தருகிறது. தாமிரம், துத்தநாகம், மக்னீசியம், காரீயம் முதலிய உலோகங்களுடன், அடர் நைட்ரிக் அமிலம் வினை புரிந்து, செம்பழுப்பு நிற நைட்ரஜன் பெராக்சைடு வளிமத்தை உண்டாக்குகிறது. வெள்ளீயம் அடர் நைட்ரிக் அமிலத்துடன் வினையுறும் போது, ஆக்சிஜனேற்ற வினை நிகழ்ந்து, ஸ்டானிக் ஆக்சைடு கிடைக்கிறது. குரோமியம், இரும்பு, அலுமினியம், தங்கம், பிளாட்டினம் ஆகிய உலோகங்கள், அடர் நைட்ரிக் அமிலத்துடன் வினைப் படுவதில்லை. இந்த உலோகங்கள் இச்சூழலில் செயலற்ற நிலையை (passivity) அடைவதே இதற்குக் காரணமாகும். இரும்பும், அலுமினியமும் மட்டும் ஒரளவு நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் வினைப் பட்டு, உரிய விளை பொருள்களை உண்டாக்குகின்றன. அலோகங்களுடன், அடர் நைட்ரிக் அமிலம் வினைப் படும் போது, ஆக்சிஜனேற்றம் நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, அடர் நைட்ரிக் அமிலத்துடன் கந்தகத்தைச் (Suphur) சேர்த்துச் சூடாக்கினால், கந்தகம் ஆக்சிஜனேற்றத்திற்கு உட்படுத்தப் பட்டுச் சல்ஃப்யூரிக் அமிலம் கிடைக்கிறது; துணை விளைபொருளாக நைட்ரஜன் பெராக்சைடு உருவாகிறது. அடர் நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்துச் சூடாக்கப் பட்டால், பாஸ்ஃபரஸ் வினைப் பட்டு, ஆர்த்தோ–பாஸ்ஃபாரிக் அமிலமாக, ஆக்சிஜனேற்றம் அடைகிறது; கார்பனும் இதைப் போலவே, ஆக்சிஜனேற்றம் அடைந்து, கார்பன் டைஆக்சைடாக மாறுகிறது. கரிமச் சேர்மங்களையும், அடர் நைட்ரிக் அமிலம் மிகத் தீவிரமாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது. எடுத்துக் காட்டாக, சூடான அடர் நைட்ரிக் அமிலத்தில், மரத் தூள், பஞ்சு போன்ற கரிமப் பொருள்களைப் போட்டால், அவை தீப்பிடித்து எரிகின்றன. அடர் நைட்ரிக் அமிலமும், அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் 1:3 என்னும் விகிதத்தில் சேர்க்கப் பட்டு, இராஜத் திராவகம் என்னும் கலவை .தயாரிக்கப் படுகிறது. எந்த அமிலத்திலும் கரையாத தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் சற்றே சூடேற்றப் பட்ட இராஜத் திராவகத்தில் கரைகின்றன.பயன்கள். ஆய்வகங்களில் பயன் படுத்தப் படும் வினைப் பொருள்களுள் (reagent) நைட்ரிக் அமிலமும் ஒன்றாகும். தொழிற்துறையிலும், பல்வேறு பொருள்களைத் தயாரிக்கத் தேவையான வேதிப் பொருளாக இது விளங்குகிறது. அம்மோனியம் நைட்ரேட் போன்ற செயற்கை உரங்களைத் தயாரிக்க, நைட்ரிக் அமிலம் அடிப்படைப் பொருளாகிறது. நைட்ரோ–கிளிசரின், வெடி பஞ்சு (gun cotton), டைனமைட், டிரைநைட்ரோ டொலுவின் (TNT) முதலிய வெடி மருந்துகளைத் தயாரிக்க, நைட்ரிக் அமிலம் பயன் படுகிறது. பல வகையான நெகிழி, அரக்கு, திரைப் படச் சுருள், சாயம் முதலான பல பொருள்களைத் தயாரிக்க, நைட்ரிக் அமிலம் இனறு பெருமளவில் பயன் படுகிறது. பிற கரைப்பான்களில், கரையாத தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களைக் கரைக்கத் தக்க இராஜத் திராவகம் இந்த அமிலத்திலிருந்தே தயாரிக்கப் படுகிறது. தாமிர உலோகத்தாலான பாண்டங்களில் சித்திர வேலைப்பாடு செய்ய, நைட்ரிக் அமிலத்தைப் பயன் படுத்துவது தொழில் முறைப் பயன்பாடுகளில் ஒன்றாகும். குரோவ் மின்கலம், புன்சன் மின்கலம் ஆகியவற்றில் துருவத்துவம் நீக்கியாக (depolariser) நைட்ரிக் அமிலம் பயன் படுகிறது. —ர. விக்டோரியா துணை நூல். Liptrot, Modern Inorganic Chemistry, Fourth Edition, ELBS, London, 1983.