சூறை மீன்
cūṟai mīṉ
கடல்களின் வெப்ப, மித வெப்பப் பகுதிகளில் பெரும்பாலான சூறை (tuna) இனங்கள் பரந்து காணப் படு-
கடல்களின் வெப்ப, மித வெப்பப் பகுதிகளில் பெரும்பாலான சூறை (tuna) இனங்கள் பரந்து காணப் படு-
கின்றன. எனினும், இந்தியக் கடல்களில் 11 சூறை இனங்களே காணப்படுகின்றன. அனைத்துச் சூறை இனங்களும், பெர்சிபாம்ஸ் வகைப்பாட்டில் அடங்கும். சூறை மீன்கள் பொதுவாகக் குருதி நிறமுள்ள தசையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இவை பருத்த உடலையும், இரு மேல் துடுப்புகளையும் பெற்றுள்ளன. இரண்டாம் மேல் துடுப்பை அடுத்தும், குதத் துடுப்பை (anal fin) அடுத்தும், 6–9 இளந்துடுப்புகள் (Finlets) காணப்படும். வால் துடுப்பின் அடிப் பகுதி, மிகவும் குட்டையாக ஒடுங்கி இருக்கும். மார்புப் பகுதியில் மட்டுமே செதில்கள் பரந்து காணப் படுகின்றன.
குத்தெலிச் சூறை (Auxis thazard). இதன் உடல் பருத்துப் பக்கவாட்டில் சிறிது தட்டையாக இருக்கும். வாய் கோணலாகவும், இரு தாடைகளில் உள்ள பற்கள் சிறியனவாகவும், ஒரே வரிசையில் அமைந்துள்ளன. செதில்கள் மார்புப் பகுதியில் பரவியும், பின் பகுதியில் குறுகியும், பக்கவாட்டுக் கோட்டுடன் ஓட்டியவாறும் அமைந்துள்ளன. முதல் மேல் துடுப்பு இரண்டாவதை விடப் பெரியதாகவும், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட தொலைவு தலையின் நீளத்தை விடக் குறைவாகவும் இருக்கும். வால் துடுப்பு அகலமாக, இரண்டாக விரிந்து காணப்படும். தலை கருமையாகவும், முதுகு நீல நிறமாகவும் உள்ளன. பக்கவாட்டில், மார்புத் துடுப்புக்குப் (pectoral fin) பின்னர், கோணலான கறுப்புப் பட்டைகளும், கீழ்ப் பகுதி வெளிறிய மஞ்சள் கலந்த பழுப்பு நிறமும் கொண்டுள்ளன. மீனினங்களையும், தலைக் கால் மெல்லுடலிகளையும் (cephalopods) உண்ணும் இவை, ஏறத் தாழ, 500 மி.மீ. நீளம் வளரக் கூடியவை.
எலிச் சூறை (A. thunnoides). இதன் மார்புச் செதில்கள், குத்தெலிச் சூறை போலில்லாமல், பின் பகுதியில் தொடர்ந்து, பக்கக் கோட்டுப்பகுதிகளில் அகன்று காணப்படும். குறுக்கு வெட்டுத் தோற்றத்தில், உடல் சிறிது தட்டையாகக் காணப்படும். எனினும், நிறம் குத்தெலிச் சூறையை ஒத்தே உள்ளது. 200–600 மி.மீ. நீளமுடைய இது மீன், தலைக் கால் மெல்லுடலிகள், புழுக்கள் போன்றவற்றை உண்ணும்.
சார்டா ஓரியண்டாலிஸ் (Sarda orientalis). இது குறுகிய நீளமான உடலைக் கொண்டுள்ளது. மார்புச் செதில் பகுதியும், செதில்களும் சிறியவை. இரு தாடைகளிலும் உள்ள பற்கள் உள் வளைந்து காணப்படும். உடலின் மேல் பகுதி நீல நிறத்தையும், நீளமான எட்டுப் பட்டையான கோடுகளையும் கொண்டிருக்கும். கீழ்ப் பகுதி வெள்ளி நிறமாகவும், மேற்பகுதியில் 7–8 இளந் துடுப்புகளும், அடிப் பகுதியில் 5–7 இளந் துடுப்புகளும் உள்ளன. பெரும்பாலும், மீன்களையே இவ்வினச் சூறை உண்கிறது.
