அடேனார் கொன்ராடு
aṭēṉār koṉrāṭu
அடேனார் கொன்ராடு என்பவர் செருமானிய அரசியல் வல்லுநர்.
அடேனார் கொன்ராடு என்பவர் செருமானிய அரசியல் வல்லுநர். இரண்டாம் உலகப் பெரும் போரினால் சீரழிந்த மேற்குச் செருமனியைப் பொருளாதார வளமிக்க நாடாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் கி.பி. 1876-இல் கோலோன் நகரில் பிறந்தார். இவர் தந்தையார் கொன்ராடு ஒரு சட்டத்துறை எழுத்தர். அடேனார் குடும்பத்தினர் உரோமானியக் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர்கள்; ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவர்கள்.
அடேனார் கொன்ராடு (Adenauer Konrad) சட்டத்தையும் பொருளாதாரக் கலையையும் கற்றுக் கோலோன் நகரின் மாவட்ட நீதிமன்றத்தில் துணை
அடேனார் கொன்ராடு
நீதிபதியானார். 1906-ஆம் ஆண்டில் கோலோன் நகரின் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். பின்னர் 1917 முதல் 1933 வரை மேயராகப் பதவி வகித்தார். நகரவை அரசியலில் செயல்பட்டு வெற்றி கண்ட அடேனார் செருமானிய தேசிய அரசியலிலும் பங்கேற்றுக் கத்தோலிக்க மையக் கட்சியின் உறுப்பினரானார். 1917 முதல் 1933 வரை இரைன்லாந்து மாநிலச் சட்டமன்றத்தில் பணியாற்றினார். மேலும், பிரசிய (Prussia) அரசுக் குழுவில் மையக் கட்சியின் சார்பாளராகவும் செயலாற்றினார். பின்னர், அக்குழுவின் தலைவராகவும் மையக் கட்சியின் நிருவாகக் குழுவின் உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். 1926–இல் அடேனார் ‘இலான்சிலிகல்’ (சமயப்பிரசாரக்குழு) கட்சியினரையும், கத்தோலிக்கக் கிறித்தவர்களையும் அரசியலில் இணைக்க வேண்டுமென வெளிப்படையாகப் பறைசாற்றினார்.
1933-ஆம் ஆண்டில், இட்லரின் ஆட்சியைச் சார்ந்தவர்கள், அடேனாரைச் செருமானிய மக்களுக்கெதிராசுக் குற்றங்கள் செய்தவர் என்று குறைகூறி அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலக்கி விட்டார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் இவர் அரசியலிலிருந்து விலகி இருந்தார். அரசியல் நோக்குடன் 1944-ஆம் ஆண்டின் இறுதியில், நாசிகள் இவரை அரசினருக்கு எதிர்ப்பானவர்களை ஒதுக்கிவைக்கும் குடியேற்ற முகாம்களில் தள்ளி ஒறுத்தனர்.
இரண்டாம் உலகப் போரில் செருமனி தோல்வியுற்றபோது, அமெரிக்கர் 1945–ஆம் ஆண்டில் அடேனாரைக் கோலோன் நகரின் மேயராக்கினர். சில மாதங்களுக்குப் பின்னர், ஆங்கிலேயர் அடேனாரைப் பதவியிலிருந்து நீக்கினர். அப்போது கோலோன் நகர் ஆங்கிலேய ஆட்சிப்பகுதியாயிற்று.
கிறித்தவ சனநாயக ஒன்றியம் என்னும் அரசியல் கட்சியை நிறுவியவர்களுள் அடேனாரும் ஒருவர். போரில் அழிவுற்ற செருமனியைச் சீராக்கப்பாடுபடுவதே அக்கட்சியின் நோக்கமாக இருந்தது. கிறித்தவ சமய உணர்வைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துடையது அக்கட்சி. அடேனாரின் நன்முயற்சியால் கிறித்தவர்களுக்கிடையே நல்லிணக்கம் தோன்றியதெனலாம்.
தம் எழுபதாம் வயதில் அடேனாரின் பெரும் அரசியல் வாழ்வு தொடங்கியது, விரைவில் இவர் கட்சித்தலைவரானார், சமதரும சனநாயகவாதிகளுடன் மூண்ட அதிகாரப் போராட்டத்தில் கிறித்தவ சனநாயக ஒன்றியம் வெற்றி பெற்றது. இவ்வெற்றியால் அடேனார் செல்வாக்கு மிக்கவரானார். மேற்குச் செருமனியில் இருந்த மூன்று பகுதிகள் அமெரிக்க ஆங்கில, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தவை. இம்மூன்று பகுதிகளையும் இணைத்துப் புதிய மேற்குச் செருமனி உருவானபோது அடேனார் அதன் தனிப் பெரும் தலைவராக மதிக்கப்பெற்றார். 1948–இல் பாராளுமன்றக் குழுவின் தலைவராக ஆனவுடன் செருமானியக் கூட்டாட்சிக் குடியரசுக்கான புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை வரையும் பணியில் ஈடுபட்டார். 1949–இல் முதல் செருமானியக் கூட்டாட்சி நாடாளுமன்றத்தால் இவர் தலைமை அமைச்சராகத் (Chancellor) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953, 1957, 1961 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 1963 அக்டோபர்த் திங்கள் அடேனார் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.
இவரது தலைமையில் மேற்கு செருமனி 1955–இல் முழு விடுதலை பெற்றது. அந்நாடு வியத்தகு முறையில் பொருளாதார முன்னேற்றம் பெற்றதற்கும் இவரே பொறுப்பானார். இவரது முயற்சியால் மேற்குச் செருமனி, வட அட்லாண்டிக்கு உடன்படிக்கைப் பேரமைப்பிலும் (NATO), ஐரோப்பியப் பொருளாதாரக் குழுவிலும் (EEC) உறுப்பு நாடாகியது.
அடேனார், பிரான்சு நாட்டுடன் இணக்கத்தைப் பெரிதும் விரும்பி, 1963ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் பொருந்தும் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டார். அவரை அடுத்துத் தலைமையமைச்சராக வந்த இலட்வின் எர்கர்டு மேற்கூறிய உடன்படிக்கையைத் திருத்த முயன்றதை அடேனார் குறை கூறினார்.
அடேனார் இரு முறை திருமணம் செய்து கொண்டவர்; ஏழு குழந்தைகளுக்குத் தந்தை. இவர் 1967–இல் மறைந்தார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 266)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x39gms4j/
தமிழ்“அடேனார் கொன்ராடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x39gms4j/APA
Oliyon Research. (2026). அடேனார் கொன்ராடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x39gms4j/MLA
"அடேனார் கொன்ராடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x39gms4j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment