நூல் புழுச் சூழலியல்
nūl puḻuc cūḻaliyal
நூல் புழுக்கள் மெல்லியவாகவும்,மிக நுண்ணியவாகவும், நூலிழை போல இரு நுனிப் பகுதிகள் குறுகியும் காணப் படும்.
நூல் புழுக்கள் மெல்லியவாகவும்,மிக நுண்ணியவாகவும், நூலிழை போல இரு நுனிப் பகுதிகள் குறுகியும் காணப் படும். நூல் என்பதைக் குறிக்கும் நீமா (nema) என்னும் கிரேக்க சொல்லைத் தழுவியே, நூற்புழுக்கள் (nematodes) என்று பெயர் ஏற்பட்டது. பாம்பு போல நெளிந்து செல்லும் இவை செயல்படவும், உயிர் வாழவும் நூற்புழுக்களுக்குச் சிறிதளவாவது நீர் இருக்க வேண்டும். நூல் புழுக்கள், உப்பு நீர்க் கடலில் இருக்கக் கூடியவை, மனிதரையும், விலங்குகளையும் பாதிக்கக் கூடியவை, தாவரங்களைப் பாதிக்கக் கூடியவை, முக்கிய தாவரங்களில் உயிர் வாழ்பவை எனப் பிரித்தறியலாம்.
தாவர நூல் புழுக்கள் மிக நுண்ணியவை; இவை செடிகளின் வேரின் திசுக்களிலும், வேர் மண்டலத்திலும் உள்ளமையால், இந்தச் சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்கள் இந்நூல் புழுக்களைப் பாதிக்கும். நூல் புழுக்களுக்கும், அவற்றிற்கு உணவாக அமையும் தாவரங்களுக்கும் நெருங்கிய பிணைப்பு உள்ளது. தாவரங்களை அவை விளையும் நிலத்தின் தன்மை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலை ஆகியவை பாதிக்கின்றன. தாவர நூல் புழுக்களைப் பொறுத்த வரை, அவை தங்கி வாழும் செடி, அதன் சுற்றுப் புறம், அதில் ஏற்படும் மாறுதல்கள், அதனால் இந்நூல் புழுக்களுக்கு உண்டாகும் பாதிப்பு முதலியவற்றை விளக்குவதே அதன் சூழலியல் (ecology) ஆகும்.
சூழலியல், மண்ணின் வகை, அதன் தன்மை, வெப்பம், ஈரம், காற்று, மண்துகள்களுக்கு இடையேயுள்ள இடைவெளி, அவற்றிலுள்ள கரிமப் பொருள்களின் அளவு, காற்றின் ஈரப் பசை, மழை முதலியன அடங்கும். மண், சிறிய மண் துகள்களில் ஆயிரக் கணக்கான நூல் புழுக்கள் இருக்கும். எனினும், நூற்புழுக்களின் எண்ணிக்கையும், வகையும், மண்ணின் மாதிரியையும், தன்மையையும் பொறுத்தே இருக்கும். மணற் பாங்கானது, சதுப்பு, வயல் மண், சிறிதளவு மணல் கலந்தது, படுகை மண் என நிலத்தைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். இந்த மண் கண்டங்களில், மண் துகள்களின் அளவு பெரியதாகவோ, சிறியதாகவோ, நுண்ணியதாகவோ இருக்கும். இதைப் பொறுத்து, அந்நிலத்தில் மண் துகள்களின் இடைவெளியும், அதில் தேங்கக் கூடிய நீரின் அளவும் இருக்கும்.மண் துகள்களைச் சுற்றியுள்ள நீர் மண்ணின் தன்மையைப் பொறுத்தது. பருமனான தன்மையுள்ள மண்ணில், மணல் மிகுந்திருக்கும். பருமன் மிகுந்த மண்ணில், இடைவெளி கூடியிருக்கும். அதில் நீர் தேங்காமல், வடிந்து விடும். இத்தகைய மண்ணில் வேர் முடிச்சு, நூற்புழு முதலியன மிகுந்திருக்கும். நுண்ணிய மண் துகள்கள் மிகுந்துள்ள மண்ணில், மணல் மிகக் குறைவாக இருக்கும். இடைவெளியும் குறுகியிருக்கும். நீர் களிமண்ணால் ஈர்க்கப் பட்டிருக்கும். உடனடியாக வடியாமல் நீர் தேங்கி நிற்கும். இதில் வேர் அழுகல் நோயுண்டாக்கும் மிக நுண்ணிய உரு அமைப்புக் கொண்ட நூற்புழுக்கள் மிகுந்திருக்கும். எலுமிச்சை நூற்புழு போன்றவை இரு வகை மண்ணிலும் இருக்கும்.
