செந்தடிப்பு
centaṭippu
பெரும்பாலும் உடலின் இணைப்புத் திசுக்கள் பாதிக்கப் படும் இந்த நோயில், எந்த உறுப்பும் பாதிக்கப் படலாம்.
பெரும்பாலும் உடலின் இணைப்புத் திசுக்கள் பாதிக்கப் படும் இந்த நோயில், எந்த உறுப்பும் பாதிக்கப் படலாம். இந்நோய் ஏறி இறங்கும் தன்மையுடையது. செந்தடிப்பு (lupus erythyomatous) பெரும்பாலும் 20–45 வயதுப் பெண்களையே தாக்குகிறது. ஆண்களை விடப் பெண்களில் மிகுதியாகக் காணப்படும். இந்நோய்க் காரணம் புலனாகவில்லை. எனினும், நுண்ணுயிர்த் தாக்கம், அறுவை, காயம், உட்செல்லும் மருந்து போன்றவை இந்நோயை ஊக்குவிக்கலாம்.
பலர் இதைத் தன்தடுப்பாற்றல் நோய் (auto-immune disease) எனக் கருதுகின்றனர். இதில் தோன்றும் எதிர்ப் பொருள்கள், குருதியின் சிவப்பணு, வெள்ளணு, தட்டணு, குருதியை உறையச் செய்யும் பகுதி, சிறுநீரகம், இதயம், கல்லீரல் ஆகியவற்றுடன் எதிர் வினை புரிகின்றன.
இந்நோய் மெதுவாகவே தொடங்குகிறது. சூரிய ஒளி, புற ஊதாக் கதிர், நுண்ணுயிர்ப் பாதிப்பு, பேறு காலம், உணர்ச்சி நிலை ஆகியவற்றால், நோய் தீவிரம் அடைகிறது. இதனால், காய்ச்சல், இதயத் துடிப்பு, சோர்வு, எடை இழப்பு ஆகியவை தோன்றுகின்றன. தசை எலும்புகள் பாதிக்கப்படல், இதய உறை அழற்சி, சிறு நீரக அழற்சி, நுரையீரல் உறையில் நீர்மத் தேக்கம் ஆகியவை தோன்றலாம்.
80% நோயினரின் தோலில் ஏற்படும் பொரிப்பு குறிப்பிடத் தக்கது. சிவப்பான பொரிப்புகள் முகம், காது, தாடை, கழுத்து, மார்பின் மேற்பகுதி, தோள் பட்டை, முன் கை, பாதம் ஆகியவற்றில் தோன்றுகின்றன. முகத்தில் தோன்றும் தோல் நைவுகள், வண்ணத்துப் பூச்சி போன்ற தோற்றமுடன் இரண்டு பகுதிகளிலும் காணப்படும். இதன் ஓர விளிம்புகள் சிவந்தும், தடித்தும், நடுப் பகுதி வெளிறியும் காணப் படும். செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டால், பசியின்மை, குமட்டல், வாந்தி, வலி ஆகியவை தோன்றும். கல்லீரலும், மண்ணீரலும் வீங்கிக் காணப்படும். நடு நரம்பு மண்டலம் பாதிக்கப் படும் போது, பக்க வாதம், வலிப்பு, கபால நரம்புச் செயலிழப்பு ஆகியவை தோன்றலாம். உடலின் பல இடங்களில் நிணக் கணுக்கள் வீங்கிச் சிவந்து காணப் படுகின்றன.
செந்தடிப்புச் செல் ஆய்வு (L. E. cell test) நோய் அறுதியிடலில் உதவுகிறது. நோய் நுண்ணுயிரிகளைக் குருதியிலோ, எலும்பு மஜ்ஜையிலோ காணலாம். நியூட்ரோஃபிலின், சைடோபிளாசத்தில் தளமேற்பிப் (busophil) பொருள் ஆகியவற்றைக் காணலாம். செல்லின் நியூக்ளியஸ் ஓரமாகத் தள்ளப் படுகிறது. 80% நோயினரில் இந்தச் செல்லைக் காணலாம். வெள்ளணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. தேவையிருந்தால், பாதிக்கப்பட்ட உறுப்புகளின் பிணிக் கூற்றாய்வு செய்து, நோயை உறுதி செய்யலாம். பாதிக்கப்பட்ட உறுப்புகளின் நிலையைப் பொறுத்து நோயின் முன் கணிப்பு அமைகிறது.
மருத்துவம். அறிகுறிகளைப் பொறுத்தே, மருத்துவம் அமைகிறது. ஓய்வு, ஊட்டப் பொருள், வைட்டமின் ஆகியன பயன் தரும். குளோரோகுயின் 250 மி.கி. அலகு அல்லது காமாக்குயின் 200 மி.கி. அலகில் நாளும் 3 வேளை கொடுத்தால், பயன் கிடைக்கிறது. கார்டிகோஸ்டீராய்டுகள், ஐசோ தயோப்பிரின், சைக்ளோ பாஸ்ஃபமைடு போன்ற பல மருந்துகளும் கொடுக்கப் படுகின்றன.
—மு. கி.பழநியப்பன் நூலோதி. P. S. Shankar, A. P. I. Text Book of Medicine, Third Edition, API Publishers, Bombay, 1979
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 746)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x3jrvafn/
தமிழ்“செந்தடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x3jrvafn/APA
Oliyon Research. (2026). செந்தடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x3jrvafn/MLA
"செந்தடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x3jrvafn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment