அறுபது வயதை அடையும் போது, ஆண் பெண் இரு பாலாருக்கும் இரு செவிகளிலும் கேட்கும் திறன் குறைவது இயல்பு. இது பரம்பரையாகவும் வரலாம். முதியோர் மிகு ஓசையால் பாதிக்கப் பட்டு, விரைவில் செவிடாகி விடுவர். உள் செவிக்குக் குருதி ஓட்டம் குறைவதால், காக்ளியாவின் அடிச் சுருள் திசு, மயிர்க் கால் நரம்பு முனை ஆகியவை நசிந்து விடுகின்றன. அடிப்படைச் சவ்வும் விறைப்புக் குறைந்து விடுகிறது. இதனால், மின்னழுத்தம் மாறு படுகிறது. நரம்புச் செவிட்டு நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் அதிர்வுகள் பாதிக்கப் படுவதால், மணி ஓசை, பறவைகளின் ஒலி, கைக்கடிகார ஒலி ஆகியவை கேளா. செவிடு மிகுந்து கொண்டே போவதால், தொழில் செய்வதிலும், பிறரோடு பழகுவதிலும் துன்பம் இருக்கும். இவர்களுடன் மென்மையாக, மெதுவாகப் பேச வேண்டும். உரக்கப் பேசினால், அவர்களுக்குச் சரியாகக் கேட்காததுடன், பேசுபவர்களிடம் வெறுப்பும் வளரும். —டி. எம். பரமேஸ்வரன்