விசயநகரப் பேரரசர் சிரீ கிருட்டிண தேவராயர் ஆட்சி புரிந்த காலத்தில் பெருமிதத்துடன் வாழ்ந்த புலவர் அரிதாசர். இவர் களப்பாளர் மரபிற் பிறந்தவர். இப்பெருமகனாரைப் பற்றிய பாடல் ஒன்றில் ‘அரிதாதன் என்று ஓதும் நாமக் களப்பாளன் தானைத் தளங்கள் கரை கண்ட நாளில்’ என்னும் தொடர் காணப்படுகிறது. இதனால், இவர் விசய நகரப் பேரரசில் சேனைத் தலைவராக இருந்ததை அறியலாம். அரிதாசர் சிறந்த வைணவர். திருமாலே பரம் பொருள் என்று நம்பி வழிபட்டவர். இவர் தம் கொள்கைக்கு எதிராக இருந்த சைவ சமயத்தை மறுப்பதைத் தம் கடமையாகக் கருதினார். இதற்காகச் சைவ புராணங்களையும் சைவ ஆகமங்களையும் நன்கு பயின்றார். அரிதாசர் சைவ சமயத்தைப் பற்றிப் பேச ஆகமவல்லியையும், வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஆரணவல்லியையும் படைத்துக் கொண்டார். ஆரணவல்லியும் ஆகமவல்லியும் ஆரணி நதியில் நீராடிய பின், தங்கள் தங்கள் தெய்வங்களைத் துதிக்கின்றனர். ஆரணவல்லியின் துதிப்பாடல்களைக் கேட்ட ஆகமவல்லி நீ திருமாலைப் பரம் பொருள் என்றாய் அது புனைந்துரை என்கிறாள். ஆரணவல்லி நின் மொழி பொருந்தாது என்று மறுக்கிறாள். இவர்கள் சொற்போர் செய்யும்போது அங்கு அந்தணர் பலர் வருகின்றனர். அவர்களை நடுவர்களாக வைத்துக் கொண்டு, இருவரும் தங்கள் தங்கள் கொள்கைகளை விவரிக்கின்றனர். ஆகமவல்லி சிவபிரான் மூலத் தெய்வம்; திருமால் பரிவார தேவதை என்று கூறுகிறாள். இதை மறுக்கும் ஆரணவல்லி 32 சிற்பசாத்திரங்களும் ஊர் நடுவில் திருமாலைப் பிரதிட்டை செய்து, மற்றைய தேவதைகளைத் திசைக் கடவுளர்களாக ஊருக்குப் புறத்தில் அமைக்க வேண்டும் என்று கூறியதை விளக்குகிறாள். இங்கு 32 சிற்ப நூல்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. பிராமியம் என்னும் சிற்ப நூலின்கண் இரண்டாம் அத்தியாயமும் மூன்றாம் அத்தியாயமும் திருமாலுக்குச் சிவபெருமான் பிரமன் முதலான தேவர்கள் பரிவார தேவதைகளாகக் கூறுகின்றன என்று விளக்குகிறாள். உலகத்தை எவன் தன்பால் ஒடுக்குகின்றானோ அவனே பரம்பொருள்; சிவபிரானே சர்வ சங்காரக் கடவுள். ஆகையால் சிவபிரானே முதற்பெருந் தெய்வம் என்பது ஆகமவல்லியின் சித்தாந்தம். ஆரணவல்லி, திருமால் பிரமதேவனையும் சிவபிரானையும் தன்பால் ஒடுக்கிக் கொள்கிறான் என்று மகோபநிடதம் விளக்குகிறது என்று கூறுகிறாள். சைவ நூல்களில் பெருகப் பேசப்படுவன சிவபிரானின் அடியும் முடியும் ஆகும். திருமாலும், பிரமனும் பன்றியாகியும் அன்னமாகியும் தேடிக் காணாமல் தோற்றுப் போன செய்தியைப் பற்றிப் பேசாத சைவ நூல்கள் இல்லை. இதனை ஆகமவல்லி வலியுறுத்திப் பேசிச் சிவபிரானே பரம் பொருள் என்று கூறுகிறாள். இதனை மறுக்கும் ஆரணவல்லி, திருமால் உலகை அளந்த காலத்தில், சிவபிரானும் எல்லாவுலகங்களும் அவன் அடியின் கீழ் அடங்கியதைக் குறிப்பிடுகிறாள். மேலும், திருமால் பன்றியாக அவதரித்தது உலகங்களைத் தாங்குவதற்காகத்தான் என்று, எகர் வேதத்தில் முதற் பிரிவில் உள்ள