நாய்ப் பல் சூறை (Gymnosarda unicolor). உடல் பருத்தும், நீண்டும், மூக்குப் பகுதி கூர்மையாகவும், தலை நீண்டும் காணப்படும். கீழ்த் தாடை பெருத்தும், இரு தாடைகளில் கூம்பு போன்ற பற்களும் உள்ளன. மார்புச் செதில் பகுதி குறுகி உள்ளது. பக்கவாட்டுக் கோடு மார்புத் துடுப்புப் பகுதியில் மேல் வளைந்தும், பின் தொடரும் போது, வளைந்து, வளைந்தும் செல்கிறது. முதல் மேல் துடுப்பிற்கும், இரண்டாம் துடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதி மிகக் குறுகிய இடைவெளியைக் கொண்டுள்ளது. இரண்டாம் மேல் துடுப்பும், குதத் துடுப்பும் உட்புறம் குவிந்திருக்கும். தலையும், முதுகும் கருநீல நிறத்தையும், அடிப் பகுதி வெள்ளி நிறத்தையும், முதல் மேல் துடுப்பு கறுப்பு நிறம் கலந்த பச்சை நிறத்தையும், ஏனைய துடுப்புகளும், இளந் துடுப்புகளும் நீல நிறத்தையும் பெற்றுள்ளன. இது மீன்களையும், தலைக்கால் மெல்லுடலிகளையும் பெரிதும் உண்ணும்.
கட்ஸ்வோனஸ் பெலாமிஸ் (Katsuwonus pelamis). இவ்வினச் சூறை வணிகச் சிறப்புடையது. இந்தியப் பெருங்கடல், ஆஃப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரை, மடகாஸ்கர், மொரிஷியஸ், சோமாலிக் கடற்கரை, ஏடன் வளைகுடா, இலட்சத் தீவுகள், அந்தமான், இந்தோனேசியா, மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா போன்ற கடல்களில் இவ்வினம் மிகுதியாகக் காணப்படுகிறது. உடல் பருத்தும், தலைப் பக்கத்தில் ஒடுங்கியும் காணப்படும். மூக்குப் பகுதி நீளமாகவும், கூர்மையாகவும் வால் சிறிது கோணலாகவும் இருக்கும். இரண்டு தாடைகளிலும், வரிசையான பற்கள் காணப்படுகின்றன. முதல் மேல் துடுப்பின் முன் முள்கள் நீளமாகவும், பின் முள்கள் குட்டையாகவும் உள்ளன. இரண்டாம் மேல் துடுப்பின் பின் பகுதி உட்குவிந்துள்ளது. மேற்பகுதியிலும், அடிப் பகுதியிலும் 7–8 இளந் துடுப்புகள் காணப்படுகின்றன. முதுகுப் பகுதி நீல நிறத்தையும், வயிற்றுப் பகுதி, மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தையும் கொண்டிருக்கும். உடலின் பக்கவாட்டுக் கோட்டிற்குக் கீழே, 4–6 நீள வாக்கிலான கறுப்புப் பட்டைகள் உள்ளன.
இவ்வினச் குறையில் காற்றுப் பைகள் இல்லை. கணுக்காலிகள், கணவாய், நெத்திலி மீன் குஞ்சுகளை உண்ணும். ஆண், பெண் மீன்கள் தனித் தனியே காணப்படினும், இரு பால் ஒருங்கிணைந்த (hermophrodite) மீன்களும், இவ்வினத்தில் அவ்வப்போது காணப்படும். நன்கு வளர்ச்சியடைந்த மீன் 20 லட்சம் முட்டைகள் இடும் திறனைப் பெற்றுள்ளது. ஆண் மீனின் பெரும வளர்ச்சி 800 மி.மீ. ஆகவும், பெண் மீனின் வளர்ச்சி 775 மி.மீ. ஆகவும் உள்ளது,
சதைப் பகுதியைப் பதனிடாமல் சமைத்தும், சிறிது கெட்டுப் போயிருந்தால், உப்பு நீரில் பதப் படுத்த வெயிலில் உலர்த்திக் கருவாடாக்கியும் உண்ணலாம். இவ்வின மீன்களிலிருந்து மாசி என்னும் கருவாடு செய்து விற்கின்றனர். பருமனாக வெட்டிய மீன் துண்டுகளைப் பனை ஓலைகளில் பதித்து உப்பு நீரில் சிறிது நேரம் அவித்து, இத்துண்டுகள் கட்டியாகும் வரை புகையில் பலமுறை பதப்படுத்துவதன் மூலம் மாசி பெறப் படுகிறது.