தட்ப வெப்ப நிலை. மழை, வெப்பம் ஆகியவை தாவர வளர்ச்சிக்கும், நூல்புழுக்களுக்கும் இன்றியமையாதவை. குறிப்பாக இலை, தண்டு, பூ முதலியவற்றைத் தாக்கும் நூற்புழுக்களின் எண்ணிக்கை, தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு மாறு படும். காற்றின் ஈரப் பசை மிகுந்தால், இலையைப் பாதிக்கும் நெல்லின் வெண் இலை நுனி நூல் புழு நன்கு செயல் பட்டுப் பரவும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மண்ணின் வெப்பம். ஈரப் பசையைப் போலவே, மண்ணின் வெப்ப நிலையும் நூற்புழுக்களின் எண்ணிக்கை, செயல், இனப் பெருக்கம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் தன்மை, வாழ்நாள் முதலியவற்றை அறுதியிடும் இன்றியமையாக் கூறாகிறது. குறைந்த, மிகு வெப்ப நிலைகளான முறையே 5–15°C, 30–40°C ஆகியன நூல் புழுக்களுக்கு ஏற்றவையல்ல. மேலும், அவை இவ்வெப்ப நிலையில் செயலிழக்கின்றன. இவ்விரு வெப்ப நிலை வரம்பிற்கும் அப்பாற்பட்ட வெப்பம் நூற்புழுக்களுக்கு அழிவு விளைவிக்கும். மித வெப்ப நிலையான 15–30°C நூல் புழுக்களுக்கு ஏற்றவாறுள்ளது.
மண்ணின் ஈரம். மழையாலோ, நீர்ப் பாசனத்தாலோ, மண்ணில் அவ்வப்போது ஈரப் பதம் மாறு படும். இது நூல் புழுக்களின் எண்ணிக்கையைப் பெரிதும் பாதிக்கும் காரணியாகிறது. மண்ணின் வறட்சி, நூல் புழுவின் செயல்களை மட்டுப் படுத்துகிறது. ஆனால், முட்டைகள் மிகுதியாகப் பாதிக்கப் படுவதில்லை. வயல்களில் விளைவிக்கும் தாவரங்களான நெல், வாழை முதலியவற்றைத் தாக்கும் நெல்லின் வேர் அழுகல் நூல் புழு, வாழையின் வேர் அழுகல் நூல் புழு போன்றவை மட்டும் இந்நிலையில் வாழ இயலும். ஏறத்தாழ 40–60% ஈரப் பசை உள்ள மண்ணில் நூல் புழுக்கள் நன்கு செயல் படும்.
உணவு. நூல் புழு உறிஞ்சியுண்ணக் கூடிய சாறு, அது தங்கியிருக்கும் செடியின் வேர், தண்டு, இலை முதலிய பகுதிகளிலிருந்தே கிடைக்கிறது. மண்ணிலுள்ள நூல் புழு, வேரின் நுனிப் பகுதியைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சுகிறது. இப்பகுதியில் செல் சுவர்கள் (Cell walls) மென்மையாக இருக்கும். செல்களிலும், வேதிப் பொருள்கள் செறிந்திருக்கும். செடியின் திசுக்கள், அவற்றின் உள்ளிருக்கும் நூல் புழுக்களுக்குப் பாதுகாப்பாக அமைகின்றன. மேலும், செடியின் சாற்றின் தன்மையும், அளவும் நூல் புழுவின் வளர்ச்சிக்கும், இனப் பெருக்கத்திற்கும் வரையறையாகும்.
நூல் புழுக்களுக்கு ஏற்ற தாவர இனத்தில், அவை நன்கு வளர்ந்து, பல்கிப் பெருகும். வேண்டப் படாத வேறு தாவர இனமாயிருந்தால், நூல் புழுக்கள் துளைக்க இயலாமல், வேர்ச் செல்லின் சுவர்கள் வேதி மாற்றமடையும் அல்லது துளைத்தாலும் அவை முழு வளர்ச்சியடையாமல் போகலாம். சில சமயம் வளர்ச்சி நிலையடைந்தாலும், சரி வர முட்டைகள் இடாமல் போகும். வேர் முடிச்சு, முட்டைக் கூடு, எலுமிச்சை நூல் புழுக்கள் உறிஞ்ச, சிறப்புச் செல்கள் ஏற்படும். இவை திசுக்களிலிருந்து நூல் புழுக்களுக்குச் செல்லும் சாற்றையும், அவற்றின் இணைப்பையும் சம நிலையில் வைத்திருக்கும்.