மூன்றாம் அனுவாகத்தில் கூறியுள்ளது என்று தெரிவிக்கிறாள். சிவபிரான் நஞ்சு உண்டு அமரரைப் பாதுகாத்தான். ஆதலால் அவனே பரம்பொருள் என்று ஆகமவல்லி கூறுகிறாள். இதுகேட்ட ஆரணவல்லி, இருக்கு வேதத்தில் எட்டாம் அத்தியாயத்தில் இருபத்து மூன்றாம் வர்க்கத்தில், சிவபிரான் என்னும் பாத்திரத்தைக் கொண்டு திருமாலே நஞ்சு உண்டான் என்று கூறியுள்ளதையும், கருடபுராணத்தில், சிவபிரான் நஞ்சை உண்ணும்போது கருடனைத் தியானித்ததாகக் கூறியுள்ளதையும் கூறி ஆகமவல்லியை மறுக்கிறாள். பிறகு முனிவரின் சாபத்தால், திருமால் பத்துப் பிறவி எடுத்ததை ஆகமவல்லி வற்புறுத்திப் பேசுகிறாள். ஆரணவல்லி திருமாலின் அவதாரங்கள் அருள் வயப்பட்டனவேயன்றி வினைவயப்பட்டன அல்ல என்று விளக்குகிறாள். காயத்திரி என்னும் மந்திரம் சிவபிரானையே குறிக்கிறது என்று ஆகமவல்லி பேசுகிறாள். ஆரணவல்லி, கௌசிக சங்கிதை காயத்திரியில் கூறப்படும் இறைவன் திருமாலே என்று கூறியதை நினைவூட்டுகிறாள். சைவசமயம் பஞ்ச சுத்திகளைச் சிறப்பாகப் பேசும். இச்சுத்திகளை இருசமய விளக்கம் காரணாகம வழி நின்று விளக்குகிறது. அவை, ஆன்மசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, இலிங்கசுத்தி, மந்திர சுத்தி ஆகும். பஞ்ச சுத்திகளைப் பேசும் பகுதி அரிதாசரின் சைவ ஆகமப் புலமையை நன்றாகத் தெளிவுபடுத்துகிறது. அரிதாசர் பஞ்ச சுத்தியை மறுத்துப் பேசாது விட்டு விடுகிறார். இதனால், அரிதாசர் நல்லனவற்றை ஏற்றுக்கொள்பவர் என்பது தெரிகிறது. உயிர்க்கொலையை மறுத்த சமண புத்தமதங்களின் சிறந்த இயல்பைப் போற்றிய பண்பை வேறு ஒரு படலத்தில் காணலாம். அரிதாசர், சிற்ப நூல்கள், வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ஆகமங்கள் முதலியவற்றின் பெயர்களையும், அவற்றின் பகுப்புகளையும் குறிக்கும் திறம் பாராட்டாமல் இருக்க முடியாது. இரு சமய விளக்கத்தில் அற்புதமான உத்திகள் காணப்படுகின்றன. அவை ஆசிரியரின் திறமையைப் புலப்படுத்துகின்றன. ஆகமவல்லி, சிவன் திருமாலை வணங்கிப் பதவிபெற்றனன் என்றாள். அதை மறுக்கும் ஆரணவல்லி, சூரியன் மின்மினிப்பூச்சியைத் தியானித்து ஒளியைப் பெற்றது போல் உள்ளது என்று கூறுகிறாள். ஆரணவல்லி, ஆகமவல்லியின் கருத்தை ஆராய்ந்து பூ நார் இரண்டும் இல்லாமல் மாலை தொடுக்கவல்லாய் என்று நகைச்சுவையுடன் குறிக்கிறாள். காவியம் பாடும்போது கவிதைகள் நயமாக அமையும். தத்துவம் பேசும்போது கவிதையின் சுவை குறையும். ஆனால், தத்துவத்தையும் சமய மறுப்பையும் கூறும் இந்நூல் கவிதை நயம் நிரம்பியுள்ளது. 2119 பாடல்களால் அமைந்த இந்நூல், படிப்பவர்க்குச் சலிப்புத் தராமல் இருக்கப் பலவிதமான சந்தப்பாடல்களைக் கொண்டுள்ளது. சமயவாதம் கருத்து முதல்வாதம் ஆகும். ஆதலால் சமய வாதத்தில் விருப்பும் வெறுப்பும் முதலிடம் பெறும். ஆதலால் சமயவாதத்தை அடிப்படையாகக் கொண்டு பிணங்குவது முறையன்று. எஸ்.கே.இரா.