ஈதுன்னஸ் அப்னிஸ் அப்னிஸ் (Euthunnus affinis affinis). இவ்வினத்தில் உடல் பருத்தும், குறுகியும் உள்ளது. இரு தாடைகளிலும், மிகச் சிறிய கூம்பு போன்ற பற்கள் உள்ளன. இரு மேல் துடுப்புகளுக்கும் இடையேயான இடைவெளி மிக, மிகக் குறைவு. நன்கு வளர்ச்சியடைந்த இளந் துடுப்புகள் மேற்பகுதியில் 8–9 உம், அடிப் பகுதியில் 6–7 உம் உள்ளன. வாய் கோணலாக உள்ளது. தலையும், முதுகும், நீலம் கலந்த கறுப்பு நிறத்தையும், அடிப் பகுதி வெள்ளி நிறத்தையும் கொண்டிருக்கும். உடலின் பக்கவாட்டுக் கோட்டிற்கு மேலாக வளைந்து செல்லும் கருமையான கோடுகள் காணப்படுகின்றன. மார்புத் துடுப்புக்குக் கீழே எட்டுச் சிறிய கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. மீன்கள், தலைக்கால் மெல்லுடலிகள், இறால் போன்றவற்றை இச்சூறை பெரிதும் உண்ணும்.
துன்னஸ் (துன்னஸ்) ஓரியன்டாலிஸ் (Thunnus thunnus orientalis). துன்னஸ் பேரினத்தைச் சார்ந்த சூறை பெரும்பாலும், ஆழ்கடல் பகுதிகளிலேயே காணப்படும். இச்சூறையின் இரு தாடைகளிலும் ஒரே வரிசையில் அமைந்த சிறிய கூம்பு போன்ற கூரிய பற்கள் உள்ளன. மார்புப் பகுதியில் செதில்கள் பெரியவாகவும், ஏனையவை மிகச் சிறியவாகவும் உள்ளன. மேலும், இது மீன், இறால் போன்றவற்றையே பெரிதும் உண்ணும், இவ்வினச் குறை பக்க வாட்டில் தட்டையான ஆனால், பருத்த உடலைக் கொண்டுள்ளது. மார்புத் துடுப்பு குட்டையாக இருக்கும். முதுகு நீலங் கலந்த கறுப்பாகவும், வயிற்றுப் பகுதி வெள்ளி நிறமாகவும் இருக்கும். இரண்டாம் மேல் துடுப்பு கறுப்பாகவும், இளந் துடுப்புகள் மஞ்சளாகவும் உள்ளன. இவ்வினத்தில் காற்றுப் பை இல்லை. பெரும அளவான 300 செ.மீ. நீளத்தையும், 260 கி.கி. எடையையும் இச்சூறை கொண்டுள்ளது.
து. (து) ஆலலுங்கா (T(T) alalunga). இவ்வினத்தில் தலை கூம்பியும், இரு தாடைகளில் கூம்பிய பற்களும் உள்ளன. மார்புத் துடுப்பு, அடிப் பகுதியில் உள்ள முதல் இளந் துடுப்பைத் தொடும் அளவுக்கு நீண்டுள்ளது. இவ்வினத்தில் காற்றுப் பை அகலமாகவும், நீளமாகவும் உள்ளது. பக்கவாட்டுக் கோடு முன் புறம் மேல் நோக்கி வளைந்தும், பின் புறம் நீண்டும் உள்ளது. முதுகு இரும்பு நிறத்தையும், வயிறு வெள்ளி நிறத்தையும் பெற்றுள்ளன. இரு பக்கங்களிலும் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. மார்புத் துடுப்புக் கருமையாகவும், மேல் துடுப்பு, வால் துடுப்பு இவை பழுப்பு நிறமாகவும் உள்ளன. பெரும அளவாக 130 செ.மீ. நீளத்தையும் 45 கி.கி. எடையையும் இவ்வினம் கொண்டுள்ளது.