வேர் மண்டலம். வேரின் சாறு, நூல் புழுக்களுக்கு உணவாகிறது. இது மேலும் வேரின் சுற்றுப்புறத்தின் வேதிப் பொருள்களையும், ஈரத்தையும் குறைக்கும். ஆக்சிஜனைக் குறைத்துக் கார்பன் டைஆக்சைடை மிகுதியாக்கும். வேரிலிருந்து வரும் வேதிப் பொருள்கள் அடங்கிய கசிவும், சுற்றுப் புறத்தின் தன்மையை மாற்றும். உருளைக் கிழங்கு முட்டைக் கூடு நூல் புழுக்களின் முட்டைகளை, உருளைக் கிழங்கு வேரிலிருந்து வெளி வரும் கசிவு பொரியச் செய்யும். இக்கசிவு, முட்டையிலிருந்து பொரிந்து வெளி வந்த புழுக்கள், வேரின் இடமறிந்து செல்லவும் உதவும். நூல் புழுக்களுக்கு வேண்டாத தாவர வகைகளின் வேர்க் கசிவு, அவற்றின் முட்டைகள் பொரியாமல் இருக்கச் செய்யும்.
நில நீர்க் கரைசல். கார அமிலத் தன்மை, கரிமப் பொருள், உரம், பூச்சி, பூச்சி கொல்லி, ஏனைய நச்சுத் தன்மை பொருந்திய பொருள்கள் ஆகியவை அடங்கியதே நில நீர்க் கரைசல். இதில் கரைந்திருக்கும் வேதிப் பொருள்கள் நூல் புழுக்களுக்கு ஏற்றவாறோ, எதிர்ப்பாகவோ அமைகின்றன. ஏனெனில், இதிலிருந்தே தனக்கு வேண்டிய சில வகை உணவை நூல் புழு எடுத்துக் கொள்கிறது. நூல் புழுக்களின் முட்டை பொரிதல், அவற்றின் இளவுயிரிப் பருவம் வாழுதல் முதலியனவும் இக்கரைசலின் தன்மையைப் பொறுத்து அமையும். சில வகைச் செடிகளின் வேரிலிருந்து கசியும் வேதிப் பொருள்கள் பெரிதும் வேர் மண்டலத்தைச் சூழ்ந்திருக்கும். இந்தக் கசிவு, நீர்க் கரைசலில் சேர்வதால், வேர் மண்டலத்தில் இருக்கும் கசிவின் தன்மைக்கேற்ப நூல் புழு பாதிக்கப் படும் அல்லது நன்கு செயல் படும்.
கரிம உரங்கள். பொதுவாகக் கரிம உரங்கள், செடிகளுக்குத் தழைச் சத்தை மிகுதியாகக் கிடைக்கச் செய்து, செழிப்பாக வளர வழி வகுக்கும். இந்த உரங்கள் மட்கும் போது வெளிப் படும் சில வேதிப் பொருள்களும், கரிம அமிலங்களும் நூல் புழுக்களை ஓரளவிற்குப் பாதிக்கின்றன. இந்த உரங்களின் ஊட்டத்தால், முன்னரே நிலத்தில் உள்ள நூல் புழுக்களைப் பாதித்து அழிக்கும் பூசணங்கள், ஏனைய நுண்ணுயிரிகள், எதிரி நூல் புழுக்கள் முதலியன பெருகி, தாவர நூல் புழுக்களை ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கின்றன.
நூல் புழுக்களின் சூழலியல் அவற்றின் இனத்திற்குத் தக்கவாறு மாறு பட்டிருக்கும். அவற்றின் செயலையும், வாழ்க்கையும் அறியச் சூழலியல் இன்றியமையாதது. தாவர நூல் புழுக்கள், சராசரியாக 10% அழிவை ஏற்படுத்தும். சில வகை முக்கிய நூல் புழுக்கள் விளைச்சலை முற்றிலும் பாதித்து விடுகின்றன. —சிவகாமி வடிவேல் துணை நூல். J.F. Southey, Plant Nematology, HMS Publication, London, 1978.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 140)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wqr5pb3g/
தமிழ்“நூல் புழுச் சூழலியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wqr5pb3g/APA
Oliyon Research. (2026). நூல் புழுச் சூழலியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wqr5pb3g/MLA
"நூல் புழுச் சூழலியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wqr5pb3g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment