என்பார் அறிவுலகப் பேரறிஞர்களுள் தலைசிறந்த வானவியல் வல்லுநர்; வரலாற்று அறிஞர்; தாவரவியலார்; மருந்தியலார்; புவியமைப்பியலார்; கவிஞர்; தத்துவஞானி; கணிதமேதை; மனிதநலக் கோட்பாட்டாளர். தமது கால அறிவுத் துறையில் மட்டுமன்றி, அதுவரை தெரியாத பல துறைகளிலும் தேர்ச்சியுற்ற பேரறிஞர் உலக வரலாற்றில் அரிதாகவே தோன்றுகின்றனர். அபு–அல்–ரைகன் முகம்மது இபினி அகமது அல்–பிரூனி (Al–Biruni) குவாரிசத்தின், தலைநகரான ‘காத்’ என்னும் நகருக்கு அருகில், கி.பி. 973–ஆம் ஆண்டு செப்டம்பர் 4–ஆம் நாள் பிறந்தார். “உண்மையில் என்னுடைய குடிவழியைப் பற்றித் திட்ட வட்டமாக ஒன்றும் அறியேன். ஏனெனில் என்னுடைய பாட்டனார், என் தகப்பனார் யாரென்றும் எனக்கு உறுதியாகத் தெரியாது” என்று தம்முடைய கவிதை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கிரேக்கக் கல்வியாளர் ஒருவர், இவருக்கு முதல் ஆசிரியராக வாய்த்தார். ஆசிரியர் வேண்டுகோளுக்கிணங்கி இளமைத் துடிப்புமிக்க அல்–புரூனி செடிகள், விதைகள், பழங்கள் ஆகியவற்றைச் சேகரித்தார். இப்பணி இயற்கை அறிவியலில் இவருக்கிருந்த ஆர்வத்தை மேலும் பெருகச் செய்தது. அபு-நசர் மான்சூர் என்பவர் அல்பிரூனியின் வளர்ப்புத் தந்தையாவார். அவர் கணிதநூல் வல்லுநர்; வான நூலறிஞர், அவர் யூக்ளிட்டின் (Euclid) வடிவியலையும் (Geometry), தாலமியின் வானநூலையும் அல்–பிரூனிக்குக் கற்பித்தார். விண்மீன்கள் கனிப்பொருள்கள் ஆகியவற்றைப் பற்றியும் கற்றார். வானம், நிலவுலகம் இரண்டின் மறைபொருளைக் கண்டறியத் துருவித் துருவி அவற்றை ஆராய்ந்தார். வரலாற்றின் பொருளாழத்தைக் கண்டறிய எண்ணற்ற நூல்களைக் கற்றார். உலகத்தின் வடிவம் உருண்டையானது என்ற கருத்தினைத் தந்தார். மத்திய ஆசியாவில் இந்தப் பணியை முதன்முதல் செய்தவர் அல்-பிரூனியே யாவர். இவர் சிறப்புமிக்க கவிஞராகவும் விளங்கினார். தம் காலத்தின் எண்ணப்போக்கிற்கு அல்-பிரூனி கட்டுப்படாதவர். மிகவும் முற்போக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார் இவரது காலத்திய அறிஞர்களுள் பெரும்பாலோருக்கு இவருடைய புதுமை வாய்ந்த கண்டுபிடிப்புகள் புரித்து கொள்ள முடியாதவையாய் இருந்தன. உலகத்தின் சுற்றளவை அளப்பதற்குப் புதியதோர் எளிய வாய்பாட்டை முதன் முதல் இவர் வகுத்தார். சூரியனைச் சுற்றி உலகம் சுழலுவது இயற்கையில் நிகழக் கூடியது என்று கருதினார். புவியியல் ஊழிகள் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து தோன்றும் சுழல் வட்டமாகும் என்ற கருத்தினை விளக்கியுரைத்தார். ‘காலம் செல்லச் செல்லக் கடல் வறண்ட நிலமாகவும் வறண்ட நிலம் கடலாகவும் மாற்றமுறும்’ என்று இவர் எழுதியுள்ளார். அல்-பிரூனி தம் காலத்தில் பல அரசுகளின் போர்களைக் கண்டார். அதனால் நிலையான வாழ்வற்று வாழ்ந்தார். இந்திய அறிஞர்களின் தொடர்பும் கிட்டிற்று. இவர் வடமொழியிலும் இந்திய நாகரிகத்திலும் அக்கறை காட்டினார். இன்றைய இந்திய நாட்டின் பகுதியாக இருந்த ஒரு பேரரசில் இவர் வாழ நேர்ந்ததே அதற்குக் காரணம். அப்போது இந்தியாவின் பஞ்சாபு, காசுமீரம் ஆகிய பகுதிகளில் பயணம் செய்தார். தம்முடைய வானநூல் பற்றிய ஆய்வு நூலை வடமொழியில் மொழிபெயர்த்தார். பஞ்சதந்திரக் கதைகளை இவரே அராபிய மொழியில் மொழிபெயர்த்தார். இந்தியாவில் நிலவிய சாதி முறை, மெய்ப்பொருள், அறிவியற்கலை, சமயம், சட்டம், பழக்கவழக்கம், மூடநம்பிக்கை, புராணம், நிறுத்தல், முகத்தல், நீட்டல் அளவை முறைகள், எழுத்து, மொழிவடிவம், நிலலியல் போன்ற பலதிறப்பட்ட செய்திகளைத் தாமே நேரில் அறிந்தும் இந்தியப் பேரறிஞர்களுடன் உரையாடியும் அறிந்தவற்றை ‘இந்தியா’ என்ற கலைக் களஞ்சிய நூலில் குறித்துள்ளார். தம் ஐம்பதாம் வயதுக்குமேல் அல்-பிரூனி கடுமையான நோய்களுக்குட்பட்டார். எனினும் ஆய்வறிவு மங்கவில்லை. மசூதின் மகன் மான்தூத்தின் ஆட்சிக் காலத்தில் (1040–1048) ‘இரத்தினங்கள்’ என்ற நூலை எழுதினார். 80 வயது வரையிலும் இவர் அறிவுத்திறன் ஆராய்ச்சிகளிலேயே திளைத்தார். ‘மருத்துவப் பொறியியல்’ இவர் எழுதிய இறுதி நூல். அல்-பிரூனி பாரசீகர். இளமையில் ‘குவாரிச மொழியே’ பேசினார். பின்னர்ப் பாரசீகம் இவர் பேசும் மொழியாயிற்று. எனினும் எழுத்திலக்கியங்களில் எல்லாம் அராபிய மொழியைப் பயன்படுத்தினார். இவர் எழுதிய ‘அல்–பிரூனியின் இந்தியா’, ‘புக் ஆன் பார்மசி அண்டு மெட்டிரியா மெடிகா’, ‘கிரனாலஜி ஆப் ஏன்சியன்டு நேஷன்சு’, ‘தி டிட்டர்மினேஷன் ஆப் தி கோஆர்டினேட்ஸ் ஆப் சிட்டீஸ்’, ‘வினாக்களும், விடைகளும்’, ‘வானியல் சூத்திரம்’, ‘கேனன் ஆப் மெடிசின்’ ஆகிய நூல்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே பயன்மிகு அறிவியல் பண்பாட்டுப் பரிமாற்றத்தை அளித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் உறவுப் பாலமாக இருக்கின்றன. இவர் கீழைநாடுகளின் புலமைத் திறத்துக்கு ஒரு பெருஞ் சின்னமாக விளங்கினார் என்று கூறுவது மிகையாகாது.