து. (பேராதுன்னஸ்) ஒபிசஸ் சிபி (T.Parathunnus obesus sibi) இவ்வினத்தில் தலையும், கண்ணும் பெரியவையாக உள்ளன. மார்புத் துடுப்பு, இரண்டாம் மேல் துடுப்புத் தொடங்கும் இடம் வரை நீண்டுள்ளது. காற்றுப் பை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. பக்க வாட்டுக் கோடு முன்னால் அலை அலையாக வளைந்துள்ளது. முதுகு நீலங்கலந்த கறுப்பாகவும், கீழ்ப் பகுதி வெள்ளி நிறமாகவும் இருக்கும். இவ்வினம் 240 செ.மீ. நீளத்தையும் 200 கி.கி. எடையையும் கொண்டுள்ளது.
து. (நியோ துன்னஸ்) அல்பாக்ரஸ் (T. Neothunnus albacres). இவ்வினத்தில் காற்றுப் பை குறுகியும், நீண்டும் உள்ளது. உடல் முழுதும் செதில்களும், மார்புப் பகுதியில் பெரிய செதில்களும் காணப்படும். மேலும், ஏனைய இனங்களை விட, இதன் வால் பகுதி நீண்டுள்ளது. மார்புத் துடுப்பு இவ்வினத்திலும், முன்னது போல் நீண்டுள்ளது. இரண்டாம் மேல் துடுப்பும், குதத் துடுப்பும் இளம் மீன்களில் மிகவும் நீண்டுள்ளன. முதுகுப் பகுதி கருமையான நிறத்தையும், வயிற்றுப் பகுதி மெல்லிய சாம்பல் நிறக் கோணல் கோடுகளையும், வரிசையான வெள்ளி நிறப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். மார்புத் துடுப்பு பச்சை கலந்த மஞ்சளையும், பிற துடுப்பு இளந் துடுப்பு ஆகியன மஞ்சள் நிறத்தையும் கொண்டுள்ளன. ஏறத்தாழ 170 செ.மீ நீளத்தையும், 70 கி.கி. எடையையும் இவ்வினம் கொண்டுள்ளது.
து. (கிஷினோயல்லா) டோங்கால் (T. Kishinoella tonggo). இவ்வினத்திற்குக் காற்றுப் பை இல்லை. உடலின் அகலத்தை விடத் தலையின் நீளம் மிகுதி. வால் கோணலாக உள்ளது. தாடைகளில் பெரிய கூம்பிய பற்கள் உள்ளன. பக்கவாட்டுக் கோடு முன்னால் அலை அலையாக வளைந்தும், பின்னால் தொடர்ச்சியாக நீண்டும் இருக்கும். மேற்பகுதி நீலம் கலந்த சாம்பல் நிறத்தையும், அடிப் பகுதி வெள்ளி நிறத்தையும், வரிசையாக அமைந்துள்ள நிறமற்ற புள்ளிகளையும் கொண்டுள்ளன. துடுப்புகள் மஞ்சள் நிறத்தையும், சாம்பல் நிற ஓரங்களையும் கொண்டுள்ளன. இவ்வினம் 100 செ.மீ. நீளம் இருக்கும். —இரா. சந்தானம் நூலோதி. J.R. Norman, A History of Fishes, Ernest Benn Ltd., London, 1963.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 711)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wt6p55mx/
தமிழ்“சூறை மீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wt6p55mx/APA
Oliyon Research. (2026). சூறை மீன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wt6p55mx/MLA
"சூறை மீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wt6p55mx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment