இது சிலேட்டுமப் படலம் (mucous membrane) என்றும் குறிப்பிடப்படும். உடலின் பரப்புடன் தொடர்பு கொள்ளும் அனைத்து உறுப்புகளையும், பாதைகளையும் போர்த்தியிருக்கும் படலத்தைச் சீதப் படலம் என்பர். சீதப் படலத்தில் முக்கியமாக மேலணி அடுக்கு ஒன்றும், அதைத் தாங்கிக் கொண்டிருக்கும் லேமினா புரோப்ரியா (lamina propria) எனப்படும் இணைப்புத் திசுவும் காணப்படும். சில சமயங்களில், இணைப்புத் திசுவில் தசைச் சிலேட்டுமம் (muscularis mucosa) எனப்படும் தசை இழையும் காணப்படலாம். சீதப் படலம், அதன் பரப்பில் கோழையைச் சுரக்கவும் செய்யலாம்; சுரக்காமலும் இருக்கலாம். பிறவி ஊனம், நுண்ணுயிர்ப் பாதிப்பு, தோல் நோய், புற்றுக் கட்டி போன்றவை சீதப் படலத்தைத் தாக்கலாம். எண்ணிக்கையில் மிகுந்த மஞ்சளும், வெள்ளையும் கலந்த தடிப்புகள், உதடு மற்றும் கன்னப் பரப்புச் சிலேட்டுமத்தில் காணப்படுவது, ஃபார்டைஸ் நோய் எனப்படும். இவற்றிற்கு மருத்துவம் தேவையில்லை. புவியியல் நாக்கு எனப்படும் நோய் நிலை, குழந்தைகளிலும், இளம் வயதினரிடமும் காணப்படும். நன்கு வரையறுக்கப்பட்ட மெல்லிய செந்நிறப் படைக் கட்டிகள் நாக்கின் சீதப் படலத்தில் காணப்படுகின்றன. இந்நிலைக்கும் மருத்துவம் தேவையில்லை. உதடு, வாயின் ஓரக் கோணங்கள் ஆகியவற்றின் அழற்சியும், குழந்தைகளில் காணப்படும் காண்டிடா காளானும் இதில் பங்கு கொள்கின்றன. இதற்குப் பெட்ரோலாடம் களிம்பும், காளான் எதிர் மருந்தும், கார்டிகோஸ்டிராய்டு மருந்துகளும் பயனளிக்கின்றன. சீதத் தேக்க நீர்ப் பைகளும், வாயின் சீதப் படலத்தில் காணப்படுகின்றன. இவை உதடு, நாக்கு, அண்ணம், வாய் ஆகியவற்றின் சீதப் படலத்திலும் காணப்படலாம். அளவில் பெரிதாகி விட்டால், அறுவை தேவைப்படலாம். வாய்க் கொப்புளங்களும், உதடு, வாய், அண்ணம் ஆகியவற்றின் சீதப் படலத்தில் தோன்றுகின்றன. கார்டிகோஸ்டீராய்டு, ஓராபேஸ், சைலோகைய்ன் போன்றவை பயனளிக்கலாம், —சாரதா கதிரேசன் நூலோதி. S.L Moschella, Dermatology, Vol I and II, W.B. Saunders Co., Philadelphia, 1975; Richard S.Shell, Clinical Anatomy for Medical Students, Third Edition, Little Brown and Co., Boston, 1986.